பெரியோர்கள் உதாரணம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பெரிய ஆசார்ய ஸ்தானத்திலிருந்தவர்களில் கூடத் தங்கள் காரியத்தை சிஷ்யர்களிடம் விடாமல் தாங்களே செய்துகொண்டவர்களுண்டு. வேதாந்த தேசிகன் ஒரு பெரிய ஸம்பிரதாயத்துக்கே மூல புருஷராயிருந்தபோதிலும் தம்முடைய ஆஹாரத்துக்குத் தாமேதான் உஞ்சவ்ருத்தி செய்திருக்கிறார். திருவையாற்றில் தியாகராஜ ஸ்வாமிகளும் இப்படிப் பண்ணியிருக்கிறார். இவர்களுக்கு எத்தனையோ பேர் ஸத்காரம், ராஜோபசாரமே பண்ணக் காத்துக் கொண்டிருப்பார்கள்! Mahomet [முஹமது நபி] கூட religious head ஆக [மதத் தலைவராக] மட்டுமின்றி temporal power [ஆட்சியதிகாரம்] பூராவும் வைத்துக்கொண்டுடிருந்தாலும் தம் கார்யம் முழுவதையும் தாமே பண்ணிக்கொண்டார் என்கிறார்கள்.

நாமதேவர், கோராகும்பர், திருநீலகண்ட நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் போன்ற மஹா பாகவதர்களும் சிவனடியார்களும் தங்கள் குடும்ப ட்யூட்டிக்காக தையல்வேலை, குசவுவேலை, ஏகாலித் தொழில் இவைகளை விடாமலே பண்ணி வந்திருக்கிறார்கள்.

சிவாஜி தன் ராஜ்யத்தையே ஸமர்த்த ராமதாஸின் காலடியில் குருதக்ஷிணையாகப் போட்டு விட்டு, அவர் பெயரில்தான் ராஜ்யபாரம் பண்ணினான். அப்படியிருந்தும் ராமதாஸ் ‘மாதுகரி’ பிக்ஷைதான் வைத்துக் கொண்டிந்தார்*

தங்கள் பொருட்டுப் பிறத்தியாரை ச்ரமப்படுத்தக் கூடாது என்ற உசந்த கொள்கைதான் இதற்குக் காரணம்.

ஆகவே வெளியிலே ஸோஷல் ஸர்வீஸ் செய்பவனாகப் பேர் வாங்கிவிட்டு, வீட்டிலே இவன் மற்றவர்களின் ஸர்வீஸை வாங்கிக்கொள்கிறானென்றால் அது ‘ஹம்பக்’ தான்.

ஆனால் வீட்டுக் கார்யம், சொந்தக் கார்யம் என்பதும் சாஸ்த்ர ஸம்மதமானதாக இருக்க வேண்டும். இப்போது ஒவ்வொருத்தனுக்கும், அவனுடைய குடும்பத்துக்காரர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் பேராசைகளையெல்லாம் பூர்த்தி செய்வதை ‘ட்யூட்டி’ என்று சொல்ல முடியாததுதான். இத்தனையையும் கவனித்து விட்டுத்தான் ஒருத்தன் பொதுத்தொண்டுக்குப் போகலாம் என்றால் பொதுத்தொண்டே நடக்காது. வீட்டு மநுஷ்யர்கள் அப்படி சொல்வதைக் கேட்கவேண்டுமென்பதில்லை.


* ‘மதுகரம்’ என்றால் வண்டு. வண்டு பல புஷ்பங்களிலிருநது துளித்துளியாகத் தேன் எடுத்துக்கொள்வதுபோல் எந்த ஒரு கிருஹஸ்தருக்கும் அதிக ச்ரமம் தராமல் ஒரு குடும்பத்திலிருந்து ஒரு கவளம் வீதம் பல குடும்பங்களில் பிக்ஷை வாங்கி உண்பதே ‘மாதுகரி பிக்ஷை’. ஐந்தே குடும்பங்களில் மாதுகரி பிக்ஷை பெற வேண்டும் என்றும் நியமமுண்டு.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is சாஸ்திரக் கட்டளை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  மாதா-பிதா விஷயம்
Next