கடமை தவறுவதற்குத் தண்டனை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இதற்கெல்லாம் basic -ஆக ஒரு ஞானம் இருந்துவிட்டால் போதும். அதாவது நம்முடைய லோக ஸேவையால்தான் லோகம் நடக்கிறது என்ற பிரமை ஒருகாலும் இருக்கக்கூடாது. மரம் வைத்தவன் தண்ணீர் விடுகிறான். லோகத்தைப் பண்ணின ஒருத்தன் இருக்கிறானே அவனே அதை ரக்ஷித்துவிட்டுப் போவான். அதற்கு நாம் ஒரு கருவிதான். நம்முடைய பாப கர்மா கழியவே பரோபகாரமே தவிர நாமில்லாவிட்டால் அந்த உபகாரம் லோகத்துக்குக் கிடைக்காமல் போய்விடாது என்ற ஞானம் இருந்தால் அளவோடு நிற்போம். ஜீவனத்துக்கு அவச்யமான சொந்தக் கார்யங்கள், குடும்பக் கடமைகள் இவற்றைப் பண்ணிக் கொள்வதிலும் கர்மநாசம், சித்த சுத்தி ஏற்படத்தான் செய்யும். ஈஸ்வராநுக்ரஹத்தில் இப்படிப்பட்ட பொறுப்புகள் அதிகமில்லாதவர்கள் நிரம்பப் பரோபகாரப் பணிகளில் ஈடுபட்டே ஆத்மாவைப் பரிசுத்தி பண்ணிக்கொள்ள வேண்டும்; அப்படிப்பட்டவர்களுக்கு இதுவே ட்யூட்டி ஆகிறது. டொமெஸ்டிக் ட்யூட்டிபோல ஸோஷல் ட்யூட்டியும் உண்டுதான். எத்தனை டொமெஸ்டிக் ட்யூட்டி இருந்தாலும், அதைப்பண்ணிவிட்டு, அதைப் பண்ணின அப்புறந்தான் ஸோஷல் ட்யூட்டியும் செய்ய வேண்டும். ரொம்ப அதிகம் குடும்பப்பொறுப்பு இருக்கிற ஒருசிலரைத் தவிர மற்ற எல்லோருக்குமே நியாயமான சொந்தக் கடமைகளைப் பண்ணிவிட்டும் ஸமூஹக் கடமை பண்ண அவகாசம் இருக்கவேசெய்யும். எப்படியானாலும் தன் காரியத்தைப் பிறர் கையில் விட்டுவிட்டும், அகத்து வேலையைக் கவனிக்காமலும் ஊர்க் காரியம் என்று போவதில் பிரயோஜனமில்லை. இப்படிப் போனதில் அந்தப் பையன், வீடு என்றாலே எரிச்சல் படுகிறான் என்றார்கள். இப்படிக் கோபமும் தாபமும்தான் பரோபகாரம் பண்ணினதில் ஒருத்தனுக்கு மிஞ்சினது என்று ஏற்பட்டால் அது சித்த சுத்திக்குப் பதில் சித்த அசுத்திக்குத்தான் வழி பண்ணியிருக்கிறது என்றே ஆகிறது. அதாவது பரோபகாரம் நல்ல பலன் தராதது மட்டுமில்லாமல், விபரீத பலனே உண்டாக்கியிருக்கிறது! சாஸ்த்ர ரீதியான கடமையை விட்டதற்காக இப்படி நல்லதே தண்டனையாக ஆகிறது!

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is உச்சநிலை உதாரணமாகாது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தொண்டு மனத்தின் தன்மை
Next