மற்ற மதங்களுடன் வித்யாஸம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

”ஸங்கம் சரணம் கச்சாமி” என்பதாக புத்தர் பல பேர் சேர்ந்து ஆர்கனைஸேஷனாக மதத்தைக் காப்பாற்றும்படிப் பண்ணினார். கிறிஸ்டியானிடியிலும் mass,congregation என்று எல்லாரும் சேர்ந்துதான் செய்கிறார்கள். மசூதியிலும் இப்படித்தான். இஸ்லாம்காரர்களுக்குள் இருக்கிற ஆர்கனைஸேஷனல் கட்டுப்பாடு சொல்லிமுடியாது. ஸிக்குகள், பார்ஸிக்காரர்கள் மாதிரி எண்ணிக்கையிலே குறைச்சலா யிருக்கிறவர்களைப் பார்த்தாலோ, அங்கேதான் எண்ணிக்கைக்கு எதிர் proportion -ல் ஆர்கனைஸேஷன், கட்டுப்பாடு இன்னும் ஜாஸ்தியாயிருக்கிறது. தங்களுடைய சின்ன ஸமூஹம் சிதறிவிடக்கூடாது என்பதாலேயே அவர்கள் ஸமய ரீதியில் ஸமூஹம் முழுவதும் பிரியாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் படி வைத்து நடத்துகிறார்கள்.

ஹிந்துமதம் தவிர மற்றவை எல்லாமே social based [ஸமூஹத்தை அடிப்படையாகக் கொண்டவை] என்கிறபடிதான் அவற்றின் மத வழிபாடு அமைந்திருக்கிறது. தனியாக அவனவனும் meditate பண்ணுவது (தியானிப்பது) என்பது எந்த மதத்திலும் இல்லாமலில்லை. புத்தமதத்தில் குறிப்பாக இது விசேஷ ஸ்தானம் பெற்றுத்தான் இருக்கிறது. ஆனாலுங்கூட கூட்டுப்பூஜை தவிர வீட்டுப்பூஜை என்று மற்ற மதங்களில் இல்லை. எல்லோரும் சேர்ந்து கூட்டு வழிபாடு, வர்ண-ஆச்ரமங்களால் ஏற்படும் தனித்தனி அநுஷ்டானமில்லாமல் எல்லாருக்கும் ஒரேவிதமான அநுஷ்டானங்கள் என்பவைதான் மற்ற மதங்களில் முக்யமாக இருக்கின்றன.

”மற்றவர்கள் சர்ச்சில், மசூதியில், குருத்வாராவில் கூட்டு வழிபாடு பண்ணுகிறார்களென்றால் நாமும்தானே கோயிலில் சேர்ந்து உத்ஸவாதிகள் பண்ணுகிறோம்?” என்று கேட்கலாம். வாஸ்தவந்தான். ஆனால் அவர்கள் மாஸ், நமாஸ் பண்ணுவது போலக் கோயில்களில் நாம் கூட்டுப் பிரார்த்தனை ஒன்றும் செய்வதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். கோயில்கள்தான் நம் வேத பாரம்பர்யத்துக்கே backbone [முதுகெலும்பு] -ஆக இந்த நாகரித்தைக் காப்பாற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறதென்றாலும், கோயில் மூலமாக நமக்குக் கிடைக்கிற ஈஸ்வர ப்ரஸாதத்தை இன்டிவிஜுவல் அநுஷ்டானத்தால் விருத்தி பண்ணிக் கொள்ளும்படியாகவே நம் மதம் அமைந்திருக்கிறது.

 

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஹிந்து மதமும் தனிமனிதனும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  நமது ஆலய வழிபாட்டின் நோக்கம்
Next