சொந்தப் பணியைச் சொல்லாததேன்? : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆத்ம லாபத்துக்கு உதவாத விஷயம் என்பதால்தான் இதுகளைப் பற்றி நான் சொல்வதில்லை. உபதேசம் செய்கிற எவருமே சொல்வதில்லை. சொல்லாமலே அவனவனும் இவைகளைச் செய்து கொண்டுதானிருக்கிறான். லோகமெல்லாம் நன்றாயிருக்ககணும் என்று பிரார்த்திக்க வேண்டுமென்றுதான் யாரும் உபதேசிப்பார்களே தவிர, ‘நான் நன்றாயிருக்கணும்; என் மநுஷ்யாள் நன்றாயிருக்கணும்’என்று பிரார்த்தித்துக் கொள்ளும்படிச் சொல்வதில்லையே!யாரும் சொல்லிக் கொடுக்காமல் அவனவனும் தானாகவே இப்படித் தன்நலத்தை, தன் குடும்ப நலத்தைப் பிரார்த்தித்தபடிதான் இருக்கிறான். அந்த நலம் ஆத்மாவைப் பொருத்ததாயிருந்தால் இப்படிப்பட்ட பிரார்த்தனை நியாயமானது தான். லௌகிகமாகவும் ஜீவனத்துக்கு அவசியமான அளவுக்கு மட்டும் வேண்டிக்கொண்டால் தப்பில்லைதான். ஆனால் எல்லாரும் இந்த லௌகிக ‘நலம்’என்பதையே ஆத்மாவுக்கு ஹானி உண்டாக்குகிற அளவுக்குப் பிரார்த்திக்கிறார்கள். பிரார்த்திப்பதோடு அதற்கான முயற்சிகளை ஓயாமல் பண்ணியபடி இருக்கிறார்கள். இதிலேயே ஓவராக ஈடுபட்டு பாசத்தினால் தர்மாதர்மங்களைக்கூட மறந்து, தப்பு வழியில் போயும் இம்மாதிரி லௌகிக அபிவிருத்தியிலேயேதான் அநேகமாக எல்லாரும் கண்ணாயிருக்கிறார்கள். இதனாலேயே பரோபகாரத்துக்குப் பொழுதோ, மனஸோ, த்ரவ்யமோ எதுவும் கொடுக்காதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனதால் இப்படிப்பட்டவர்களை ஸ்வய விஷயம், ஸ்வய குடும்ப விஷயம் இவற்றைக் குறைத்துக்கொண்டு ஸமூஹ க்ஷேமத்துக்கானவற்றைக் கவனிக்கும்படித் திருப்ப வேண்டியதுதான் எங்களைப் போன்றவர்களின் கடமையாயிருக்கிறது. ஆனதால், நான் மட்டுமில்லை, ஜனங்களை நல்ல வழியில் திருப்புவதற்குப் பிரயத்தனப்படுகிற பொறுப்பு கொண்டே எவருமே, ”சொந்த விஷயங்களை கவனித்துக்கொள்; வீட்டுக் கார்யங்களை கவனித்துக்கொள்” என்று உபதேசம் பண்ணுவதில்லையென்பது மட்டுமில்லாமல், ”சொந்த விஷயங்களையே கவனித்துக் கொண்டிருந்தால் போதாது. இப்படிப்பட்ட ஆசைகளை, தேவைகளைக் குறைத்துக்கொண்டு, அதனால் லௌகிக உழலலையும் குறைத்துக்கொண்டு, கொஞ்சமாவது ஆத்மாவை கவனித்துக் கொள்ளுங்கள்; அதற்கு வழியாக, ஒரு அங்கமாக ஸமூஹத்தை, லோகத்தை கவனித்துத் தொண்டு செய்யுங்கள்”- என்றே சொல்லும்படியிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is முரணுக்குக் காரணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  என் ஜாக்ரதைக் குறைவு
Next