அம்பிகை அருளும் தீக்ஷைகள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

அம்பாள்தான் ஞானம். ஸத்-சித்-ஆனந்தம் என்று அடிக்கடி கேள்விப்படுகிறோமே, அதில் சித் என்கிற பேரறிவான ஞானம் அம்பிகைதான். சைதன்ய ரூபிணி என்பார்கள். ”சிதேக ரஸ ரூபிணி” என்று [லலிதா] ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. காளஹஸ்தியில் ஞானாம்பாள் என்றே அவள் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள்.

அம்பாள்தான் குரு ரூபத்தில் வருபவள் என்று பெரியவர்கள் அநுபவத்தில் சொல்லியிருக்கிறார்கள். காளிதாஸன் [‘நவரத்ந மாலிகா’வில்] “தேசிக ரூபேண தர்சிதாப்யுதயாம்” என்கிறார். அம்பாள் தன்னுடைய காருண்ய விலாஸத்தை குரு ஸ்வரூபமாக வந்தே காட்டுகிறவள் என்று அர்த்தம். ‘தேசிக’ என்பதும் குரு, ஆசார்ய என்பவை போல நம்மை நல்ல வழிக்கு நடத்திக் கொண்டு போகிறவரைக் குறிக்கும் இன்னொரு வார்த்தை. [வைஷ்ணவர்களில்] வடகடலை ஸம்ப்ரதாயத்துக்கு மூலபுருஷரை வேதாந்த தேசிகர் என்றே சொல்கிறோம். அந்த ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் தேசிகர் என்று ‘ர்’ போடாமல், தேசிகன் என்று ‘ன்’ போட்டே சொல்வார்கள். ரொம்பவும் மரியாதை முற்றி அன்பு மேலிடுகிறபோது ஏகவசனம்தான் வந்துவிடும். பகவானையே ‘நீ’ என்றுதான் சொல்கிறோம்; ‘நீங்கள்’ என்பதில்லை. அப்படி தேசிகரை தேசிகன் என்றே அவரை அநுஸரிப்பவர்கள் பிரேமையினால் சொல்வார்கள். நம் பகவத்பாதாளை அவர் காலத்திலேயே அவருடைய நேர் சிஷ்யரான தோடாகாசார்யார் ஸ்தோத்திரித்தபோது, ”சங்கர தேசிக மே சரணம்” என்றே ஒவ்வொரு அடியிலும் முடித்திருக்கிறார்1.

அம்பாள் தேசிக ரூபத்தில் வந்து ஞானம் தருவதாகச் சொல்லியிருக்கிறது. குறிப்பாக ஸ்பர்ச தீக்ஷை, நயன தீக்ஷை, மானஸ தீக்ஷை ஆகியற்றில் ஒவ்வொன்றையும் அவள் ஒவ்வொரு ரூபத்தில் செய்வதாகச் சொல்வார்கள்.

இங்கே இன்னொன்று சொல்ல வேண்டும். ஸ்பரிச தீக்ஷைக்குக் ‘குக்குட தீக்ஷை’ என்று இன்னொரு பெயர். ‘கோழி தீக்ஷை’ என்று அர்த்தம். நயன தீக்ஷைக்கு ‘மத்ஸ்ய தீக்ஷை’ [மீன் தீக்ஷை] என்றும் பேர். மானஸ தீக்ஷைக்குக் ‘கமட தீக்ஷை’ என்று பேர். ‘கமடம்’ என்றால் ஆமை.

கோழி, மீன், ஆமை என்று தீக்ஷைகளைச் சொல்வது வேடிக்கையாயிருக்கிறது. ஆனால் வேடிக்கைக்குள்ளே தத்வார்த்தம் நிரம்ப இருக்கிறது.

ஒரு தீக்ஷையானது நிஜமான சக்தி வாய்ந்ததாக இருந்தால், சிஷ்யனுக்கு இதுவரை இருந்த அசட்டு வாழ்க்கை அதோடு முடிந்து, அவன் பாரமார்த்திகமாக ஒரு புது வாழ்க்கை ஆரம்பித்துவிடுவான். அதாவது அது உசந்ததாகப் புனர்ஜன்மா எடுக்கிற மாதிரியாகும். காயத்ரீ தீக்ஷையானவுடன் இப்படித்தான் ஒருவன் பிராம்மணனாக இரண்டாம் ஜன்மா எடுக்கிறானென்ற அர்த்தத்தில், அவனுக்கு ‘த்விஜன்’ என்றும், ‘இருபிறப்பாளன்’ என்றும் பெயர் ஏற்பட்டிருக்கிறது.

இப்படி தீக்ஷைக்கு முன்னாலே ஒரு ஜன்மா, அப்புறம் முற்றிலும் வேறான இன்னொரு ஜன்மா என்று சொல்வது அவ்வளவு ஸரியில்லை என்கிற அபிப்ராயத்தில் இன்னொரு விதமாகவும் சொல்கிறதுண்டு. இதன்படி, இப்போது ஒருத்தன் எடுத்திருக்கிற ஜன்மாவிலே அவன் அசட்டு அஞ்ஞான ஸ்திதியிலிருந்தாலும் இப்போதுங்கூட உள்ளுக்குள்ளே பிரம்மத்தோடு பேதமில்லாத ஆத்மாவாகத்தானிருக்கிறான். ஆனால் இப்போது இது இவனுக்குத் தெரியாமல் ஒரு கருவை அது முட்டையாயிருக்கும்போது ஓடு மறைக்கிறது போல, அஞ்ஞான ஓடு மூடி மறைத்திருக்கிறது. குரு என்பவர் தீக்ஷை என்பதன் மூலம், தாய்ப் பறவை முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பது போல, இவனுடைய அஞ்ஞான ஓடு பிளந்து, இவன் தன் ஸத்ய நிலையை உணர்ந்த பக்ஷியாகப் பிறக்கச் செய்கிறார் என்பார்கள். அதாவது இரண்டு வெவ்வேறு ஜன்மாக்கள் இல்லை; தீக்ஷைக்கு முன்னே முட்டைக்கரு போல முடங்கிக் கிடந்த நிலை; அதற்குப் பிற்பாடு அதுவே ஸ்வதந்திரமாகப் பறக்கும் நிலை.

தாய், முட்டையைக் குஞ்சு பொரிப்பதில் மூன்றுவகை சொல்கிறார்கள். இங்கேதான் கோழி, மீன், ஆமை மூன்றும் வருகின்றன. தாய்க்கோழி என்ன செய்கிறது? முட்டையின் மேலேயே உட்கார்ந்து, அதாவது அதன் மேல் தன் ஸ்பரிசம் நன்றாகப் படும்படி அடைகாத்துக் குஞ்சு பொரிக்கிறது. இதுதான் ஸ்பரிச தீக்ஷை — குரு சிஷ்யனைத் தொட்டு அவனுடைய அறியாமை ஓட்டைப் பிளக்கப் பண்ணுவது. குக்குட தீக்ஷை என்ற பெயர் இப்போது புரிகிறதல்லவா? மீன் ஜலத்துக்குள் முட்டை போடுகிறது. பிரவாஹத்தில் மீன் ஒரு இடமாக நிற்காமல் சஞ்சாரம் செய்துகொண்டேயிருக்கும். முட்டையும் ஓடுகிற ஜலத்தில் ஒரு இடத்தில் நிற்காமல் மிதந்துகொண்டே இருக்கும். தாய் மீன் முட்டையின் மேலே உட்கார்ந்து குஞ்சு பொரிப்பதில்லை. பின்னே என்ன செய்கிறது? இதைப்பற்றி பயாலஜி, ஜூவாலஜியில் என்ன சொல்வார்களோ, நம் சாஸ்திரங்களும் காவியங்களும் ஒரு மரபாகச் சொல்லி வருவதை நானும் ஒப்பிக்கிறேன். தாய் மீன் என்ன செய்யுமென்றால், முட்டையைத் தன் கண்ணால் தீக்ஷண்யமாகப் பார்க்குமாம். உடனே முட்டையை உடைத்துக் கொண்டு மீன் குஞ்சு வெளியில் வந்து விடுமாம். குரு கடாக்ஷம் செய்கிற நயன தீக்ஷையை மத்ஸ்ய தீக்ஷை என்பது இதனால்தான். கமட தீக்ஷை, அதாவது ஆமை தீக்ஷை என்றேனே அது என்ன? ஜலத்திலே இருந்து தாய் ஆமை கரைக்கு வந்து முட்டையிட்டுவிட்டு, அப்புறம் ஜலத்துக்குள்ளேயே எங்கேயோ போய் விடுமாம். முட்டை ஒரு இடத்தில் கிடக்க, தாயோ எங்கேயோ போயிருக்குமாம். ஆனாலும் அது முட்டை குஞ்சு ரூபமாக நல்லபடி பொரிய வேண்டுமே என்ற சிந்தனையாகவே இருக்குமாம். அதனுடைய அந்தத் தீவிர நினைப்பின் சக்தியிலேயே இங்கே முட்டை வெடித்துக் குஞ்சு வெளியே வந்துவிடுமாம். இதுதான் குரு செய்கிற மானஸ–அல்லது கமட தீக்ஷை. அம்பாள் இந்த மூன்று தீக்ஷைகளை அளிப்பது எப்படி?

அம்பாளுக்கு கண்ணழகை, கடாக்ஷ விசேஷத்தை வைத்து மூன்று பிரஸித்த க்ஷேத்ரங்களில் மூன்று விதமான ரூபங்கள் இருக்கின்றன. காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி என்னும் ரூபங்கள். காஞ்சீபுரத்தில் காமாக்ஷியாகவும், மதுரையில் மீனாக்ஷியாகவும், காசியில் விசாலாக்ஷியாகவும் இருக்கிறாள். மூன்றிலும் கண்ணழகு, கடாக்ஷ விசேஷம் என்று சொன்னாலும் மூன்றிலுமே நயன தீக்ஷை தருகிறாள் என்று சொல்வதில்லை. மீன்தானே நயன தீக்ஷைக்குச் சொன்னது? மீனாக்ஷி என்ற பெயரிலேயே மீன் இருக்கிறதே! இதனால் அவளைத்தான் கடாக்ஷத்தாலேயே ஞான தீக்ஷை தந்துவிடும் குருவாகச் சொல்லியிருக்கிறது. இது மத்ஸ்ய தீக்ஷை. காமாக்ஷி பக்தனை ஸ்பரிசித்து, அவன் தலையிலே பாதத்தை வைத்து ஞானியாக்கிவிடுபவள். ”ஸெளந்தர்யலஹரி” ஸ்தோத்திரிக்கிற மூர்த்தி காமாக்ஷி தான்–கரும்பு வில், புஷ்ப பாணம், பாச அங்குசத்தோடு சதுர்புஜையாக இருக்கிற மூர்த்தி. அதிலே ஒரு ஸ்லோகத்தில்2 ஆசார்யாள் அம்பாளிடம், ”வேதங்கள் உபநிஷத்து என்கிற தங்களுடைய சிரஸிலே தாங்கிக் கொண்டிருக்கிறவையான உன்னுடைய திருவடிகளை என் தலையில்கூட தயையினால் வையம்மா!” என்று பிரார்த்திக்கிறார்.

ச்ரூதீநாம் மூர்தாநோ தததி தவ யௌ சேகரதயா

மமாப்யேதௌ மாத : சிரஸி தயயா தேஹி சரணௌ |

உபநிஷத்துக்கள்தான் வேதாந்தம் என்பது. ஆசார்யாளின் அத்வைதமான ஞானமார்க்கத்துக்கு வேதாந்த ஸம்ப்ரதாயம் என்றே பெயர். அதனால் இங்கே ஆசார்யாள் ஞான குரு ரூபிணியாகவே அம்பாளை பாவித்துத் திருவடி தீக்ஷை வேண்டுகிறார் என்று ஆகிறது. அதற்குக் காமாக்ஷியிடம் ஸ்பர்சமான குக்குடதீக்ஷை கேட்டிருக்கிறார். காசியிலே இருக்கப்பட்ட விசாலாக்ஷி பக்தர்களை அநுக்ரஹ சிந்தையோடு மனஸால் நினைத்தே ஞானம் அளித்துவிடும் கமட தீக்ஷை குருவாயிருப்பவள்.


1ஒரு தேசத்தின் எல்லா இடங்களையும் அறிந்து பிறருக்கு வழிகாட்டுபவருக்கு தேசிகன் எனப் பெயரென்றும், இதுவே உவமையாகு பெயராக ஒரு சாஸ்திரத்தின் எல்லா நுட்பங்களையும் அறிந்து அம்மார்க்கத்தில் பிறருக்கு வழி காட்டியாயிருக்கும் ஆசாரியருக்கும் பொருத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

2”ச்ரூதிநாம் மூர்தாநோ” என்று தொடங்கும் 84-வது ஸ்லோகம். இது குறித்த சில விவரங்கள் ”தெய்வத்தின் குரல்” முதற் பகுதியில் ”ஆசாரியாள் காட்டும் அம்பாள்” என்ற உரையில் காணலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தீ¬க்ஷ
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஒரே நிறைவுக்குப் பல மார்க்கங்கள்
Next