பரோபகாரமே ஒரு ‘கடன்’ ! : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)
இப்போது நான் விசித்ரமாக ஒன்று சொல்லப்போகிறேன். பரோபகாரம் பண்ண வேண்டுமென்பதே நமக்கு உண்டான ஒரு ‘கடன்’தான்! பிதிர்கடன் என்கிறோம். சாஸ்திரத்திலேயே ‘ருண த்ரயம்’ என்று மூன்று கடன்களைச் சொல்லியிருக்கிறது. பிராம்மண ஜன்மா எடுத்தவன் ரிஷிகளிடமும், தேவர்களிடமும், பித்ருக்களிடமும் கடன்பட்டிருக்கிறானென்றும் வேதாத்யனத்தால் ரிஷிக் கடன் தீர்கிறதென்றும், புத்ர ஸந்ததி உண்டுபண்ணுவதால் பிதிர் கடன் தீர்கிறதென்றும் சொல்லியிருக்கிறது. வேத சாஸ்திரங்களிலேயே சொன்ன பஞ்ச மஹா யஜ்ஞங்களில் ‘ந்ரு யஜ்யம்’ என்பதாக மற்ற மனிதர்களுக்குப் பண்ணவேண்டியதும், ‘பூத யஜ்ஞம்’ என்பதாக எல்லா உயிரினங்களுக்குமே பண்ண வேண்டியதும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், மநுஷ்யர்கள் மிருகங்கள் பக்ஷிகள் எல்லாவற்றுக்கும் நாம் ஆற்ற வேண்டிய பரோபகாரத்தையும் ‘கடன்’ என்றே சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நாமாக ஒருத்தனுக்கு தானம் பண்ணாமல் இருக்கலாம். எவனோ கடன் கேட்டால் கொடுக்க மாட்டேன் என்று சொல்லலாம். ”கொடுத்தா வைத்திருக்கிறீர்? என் பணம். கொடுப்பதும் கொடுக்காததும் என் இஷ்டம்” என்று சொல்லலாம். ஆனால் நாம் கடன் பட்டிருக்கும் போது கடன் கொடுத்தவன் திருப்பிக் கேட்டால் இப்படிச் சொல்ல முடியுமா? முடிகிறதோ இல்லையோ எப்பாடு பட்டாவது அவனுக்குக் கொடுத்துத் தீர்க்கத்தானே வேண்டும்? இப்படித்தான் நாம் கடன் பட்டிருப்பவர்களுக்காக வேதம் பஞ்ச மஹா யஜ்ஞங்களை விதித்திருக்கிறது. கடன் என்றால் திருப்பித்தானே ஆகவேண்டும்? ஆகவே இதைச் செய்யமாட்டேன் என்று சொல்ல நமக்கு ‘ரைட்’டே கிடையாது. நம் போன்ற மநுஷ்யர்களுக்கும், பசு பக்ஷிகளுக்கும் உபகாரம் என்ற ரூபத்தில் யஜ்ஞம் செய்து அவற்றைத் திருப்திப்படுத்த வேண்டியது நம் கடமை. ‘கடன்’ என்பதிலிருந்தே ‘கடமை’ என்பது வந்திருக்கிறது. ஈஸ்வரன் இந்தப் பிரபஞ்சத்திலே ஒரு ஜீவனைப் பிறப்பித்து, அந்தப் பிரபஞ்சத்தால் அவன் பலவிதமான ஸெளக்கியங்களை அடைய வேண்டுமென்று வைத்திருக்கிறபோதே அதைச் சேர்ந்த எல்லா வகை ஜீவ இனங்களுக்கும் – பூச்சி பொட்டிலிருந்து ஆரம்பித்து தேவ, ரிஷிகள் வரைக்கும் – தன்னலான தொண்டை அவன் செய்ய வேண்டும் என்று வேதத்தின் மூலம் ஆர்டர் போட்டிருக்கிறான். ஆதலால் இதைக் கடனாக, கடமையாகச் செய்தேயாக வேண்டும். ‘கடனே’ என்று செய்யாமல் அன்பைக் கலந்து, உபகாரத்துக்குப் பாத்திரமாகிற எல்லாரையும் அந்த ஈச்வர ஸ்வரூபாகவே பாவித்து அடக்கத்தோடு பணி செய்ய வேண்டும்.