பிறந்த குலாசாரமே உய்நெறி : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

தெல்லாம் எப்படியானாலும் ஸரி, எந்த இடத்தில் எந்த மதத்தில், கிளை மதத்தில், ஒருவன் பிறந்திருந்தாலும் அந்த இடத்திலிருந்த அந்த மதத்து, கிளை மதத்து, பூர்விகப் பெரியவர்கள் எப்படிப்பட்ட வாழ்முறையை, வாழ்க்கை நெறியை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்களோ, அதுவே தனக்கான ஆசாரம் எனக் கொண்டு பின்பற்றவேண்டும். இப்படி அவனவனும் தன்னுடைய மூதாதைகள் போன வழியில்தான் போக வேண்டும்; இல்லாவிட்டால் அவன் பதிதனாகிவிடுகிறான் என்று சொல்லியிருக்கிறது.

சிகாம் ஸூத்ரம் ச புண்ட்ரம் ச ஸமயாசாரமேவ ச |

பூர்வைராசரித: குர்யாத் அந்யதா பதிதோ பவேத் ||

சிகாம்: சிகை எப்படியிருக்க வேண்டும்? துருக்கர்கள் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். ஸிக்கியர்கள் முடி, தாடி வளர்க்கிறார்கள். கிறிஸ்தவர்கள் க்ராப் பண்ணிக் கொள்கிறார்கள். ஹிந்துக்கள் குடுமி வைத்துக்கொள்வது சாஸ்திரத்தில் மந்த்ர பூர்வமாகச் சொல்லியுள்ள ஒரு சடங்கு. இதிலும் பல வித்யாஸம். சோழியன், நம்பூதிரி, சிதம்பரம் தீக்ஷிதர்கள், மற்றவர்கள் ஆகியோருக்குள் குடுமியை முடிந்துகொள்வதில் வித்யாஸங்கள் இருக்கின்றன. சிலர் ஊர்த்வ சிகை என்பதாக உச்சியில் முடிந்துகொள்கிறார்கள். சிலர் பூர்வ சிகை என்று தலைக்கு முன்பக்கமாக முடிந்து கொள்கிறார்கள். ”இவற்றில் நீ பிறந்த மரபிலே எப்படி சிகை வைத்துக் கொண்டார்களோ அப்படியே நீயும் பண்ணு” என்று சாஸ்திரம் சொல்கிறது.

சிகைக்கு அப்புறம் ‘ஸூத்ரம்’ என்றது பூணூலை அல்ல. ஏனென்றால் பூணூல் விஷயத்தில் அத்தனை குலசாரங்களுக்கும் ஒரே விதிதான். என்னென்ன அநுஷ்டானம் செய்ய வேண்டுமென்று விரிவாக codify செய்து ஆச்வலாயன ஸூத்ரம், ஆபஸ்தம்ப ஸூத்ரம், போதாயன ஸூத்ரம் என்றெல்லாந்தான் வெவ்வேறு பல சாஸ்திரங்கள் இருக்கின்றன. இவற்றில் நாம் பிறந்த குடும்பத்தாருக்கு எது ஸுத்ரமோ அதில் சொல்லியிருப்பவற்றையே எடுத்துக் கொள்ளவேண்டும்.

‘புண்ட்ரம்’ என்று சொன்னது நெற்றிக்கு இட்டுக் கொள்வதை. விபூதி, கோபி சந்தனம், நாமம், கரிப்பொட்டு, இவற்றிலும் வெவ்வேறு வகைகள் என்று இருப்பதில் குலாசாரப்படி இட்டுக்கொள்ள வேண்டும்.

‘ஸமயாசாரம்’ என்பது மதாநுஷ்டானம். ஹிந்து மதத்துக்குள் உள்ள அநேக ஸம்பிரதாயங்களுக்குள் நீ பிறந்திருக்கிற குடும்பம் எதைச் சேர்ந்ததோ அதற்கான ஆசாரத்தையே பின்பற்று. இந்த தேசத்தில், இந்த ஊரில், இந்தக் குடும்பத்தில் நீ பிறந்திருக்கிறாயென்றால் இது தற்செயலாக (accidental-ஆக) நேர்ந்ததில்லை; உன் பூர்வ கர்மாவைப் பார்த்து, அதை அநுபவிக்கும்போதே நீ தர்ம ரீதியாகப் போனால் எதனால் உனக்கு ஆத்மாபிவிருத்தி ஏற்பட முடியும் என்று திட்டம் பண்ணி  ஈஸ்வரனேதான் உன்னை இந்தக் குடும்பத்தில் பிறக்க வைத்திருக்கிறார். அதனால் அதன் ஸமயாசாரத்தையே நீ அநுஷ்டி.

”பூர்வை: ஆசரித: குர்யாத்” என்றால் ”உன்னுடைய பூர்விகர்கள் எப்படிப் பண்ணினார்களோ, அப்படியே நீயும் பண்ணு” என்று அர்த்தம். அதாவது முன்னே சொன்ன சிகை, ஸூத்ரம், புண்ட்ரம், ஸமயாசாரம் எல்லாவற்றிலும் உன் மூதாதைகள் கடைப்பிடித்த ஆசாரங்களையே நீயும் கைக்கொள்ளு என்று அர்த்தம்.

அந்யதா பதிதோ பவேத்

இப்படிச் செய்யாமல், அதாவது தன் குலமுன்னோர் வழக்கைப் பின்பற்றாமல், வேறு மார்க்கத்தில் போனால் வேறுவித வாழ்க்கை முறைகளையும் வெளி அடையாளங்களையும் மேற்கொண்டால், அதாவது தன் மதத்திலிருந்தும் கிளை ஸம்பிரதாயத்திலுருந்தும் வேறொன்றுக்குப் போனால் அப்படிச் செய்கிறவன் பதிதன் ஆகிவிடுவான் என்று சொல்லியிருக்கிறது.

பதனம் என்றால் விழுவது. பதிதன் என்றால் ‘விழுந்தவன்’ என்று அர்த்தம். அதாவது ஸன்மார்க்கத்தில் நடந்து போகாமல், அதோகதியில் விழுந்து விட்டவன் என்று அர்த்தம். பாதிவ்ரத்யத்தில் (கற்பு நெறியில்) தப்பாகப் போனவர்களைப் பதிதை என்பார்கள். அதைத்தான் சறுக்கிக்கொண்டு விழுந்தவள் என்ற அர்த்தத்தில் ‘சறுக்கி’, ‘சிறுக்கி’ என்பது. ”வழுக்கி விழுந்தவர்கள்” என்று நவீன எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். இவள் புருஷனுக்கு த்ரஹோம் செய்கிற மாதிரி ஈஸ்வரனுக்கு, பரமபுருஷனுக்கு த்ரோஹம் செய்து கீழ்லோகத்துக்கும், இப்போதைவிட ரொம்ப ஹீன ஜன்மாவுக்கும் விழுந்துவிடுகிறவன்தான் பதிதன். பூர்விகர்களின் ஆசாரப்படி செய்யாதவன் இப்படிப்பட்ட பதிதன் ஆகிவிடுகிறான். லௌகிகத்திலும் பல தினுஸில் கஷ்டப்பட்டுக்கொண்டு, ஆத்மாவையும் உசத்திக்கொள்ள முடியாத கஷ்ட ஜீவனமாகவே அவனுடைய வாழ்க்கை இருக்கும்.

பகவான் நம்மை ஏதோ ஒரு இடத்தில் ஒரு ஸமூஹ தர்மத்தில், குலாசாரத்தில் பிறப்பித்திருக்கிறான். என்ன அர்த்தம்? புருஷனை அநுஸரித்துப் பத்தினி கடைத்தேற வேண்டுமென்பதுபோல், ஜீவன் இவ்வாறு தனக்குப் பிறப்பால் எந்த சாஸ்திரமும் ஸம்பிரதாயமும் ஏற்பட்டிருக்கிறதோ அதை அநுஸரித்து ச்ரேயஸ் அடைய வேண்டுமென்றுதான் அர்த்தம். ”மாட்டேன்; இந்த ஆசாரப்படி செய்ய முடியாது” என்றால் அது பதியைத் திரஸ்காரம் பண்ணுவது போன்ற பெரிய தோஷந்தான். ”இந்த ஸமயாசாரத்தை விட்டு இன்னொன்றுக்குப் போவேன்; வேறே மதத்தில் சேருவேன்” என்றால் இன்னம் தப்பு. அது பதியை விட்டு விட்டுப் பரபுருஷனிடம் போகிறது போல, அதனால்தான் ”பதிதோ பவேத்” என்றது.

இப்படி ஆகாமல் தப்புவதுதான் நமக்கு முக்கியம். சீர்திருத்தவாதி ஏதோ இந்த லோகத்துக்கு, இப்போது நடத்துகிற வாழ்க்கை உயர்வுக்கானவற்றை மட்டும் பார்த்து மதுரமாகச் சொல்கிறாரென்பதால் அதன்படிச் செய்து நரக விஷத்தில் போய் விழக்கூடாது. ஆசாரம் ஒருவனை விழாமல் காப்பது மட்டுமில்லை; அவனை இப்போதைய ஸ்திதியிலிருந்து இன்னமும் தூக்கிவிட்டு ஈஸ்வர ஸந்நிதானத்தில் கொண்டு நிறுத்திவிடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is வஜ்ரம் பாய்ந்த விருக்ஷம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அநுபவ கனம்
Next