ரிஃபார்ம், ரிஃபார்ம் என்று சொல்வதெல்லாம் கடைசியில் அவரவரும் மனஸ் போனபடி, ஒரு டிஸிப்ளினும் இல்லாமலிருக்கலாம் என்று அவிழ்த்து விடுவதில்தான் முடிந்திருக்கிறது. ரிஃபார்ம்களை ஆரம்பித்துவைத்திருக்கிற எல்லா லீடர்களையும் ஒழுங்கு தப்பினவர்கள் என்று சொல்வதற்கில்லைதான். சாஸ்த்ர, ஸம்ப்ரதாய விதிகளாகிற ஒழுங்குகளில் பலதை இவர்களும் விட்டவர்கள்தான் என்பதால் இவர்களை ஸநாதன தர்ம பீடங்களான மட ஸ்தாபனங்களிலிருக்கிற நாங்கள் ஒப்புக் கொள்ளத்தான் இல்லை. என்றாலும் இவர்கள் personal life–ல் [தனி வாழ்க்கையில்] ஸத்யம், நேர்மை, ஒழுக்கம், த்யாகம், அன்பு போன்ற பலவற்றைக் கடைப்பிடித்தவர்கள் என்பதை ஆக்ஷேபிப்பதற்கில்லை. ஓரளவுக்குப் படிப்பு, விஷயஞானம் எல்லாம் உள்ளவர்களாகவும், ஜனங்களை நல்லதில் கொண்டு போகவேண்டும் என்பதில் நிஜமான அக்கரை கொண்டவர்களாகவுமே இந்தச் சீர்திருத்தத் தலைவர்களில் பலர் இருந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். ஆனாலும் இவர்கள் பண்ணுகிற பெரிய தப்பு என்னவென்றால் தங்கள் புத்திக்கு ஸரியாகத் தோன்றுவது தான் ஸரி, பாக்கி எல்லாம் தப்பு என்று நினைப்பதுதான். தாங்கள் சுத்தர்கள்தான், விஷயம் தெரிந்தவர்கள்தான் என்றாலும் தர்ம சாஸ்திரங்களை வேத வழிப்பிரகாரம் பண்ணிவைத்த ரிஷிகளும், மநு முதலிய பெரியவர்களும் தங்களைவிடவும் எவ்வளவோ சுத்தர்கள், எவ்வளவோ விஷயம் தெரிந்தவர்கள் என்று உணர்கிற மரியாதை இவர்களுக்கு இல்லை. இன்னொன்று, ‘அத்ருஷ்ட பலன்’ என்பதாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறதை நம்பாமல் வெள்ளைக்காரர்கள் எண்ணப்போக்குப்படி இவர்களும் practical result என்று உடனுக்குடனே லோகத்தில் வெளிப்படையாகத் தெரியும் பலன்களை மட்டுமே கருதிக் கார்யம் செய்வதுதான். யதார்த்தத்துக்கு மேல், யதார்த்தத்துக்குப் பிடிபடாத தெய்வ சக்தி ஒன்று இருக்கிறது. அது அப்போதைக்கப்போது கண்ணுக்குத் தெரியும்படியாக மட்டும் ரிஸல்டைக் காட்டிவிடுவதில்லை. நம் கார்யங்கள், எண்ணங்கள் இவற்றின் பலன் உடனே இங்கேயே தெரியாமல், ஏதோ காலத்தில், ஏதோ ஜன்மாந்தரத்தில், ஏதோ லோகாந்தரத்தில்கூட விளையும் படியாகத்தான் விஸ்தாரமான அளவிலே லீலை பண்ணிக் கொண்டிருக்கிறது. இப்படி உடனுக்குடனே பலன் தெரியாமல் எப்போதோ விளைய இருப்பதைத்தான் ‘அத்ருஷ்ட பலன்’ என்பது. இதிலே இந்த ரிஃபார்மர்களுக்கு அநேகமாக நம்பிக்கையே கிடையாது. அவர்களுடைய படிப்பு, பார்வை எல்லாம் வெள்ளைக்காரர்களின் வழியிலேதான் இருக்கிறது. அதனால்தான் லோகத்தில் அநேக வித்யாஸங்கள் இருப்பதெல்லாம் ஜன்மாந்த்ர கர்மாப்படி அவரவரும் ஆத்மாபிவிருத்தி அடைவதற்காக ஏற்பட்டது என்பதை ஒப்புக்கொள்ளாமல், ஸமத்வம், அபேதவாதம் என்று எதையோ சொல்லிக்கொண்டு எல்லாவற்றையும் பலபட்டடையாகப் போட்டுக் குழப்ப வேண்டும் என்கிறார்கள். இப்படியே லோகாந்தரங்களிலும் அத்ருஷ்ட பலன் ஏற்படுவதைப் புரிந்து கொள்ளாததால் தேவதைகளுக்கான யஜ்ஞாதி கர்மாக்கள், பித்ருக்களுக்கான திவஸ தர்ப்பணாதிகள் ஆகியவற்றை வீண்கார்யம், ஸுபர்ஸ்டிஷன் என்று கேலி செய்கிறார்கள். லோகாந்த்ர, ஜன்மாந்தரங்களில் பலனைத் தருபவனாக ஈஸ்வரனொருவன் இருக்கிறானென்பதை மறந்து, தாங்களே அதிகாரி, தாங்களே கர்த்தா என்று நினைத்துக்கொண்டு, இவர்கள் விரும்புகிற சீர்திருத்தம், முன்னேற்றம் எல்லாம் தங்கள் வாழ்நாளிலேயே நடந்து பார்த்தாக வேண்டும் — “In my life time” – என்கிறார்கள். இவர்களில் சிலர் கொஞ்சம்கூட அடக்கமில்லாமலிருக்கும்போது ”தம்ப-மான-மதான்விதா:” என்று (கீதையில்) சொல்லியிருப்பதுபோல1த் தாங்களே எதையும் ஸாதித்துவிட முடியும் என்று தற்பெருமையில் மதம்பிடித்து டம்பமாகத் திட்டங்களை போட்டு, ‘லோகத்தையே மாற்றிவிடப் போகிறேனாக்கும்’ என்று கிளம்புகிறார்கள். இவர்களைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல பகவான்.
“இதமத்ய மயா லப்தம் இமம் ப்ராப்ஸ்யே மநோரதம்” –
”இன்றைக்கு இதை ஸாதித்து விட்டேனாக்கும். இன்னமும் பெரிசாக நாளைக்கு ஸாதிப்பேன்” என்று வெறும் லௌகிகமாகவே எதெதையோ பண்ணிப் பூரித்துப் போகிறார்கள் என்கிறார்2. இப்படியெல்லாம் செய்கிறவர்களிடத்தில் சாஸ்திரப்படி சொல்லப்படும் சௌசம் (தூய்மை, மடி-விழுப்பு பார்ப்பது) இருக்காது, எந்த ஆசாரமுமே இருக்காது: ”ந சௌசம் ந அபி ச (ஆ)சார:” என்கிறார்3.
உபநிஷத்திலும், ”ஸ்வயம் தீரா: பண்டிதம் மன்ய மானா:” என்று ”நானே மஹா புத்திசாலி, மஹா பண்டிதன்” என்று பரலோக விஷயங்களைப் புரிந்து கொள்ளாமல் கிளம்புகிறவர்களையும், அவர்களை வழிகாட்டியாகக் கொண்டு பின்னே போகிறவர்களையும் சொல்லி, இவர்கள் எல்லாரும் குருடர்களால் வழிகாட்டப்பட்ட குருடர்கள் மாதிரி சுற்றிச் சுற்றித் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறது4.
1. 16.10
2. 16.13
3. 16.7
4. கடோபநிஷத் 1.2.5; முண்டகோபனிஷத் 1.2.8