பூர்வகால அவதாரங்கள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

க்ருஷ்ணாவதாரத்துக்கு முந்தியும் மத்ஸ்யத்திலிருந்து ராமர் வரை ஏழு அவதாரங்கள் ஏற்பட்டிருந்தன. எட்டாவது அவதாரமான பலராமரும் க்ருஷ்ணரின் ஸம காலத்தவரேயானதால் ராமரோடு நிறுத்திக்கொண்டேன். அந்த அவதாரங்கள் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளை உபதேசிப்பதற்காக ஏற்பட்டவையல்ல. ஏதோ கொஞ்சம் அவ்வப்போது உபதேசித்தால்கூட அது அந்த அவதாரங்களின் முக்ய நோக்கமில்லை. ஏனென்றால் அந்தக் காலங்களில் உபதேசத்துக்காக பகவானே அவதரிக்கவேண்டும் என்னும்படியான சூழ்நிலை இருக்கவில்லை. ஸூர்யன்-மநு-இக்ஷ்வாகு-அப்புறம் அவன் வம்சம் என்று கர்மயோகம் அது பாட்டுக்கு தொடர்ச்சியாக நல்ல முறையில் போய்க்கொண்டிருந்தது என்று பகவான் சொன்னது போலவே ஞானயோகம், பக்தியோகம் ஆகியனவும் ஞான பரம்பரை, பக்தி பரம்பரை வழியாக குரு-சிஷ்யாளென்று சீராக அந்தக் காலங்களிலெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. ஜனங்களெல்லாம் பொதுவாக நல்ல வழிகளிலேயே போய்க்கொண்டிருந்தார்கள்.

அப்போதெல்லாம் அவதாரங்கள் ஏன் ஏற்பட்டனவென்றால் அஸுரர், ராக்ஷஸர் என்ற இனங்கள் ஆதிக்கத்துக்கு வந்து கொடுமைப்படுத்திய ஸமயங்களில் அவர்களை அழிப்பதற்காகத்தான். இந்த ஸம்ஹார க்ருத்யம் ஆனபின் ஜனங்கள் நிர்பயமாக பழையபடி நல்ல வழியிலேயே போய்க்கொண்டிருப்பார்கள். ஸாக்ஷாத் ஈச்வரனே மெனக்கிட்டு உபதேசம் பண்ணுவதற்கென்று அவதரிக்க வேண்டுமென்றில்லாமல், மஹான்கள் மூலம் அது நடந்து கொண்டிருந்தது. ஜனங்கள் அவரவர் மனப்பான்மைக்கேற்ப எந்த யோகமோ அதில், ப்ரவ்ருத்தி-நிவ்ருத்திகளில் ஒன்றில், போய்க்கொண்டிருந்தார்கள்.

ஞானத்தின் பெருமை தெரிவதற்காகவே அவ்வப்போது பகவானும் தத்தர், ஹம்ஸர் முதலான அவதாரங்களின் மூலம் உபதேசங்கள் செய்தாலும் இதற்காக ஈச்வர சக்தியை விசேஷமாகக் கைக்கொள்ள வேண்டியிருக்கவில்லை. ஏதோ ஒன்று ரொம்பவும் சிதிலமானால் தானே அவைத் தூக்கி நிறுத்திப் பழையபடி பலமாக நிறுத்துவதற்கு நிரம்பவும் சக்தியைச் செலவழிக்கவேண்டும்? இதனால்தான் அஸுர, ராக்ஷஸர்களின் ஸம்ஹாரத்துக்காக ஏற்பட்ட அவதாரங்களையே பகவானின் ஸாக்ஷாத் சக்தி வாய்ந்த தசாவதாரங்கள் என்று சிறப்பாகப் பாகுபடுத்திவிட்டு உபதேசகர்களாக அவன் எடுத்த ஸநகாதியர் நர-நாராயணர்கள் கபிலர், தத்தர், வ்யாஸர் முதலானவர்களை அம்சாவதாரங்கள் என்று வைத்தார்கள். இருபத்து நாலு அவதாரம் என்று ஒரு கணக்கு. அதில் தசாவதாரங்களும் அதோடு இந்த ஞானோபதேச அவதாரங்களும், இன்னம் தன்வந்தரி, மோஹினி போன்றவர்களும் அடங்குவார்கள்.

ராமாவதாரத்திற்கு அப்புறம் க்ருஷ்ணாவதாரத்திற்கு முன் என்ன ஆயிற்று என்றால் அஸுர-ராக்ஷஸர்கள் தனியாக அப்படியிருப்பதைவிட மநுஷரூபத்திலுள்ள பல ராஜாக்களிலேயே அதிகம் ஆவேசித்தார்கள். கம்ஸன், ஜராஸந்தன், கௌரவர்கள் ஆகியவர்கள் மநுஷ்ய ஜாதியிலேயே பிறந்தவர்கள், ஆனாலும் அஸுர குணத்தோடு இருந்தார்கள். பரசுராமர்கூட மதோன்மத்தமாகப் போன மாநுஷமான ஒரு ராஜா குடும்பத்தை ஸம்ஹரிப்பதில்தான் ஆரம்பித்தார். ஆனால் அப்புறம் அப்படி (மதோன்மத்தமாக) இல்லாத ராஜாக்களையும் அவர் ஸம்ஹரித்துக் கொண்டே போய்க் கடைசியில் ராமரிடம் தோற்றுப் போனதாகக் கதை வேறே மாதிரி போய்விடுகிறது. க்ருஷ்ணர் காலத்தில்தான் அநேக ராஜாக்களின் ரூபத்தில் அஸுரர்கள் அக்ரமம் பண்ணிக்கொண்டிருந்தது. நரகாராஸுரன், பகாஸுரன், பாணாஸுரன் மாதிரி அசல் அஸுரர் என்றேயும் சிலர் இருந்தார்கள். இம்மாதிரி ஏதோ சில அசல் அஸுரர்கள், அவர்களைக் காட்டிலும் அதிகமான அளவில் மநுஷ ரூபத்தில் அரசர்களாக உள்ள அஸுரர்கள் ஆகியவர்களே க்ருஷ்ணாவதார காலத்தில் லோகத்துக்கு, தர்மமான மார்க்கங்களுக்கு ஹானி செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் இவர்கள் எல்லோரைக் காட்டிலும் அதிக அளவினரான பொதுஜனங்கள் பொதுவாக தர்மவழிகளை விட்டு அதிகமாக விலகிவிடவில்லை. (சற்றுமுன்) சொன்னது போல, கர்மாத்மாக்களாக வறட்டுக் கர்மாவே செய்பவர்கள், க்ரூரமான உபாஸனைகளைக் கடைப்பிடிக்கிறவர்கள், ஞானம் வராமலே வந்தமாதிரி ஹிபாக்ரிஸி செய்கிறவர்கள் ஆகியவர்களும் ஜன ஸமூஹத்தில் இருந்தாலும், அதைவிட அதிகமாகவே நல்ல வழிகளில் போகிறவர்கள்தான் இருந்தார்கள். இருந்தாலும் கெட்டதுகள் வியாதி பரவுகிற மாதிரி பரவிவிடப் போகிறதே என்று க்ருஷ்ண பரமாத்மா ஸமயத்தில் அர்ஜுனனை முன்னிலைப்படுத்தி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தர்மங்களை நன்றாகச் செப்பனிட்டு உபதேசித்தார்.

ஆனாலும் இதற்காக மட்டுமே அவர் அவதாரம் செய்தாரென்று சொல்ல முடியாது. அவர் இன்னம் அநேக உத்தேசங்களை வைத்துக்கொண்டே பூர்ணாவதாரம் என்னும் படியாக முழு ஈச்வர சக்தியோடு அவதாரம் செய்தார். ராஜாக்களின் வேஷத்திலிருந்த அஸுரர்களின் அதிக்ரமத்தால் பூமி கஷ்டப்பட்டது; பூமாதேவி ப்ரஹ்மாவிடம் போய் முறையிட்டாள்; அவர் அவளையும், தேவ ஸமூஹத்தையும் அழைத்துக்கொண்டு மஹாவிஷ்ணுவிடம் போய் முறையிட்டார்; மஹாவிஷ்ணு அதைக்கேட்டே க்ருஷ்ணாவதாரம் செய்தார்-என்று பாகவதத்தில் சொல்லியிருக்கிறது. அரச ரூப அஸுரர்களை அழித்து பூபாரம் தீர்ப்பது, நல்ல வழிகளை உபதேசம் செய்வது என்ற இரண்டோடு, இன்னம் தெய்வமாகவும் மநுஷனாகவும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து காட்டித் தீர்ந்துவிடுவது என்றே அந்த அவதாரத்தில் பூர்ண சக்தியோடு வநதார். வெண்ணெய் திருடி இடைச்சிகளிடம் அடிபடுவதிலிருந்து, அவர்களோடேயே அப்புறம் ராஸக்ரீடை செய்வதிலிருந்து, கோவர்த்தனோத்தரணம், விச்வரூப தர்சனம் முதலான பெரிய காரியங்கள், தூது போவது தேரோட்டுவது முதலான சின்ன கார்யங்கள், பக்த வாத்ஸல்யம் என்றால் இப்படியும் உண்டா என்னும்படியாகப் பாண்டவர்கள், த்ரௌபதி, குசேலர் முதலானவர்களுக்கு அநுக்ரஹம் செய்வது என்று என்னென்னவோ, ஏகமாகப் பண்ணினார். அதில் ஒரு முக்யமான கார்யம்தான் உபதேசம். அதுவே முழுக் கார்யமில்லை. பூலோகத்தில் நரவேஷத்தில் ஆடினதில், ஆயுஸில் முக்கால்வாசி போன விட்டுத்தான் கீதோபதேசம் என்று ஞானாசார்யனாக வாயைத் திறந்தார்.

அப்புறம் கடைசியில் நரலீலை முடித்துப் பரமபதத்திற்குத் திரும்புவதற்குத் முன் உத்தவ ஸ்வாமி என்ற பரம பக்தருக்கு இன்னொரு உபதேசம் செய்தார். ‘உத்தவ கீதை’ என்று அதற்குப் பெயர். அர்ஜுனனுக்குப் பண்ணிய உபதேசத்துக்கு உபதேசம் செய்தவரை வைத்து ‘பகவத் கீதை’ என்று பேர் ஏற்பட்டது. அவதாரத்தில் கடைசிக் கார்யமாக பண்ணிய உபதேசத்துக்கோ அதைக் கேட்டுக் கொண்டவரை வைத்து ‘உத்தவ கீதை‘ என்று பேர் ஏற்பட்டது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is கண்ணுனம் சங்கரரும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கலியுகம் :தொடக்க காலத்திலும் பிற்காலத்திலும்
Next