இதைத் தூண்டிவிட்டு தூபம் போட்டு ஜனங்களைத் தப்பிலேயே நன்றாகப் பிடித்துத் தள்ளுவதற்காகப் பல பேர் வந்தார்கள். அவர்களும் க்ரூரமான அஸுரர்களாகத் தெரிபவர்களில்லை. ஜனங்களின் ஹிதத்தையே நினைத்து அவர்களுக்கு ஸத்யத்தைச் சொல்லி அவர்களுடைய ஆத்மாவை ரக்ஷித்துக் கொடுக்கவேண்டுமென்றே வாழ்கிறவர்கள் என்று எல்லோரும் நம்பும்படியானவர்களாக அவர்கள் தோன்றினார்கள். அவர்களில் சில பேர் நல்ல படிப்பு, அறிவு, வாதத் திறமை, சொந்த வாழ்க்கையில் உயர்ந்த சீலம் எல்லாம் உள்ளவர்களாகவும் காணப்பட்டார்கள். வாஸ்தவத்திலேயே அவர்களுடைய நோக்கம் நல்லதாகவும் இருந்திருக்கலாம். அவர்கள் சொன்னவற்றிலும் சில நல்ல அம்சங்கள் இல்லாமலில்லை. ஆனாலும் மொத்தமாகப் பார்த்தால் இவர்கள் ஒவ்வொருவர் சொன்னதும் ஜனங்களின் உண்மையான ஆத்மாபிவ்ருத்திக்காக ப்ரவ்ருத்தி-நிவ்ருத்தி தர்மங்களைப் பூர்ணமாக வகுத்துக் கொடுத்த வேத மார்க்கத்திற்கு விரோதமாகவே இருந்தது. மேலே பார்த்தால் நல்லது போலத் தெரிந்தாலும், உள்ளே போனால் இஹம், பரம் இரண்டிற்கும் ஸஹாயம் செய்யாதவையாகவே இருந்தது.
இப்படியிருந்தாலும், இப்படிச் சொன்னவர்களுக்குரிய மரியாதையைக் குறைத்துச் சொல்லப்படாது. அவர்களுடைய நல்ல நோக்கத்தில்கூட நாம் ஸந்தேஹப்பட வேண்டியதில்லை. அவர்களில் சில பேர் தம்மளவில் ஒரு உயர்ந்த அநுபவம் பெற்றவர்களாகவும் இருந்திருப்பார்கள். ஆனாலும் மற்றவர்களுக்கு இவற்றைச் சொன்னதில், அவர்கள் (மற்றவர்கள்) இஹ-பர க்ஷேமங்கள் ஸகலத்துக்கும் ராஜ பாட்டையாக இருந்த வேத மார்க்கத்தை விட்டுவிட்டு சந்தில், பொந்தில் காட்டு வழியில் போகும்படியாகவே பண்ணிவிட்டார்கள். அக்காலத்தில் ஜனங்கள் அஞ்ஞானமாகிய அடர்ந்த காட்டுக்குள் விழுந்து கிடந்தார்கள்- “அஜ்ஞாநாந்தர்–கஹன–பதிதான்” –என்று சொல்லியிருக்கிறது.* “கஹனம்” என்றால் அடர்ந்த காடு.
இப்படி ஜனங்களை வேத தர்மத்தைத் விட்டுப் போகும்படியாகப் பண்ணும் பலர் அப்போது தோன்ற ஆரம்பித்தார்கள்.
அவர்கள் யாரென்றால், பல மதங்களை, ஸித்தாந்தங்களை ஸ்தாபித்தவர்கள்; அல்லது ஏற்கெனவே எங்கேயோ துளி முளைவிட்டு மண் மூடிப் போயிருந்த அபிப்ராயங்களை இப்போது நன்றாக உரம்போட்டுப் பெரிய ஸித்தாந்தமாகத் தளிர்த்து வளரப் பண்ணியவர்கள். யாராயிருந்தாலும், லோக க்ஷேமார்த்தமாக ஈச்வர ப்ரேரணையின் மேல் ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்ட ஸநாதன தர்மமான வேத மதத்தின் தாத்பர்யங்களுக்கு விரோதமாக ஸித்தாந்தம் பண்ணியவர்கள்.
மதங்களின் மூல புருஷர்களாகவும் ஸித்தாந்த ப்ரவர்த்தகர்களாகவும் வந்த இவர்களில் இரண்டு வகை உண்டு. ஒருவகை, வேதத்தை அடியோடு ஆக்ஷேபிக்கவில்லை. தங்கள் கொள்கை வேதத்தை மறுத்துச் செய்யப்பட்டதென்று சொல்லவில்லை. ஆனால் வாஸ்தவத்தில் அவர்களுடைய கொள்கை, வேதத்தில் ப்ரவ்ருத்தி-நிவ்ருத்தி என்று பிரித்து, ஒன்றுக்கப்புறம் மற்றது என்று இணைத்துக் கொடுப்பது போலில்லாமல், ஏதாவது ஒன்றை மட்டும், அல்லது ஒன்றில் சில அம்சங்களை மட்டும் சொல்லி, அதுவே எல்லாம் என்று முடிப்பதாக இருந்தது. இரண்டாவது வகையினர் வேதத்தை அடியோடு, வெளிப்படையாக, ஆக்ஷேபித்துப் புது மதமாகவே பண்ணியவர்கள். பௌத்தம், ஜைனம், சார்வாகம் ஆகிய மதங்கள் இப்படிப்பட்டவையே. பௌத்தம், ஜைனம் என்று அந்த மதஸ்தாபகர்களான புத்தரையும் ஜினரையும் வைத்துப் பெயர் சொன்னதுபோலச் சார்வாகத்துக்கும் (அதன் ஸ்தாபகரை வைத்துப் பெயர்) சொல்வதானால் ‘பார்ஹஸ்பதம்’ என்று சொல்லவேண்டும். ப்ருஹஸ்பதி ஸ்தாபித்த மதமாகையால் (அது) பார்ஹஸ்பதம்.
* இவ்வுரையில் பிற்பாடு இச்சுலோகம் முழுவதும் விளக்கப்படும்.