வேதத்தை ஒப்புக்கொள்வதாகச் சொன்னாலும், அப்படிச் சொல்லாவிட்டாலும் அன்றைக்கு இருந்த மதங்கள், அப்புறம் ராமாநுஜர், மத்வர் போன்றவர்கள் ஸ்தாபித்த மதங்கள், இன்றைக்கும் லோகம் பூராவிலும் இருக்கிற அந்நிய மதங்கள் ஆகிய எல்லாவற்றிலுமே நல்லதாக என்னென்ன அம்சம் இருக்கிறதோ அதெல்லாம் வேதத்தில் இருப்பதுதான். கால தேச வர்த்தமானங்களால் வெளி ஆசார அநுஷ்டானங்கள் வைதிகமாகத் தெரியாது போனாலும், தேசாந்தரங்களில் உள்ள மதங்கள் உட்பட எதுவானாலும் ‘ஸ்பிரிட்’டை எடுத்துக்கொண்டால் அது வேதத்தில் ஆதாரமுள்ளதாகவே இருக்கும். இங்கே ‘ஸ்பிரிட்’ என்று சொல்லும்போது நான் மதங்களிலுள்ள தத்வங்களை மட்டும் சொல்லவில்லை. சடங்குகளையும்தான் சொல்கிறேன். இன்றைக்கு அந்நிய மதங்களில் உள்ள சடங்குகள் வைதிக வாஸனையே இல்லாத மாதிரி இருக்கிற போதும்கூட அந்தச் சடங்குகளின் ஜீவனாக இருக்கப்பட்ட, ‘ஸ்பிரிட்’ என்று சொன்ன, அம்சம் வேதத்தில் இல்லாமலிருக்காது. வைதிகம், அவைதிகம் என்று சொல்லப்படும் எல்லா மதங்களுமே தெரிந்தும் தெரியாமலும் இப்படி தத்வம், சடங்கு இரண்டிலும் ஓரொரு அம்சங்களை வேதத்திலிருந்து எடுத்துக்கொண்டுதான் உருவாயிருக்கின்றன. ஓரொரு அம்சங்களைத்தான்; பூர்ணமாக இல்லை.
வேதத்தைப் பார்த்தால் அதில் சிவ ஸம்பந்தமாகவும் பல உண்டு விஷ்ணு ஸம்பந்தமாகவும் பல உண்டு. விசிஷ்டாத்வைதம், த்வைத மதம் முதலியவற்றில் சிவ ஸம்பந்தமானவற்றை விட்டுவிட்டு வைஷ்ணவமானதை மட்டுந்தான் எடுத்துக்கொண்டிருக்கிறது. சிவாத்வைதம், சைவ ஸித்தாந்தம் முதலியவற்றில் இதற்கு vice versa-வாக இருக்கும். ஆகக்கூடி வேதத்தில் இருப்பதில் ஏதோ ஒன்றை விட்டு, ஒன்றை மட்டும் க்ரஹித்துக் கொள்வதாகவே இருக்கும்.
மீமாம்ஸகர்கள் கர்ம மார்க்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஞானத்தைத் தள்ளினார்கள். பௌத்தம் யம நியம ஒழுக்கங்கள், நிஷ்ப்ரபஞ்ச தத்வம் இவற்றை மட்டும் வேத தர்மத்திலிருந்து எடுத்துக்கொண்டு, ஆனால் வேறே தினுஸாக ‘டெவலப்’ செய்துகொண்டு போயிற்று. இப்படி எந்த மதத்தைப் பார்த்தாலும் வேதத்தில் சிலதைக் கொள்ளுவது, சிலதைத் தள்ளுவது என்றே இருக்கிறது. ஸம்பூர்த்தியாக வேதம் முழுவதையும் அப்படியே எடுத்துக் கொண்டது ஆசார்யாளின் மதம்தான். ஸரியாய்ச் சொன்னால், அது ஆசார்யாள் மதமே இல்லை. ஒரிஜனல் வேத மதமேதான்! ஆசார்யாள் புனருத்தாரணம் பண்ணிய ஒரிஜனல் வேத மதம்! கர்மம், பக்தி, ஞானம், யோகம், தர்மம் என்ற ஒழுக்க நியமம், ஸப்ரபஞ்சம், நிஷ்ப்ரபஞ்சம், சிவன் – விஷ்ணு என்கிற மாதிரி பேதமில்லாமல் அத்தனை தெய்வங்களும் ஸம்மதமென்பது-என்று பூர்ணமாயிருப்பது ஆசார்யாள் கொடுத்துள்ள வழி ஒன்றுதான்.