பொது ஜனங்களுக்குத் தத்வ ஸித்தாந்தங்களைப் பற்றிக் கவலையில்லை. ஏதோ ஒரு பெரிய சக்திதான் இந்த லோகத்தைப் படைத்து நடத்திக்கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை, ஸ்வாமி என்ற அந்த சக்தியிடம் தங்களுடைய காமனைகளை (விருப்பங்களை)ப் பூர்த்திப் பண்ணித்தர வேண்டிக்கொள்வது-இதுதான் ஸாதாரண மக்களின் ‘ரிலிஜன்’. அதோடுகூட, தங்களுடைய மதிப்பு மரியாதைகளைக் கவரும்படியான ஒரு பெரியவர் வந்து ஒரு வழியைச் சொன்னால், ‘இவர் சொன்னால் அது ஸரியாய்த்தானிருக்கும்’ என்ற நம்பிக்கையின் பேரில், தங்களை அந்தப் பெரியவரின் வழியைச் சேர்ந்தவர்களாகவே சொல்லிக்கொண்டு ஒரு நிறைவு பெறுவது பொதுமக்கள் ஸ்வபாவம். அவருடைய ‘வழி’ என்பது அவர் சொல்கிற மத ஸித்தாந்தம்தான். அது என்ன என்று ஜனங்களுக்கு விசேஷமாகத் தெரிந்தே இருக்காது. தெரிந்த அளவுக்குக்கூட அதை அநுஷ்டானம் பண்ணி ஸொந்த அநுபவமாக்கிக்கொள்ளவும் பாடுபடமாட்டார்கள், ஆனாலும் ‘அது எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இவர் — இந்தப் பெரியவர் — சொல்கிறாரென்றால் ஸரியானதாகத்தான் இருக்கும். ஆகையால், நாம் இவரைச் சேர்ந்தவர்கள் என்றே இருப்போம். இவர் சொல்வதில் ஏதோ கொஞ்சம் நம்மால் முடியுமானால் செய்து பார்ப்போம்’ என்று இருப்பார்கள். இது நம் ஆசார்யாளின் மதத்தில் உள்ளவர்களுக்கும்தான் பொருந்தும்.
பௌத்த-ஜைன மதங்களை இந்தக் கோணத்தில் பார்க்கலாம்.
அந்த மதங்களில் சொல்லியிருக்கும் அஹிம்ஸை, ஸத்யம், அபரிக்ரஹம் (பொருள் சேர்த்துக் கொள்ளாமை) முதலான நல்லொழுக்கங்களை எந்த மதம்தான் சொல்லவில்லை? மநு தர்ம சாஸ்த்ரத்தில் ஸகல ஜனங்களுக்குமான ஸாதாரண தர்மங்கள் என்று ஆரம்பித்திருப்பதே இவற்றில் தான். சாஸ்த்ரம் என்று ஒன்று சொல்லவேண்டும் என்றே இல்லை; ஒழுக்கமாக இருக்கவேண்டுமென்று யாருக்குத்தான் தெரியாது? ஆனாலும் அப்படி இருக்கவொட்டாமல் ஆசைகள் பிடித்து இழுக்கின்றன. இப்படிப் பிடித்திழுக்கும் போது தத்வ விசாரம் செய்து — வேதாந்தப்படியோ, பௌத்த-ஜைனம் முதலியவற்றின்படியோ, ஸாங்க்யாதி ஸித்தாந்தங்களின்படியோ, ஏதோ ஒரு விதத்தில் தத்வங்களை ஆராய்ந்து பார்த்து, அநுபவம் பெற்று — ஆசைகளை அடக்கிப்போடுவது என்றால் அது நூற்றிலே ஆயிரத்திலே ஒன்றிரண்டு பேருக்குத்தான் ஸாத்யம். மற்றவர்கள் கருணாமூர்த்தியான ஒரு ஈச்வரனை சரணடைந்து அவனை வேண்டிக்கொண்டு அவனருளால் கெட்டதுபோய் நல்லது வரணுமென்றால்தான் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள்.
பௌத்த ஜைன மதங்களில் ஈச்வரனே கிடையாது. ஜனங்களுக்கானால், அந்த மதங்களில் அநுஷ்டான லெவலில் சொன்ன ஒழுக்கங்களிலும் பிடிப்பில்லை, அநுபவ லெவலில் சொன்ன ஃபிலாஸஃபியில் போவதற்கும் சக்தியில்லை. அவற்றை ஜனங்களின் மதமாகப் பாபுலராக்க என்ன பண்ணுவது? அந்த மதங்களானால் தாங்கள்தான் அத்தனை பொது ஜனங்களுக்கும் ஆனவை என்று சொல்லிக் கொண்டவையாக வேறு இருந்தன! ‘சொல்லிக் கொண்டவை’ என்றால் அவ்வளவு நன்றாக த்வனிக்கவில்லை. வாஸ்தமாகவே புத்தரும் ஜினரும் mass religion -ஆக எல்லாருக்கும் எல்லா உரிமைகளையும் தர நினைத்தவர்கள் தான். வர்ண வ்யவஸ்தை உள்ள ஹிந்து மதம் சிலபேருக்கு மட்டும் பக்ஷபாதமாகப் பண்ணுவதாகச் சொல்லி, எல்லாருக்கும் ஸமமாகத் தங்கள் மதத்தில் அதிகாரம் கொடுத்தார்கள். ஆனாலும் mass religion -ஆக அவர்கள் கொடுக்க நினைத்ததில் mass appeal உள்ள தெய்வ வழிபாடு என்ற natural religion சேராவிட்டால் எப்படி நடக்கும்?
புத்தரும் ஜினரும் இருந்த காலத்தில் அந்த மதங்கள் ஜனங்களிடம் பரவின என்றால் அதற்குக் காரணமே வேறே. அதுவரை இருந்த (வேத) மதம் வித்யாஸம் பாராட்டுகிறதென்று சொல்லி, ‘நாங்கள் ஸரியாயப் பண்ணி உங்கள் எல்லோருக்கும் ஸமமாக உயர்வு தருகிறோம்’ என்று ஒரு புத்தரோ ஜினரோ புதுசாக ப்ரசாரம் பண்ணினால் அப்போது ஜனங்களுக்கு அதில் ஒரு கவர்ச்சி ஏற்படத்தானே செய்யும்? இவர்கள் சொன்ன கொள்கை என்ன, அது புரியுமா அதைப் பின்பற்ற முடியுமா என்ற கேள்விகள் அப்போது எழும்பியிராது. அதோடு, அப்படிச் சொன்ன புத்தரும் ஜினரும் அந்தஸ்து வாய்ந்த குடியில் வந்தவர்களாகவும், சொந்த வாழ்க்கையில் நல்லொழுக்கம், பிரேமை, த்யாகம் நிரம்பியவர்களாகவும் இருந்ததால் அவர்களுடைய ‘பெர்ஸனல் மாக்னடிஸம்’ (காந்த சக்தி) ஜனங்களை ஆகர்ஷித்தது.
இது அந்த மதங்களுக்கு மட்டும் நான் சொல்வதில்லை. ஸகல மதங்களுக்குமே பொருந்துவதுதான். ஹிந்து மதத்தில் கூடத்தான்-பொது ஜனங்களைப் பொறுத்தமட்டில் அதன் பல்வேறு ஸித்தாந்தங்களை பற்றிக் கவலையில்லை; ஒரு ஸித்தாந்தத்தைச் சொல்ல விசேஷப் பெருமை வாய்ந்த ஒருத்தர் வந்தாரென்றால் அவர் பின்னே போய்விடுவது என்றுதான் எப்பவுமே பொது ஜனங்கள் செய்திருக்கிறார்கள். நம்முடைய ஆசார்யாள் விஷயமாகவே கூடவுந்தான், அவர் சொன்ன அத்வைதத்தைப் புரிந்து கொண்டுதான் ஜன ஸமூஹம் முழுதும் அவரைப் பின்பற்றிற்று என்று சொல்ல நான் தயாரே இல்லை. “இவர் பெரிய மஹான், நமக்கு நல்லதைத்தான் சொல்வார்” என்று அந்தத் தனி மநுஷ்யரின் குணங்களைக் கொண்டு அவரிடம் உண்டான ஈடுபாட்டினாலேயே, அதில் பிறந்த நம்பிக்கையின் மேலேதான் பொது ஜனங்களில் பல பேர் அவருடைய மதத்தைத் தழுவியிருப்பார்கள். இது இருக்கட்டும்.
புத்தரும் ஜினரும் போன பிறகு எப்படி ஜனங்களை அந்த மதங்களில் பிடிப்போடு இருக்கப் பண்ணுவது?
‘வெறுமே ஒழுக்கம் ஒழுக்கம் என்றாலும் பிடிப்பில்லை ஃபிலாஸஃபியும் எட்ட மாட்டேன் என்கிறது. பொது ஜனங்கள் மத ஸித்தாந்தம், ஸாதனா மார்க்கம் என்பவை பற்றி அலடிக் கொள்வதில்லை. உயிரோடு ஈச்வரன் என்று உள்ள ஒன்றிடம்தான் அவர்கள் ஏதோ ஒரு மாதிரிப் பிடிப்பு வைத்துக்கொள்ள முடியும்’ என்று இருக்கும்போது, அவர்களுக்குப் பிடித்த மாதிரி கொடுத்துத் தானாக வேண்டுமென்ற கட்டாயம் பௌத்த – ஜைனர்களுக்கு ஏற்பட்டது. அதனால், தங்கள் ஃபிலாஸஃபி இடம் கொடுக்காத ஈச்வரனைச் சொல்லாவிட்டாலும், எப்படியோ ஒரு விதத்தில், வழிபாட்டுக்குரிய மூர்த்திகளை கொடுத்து விடுவதென்று தீர்மானித்தார்கள். என்ன செய்தார்களென்றால்…ஸ்வாமி (ஈச்வரன்) என்று சிலை வைக்கவில்லைதான். ஆனால் பௌத்த-ஜைன மதங்கள் சொன்ன கொள்கைப்படிப் போய்ப் பூர்ணத்வம் அடைந்ததாக அவர்கள் கருதிய மஹான்களை வழிபடச் சொல்லி, அந்தப் பெரியவர்களுக்குக் கோவில், மூர்த்தி, பூஜாக்ரமம் எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். இந்த வழிபாட்டுக்கு அந்த மத புருஷர்கள் சொன்ன காரணம், யோக சாஸ்த்ரத்தில் ஈச்வரனை ஒரு ஐடியலாகக் கொண்டுள்ளது போலத்தான். அதாவது, வக்ஷ்யத்தை அடைந்துவிட்ட தங்கள் மதப் பெரியவர்களை — புத்தர்கள், போதி ஸத்வர்கள், தீர்த்தங்கரர்கள் போன்றவர்களை — வழிபடுவதால் அவர்கள் அடைந்த நிலைகளை மக்களும் ஐடியலாக எடுத்துக்கொண்டு பின்பற்றப் பார்ப்பார்கள் என்பதுதான். ஆனால் அப்படி நடந்திருக்குமா என்பது ரொம்பவும் ஸந்தேஹம். பெரிய பெரிய விஹாரங்களும் மூர்த்திகளுமாக ஏற்படுத்தியவுடன் ஜனங்களை அவை கவர்ந்து வழிபாடு செய்ய வைத்திருக்கும் என்பதில் ஸந்தேஹமில்லை. ஆனாலும் ஜனங்கள், ‘இவா மாதிரி நாம் புத்தராகணும், போதி ஸத்வராகணும், அர்ஹர் (அருகர்) ஆகணும்’ என்று ஐடியலை நினைத்து, லக்ஷ்யம், கிக்ஷ்யம் என்று எதையோ நினைத்து, அலட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். அதுவரை ஹிந்து மத தெய்வங்களிடம் வேண்டிக்கொண்டது போலவே, உலக வாழ்க்கையில் ‘அது வேணும், இது வேணும், கஷ்டம் போகணும்’ என்றும், ரொம்ப உசந்தால், ‘ஞானம் வரணும், வைராக்யம் வரணும்’ என்றும் இந்த (பௌத்த, ஜைன) மூர்த்திகளையும் வேண்டிக் கொள்வதோடுதான் நின்று போயிருப்பார்கள். ‘அவர்களுடைய ஐடியலை நாமும் ப்ராக்டிகலில் செய்ய வேண்டும்’ என்று ஆரம்பித்திருக்கமாட்டார்கள். பொது ஜன மனப்போக்கு இப்படித்தான்.
இப்படி வேண்டி வரம் பெறுவது என்றால் அப்போது கர்ம பல தாதாவான ஈச்வரன் இருந்து தானாக வேண்டும். கர்மாவுக்கு எவன் பலன் தருகிறானோ, அவன்தானே நாம் வேண்டுகிற பலனைத் தரவும் முடியும்?
அதாவது, அந்த இரண்டு மதங்களும் கர்ம பல தாதாவான ஈச்வரனாக இல்லாமல், லக்ஷ்யத்துக்குப் போக வழிகாட்டும் லக்ஷ்ய புருஷர்கள் என்ற முறையிலேயே பூஜா மூர்த்திகளை வைத்தாலும், ஜனங்கள் என்னவோ அவற்றை ஹிந்து மதத்திலுள்ள ஈச்வரனின் அநேக மூர்த்திகள் போலவே நினைத்து இஷ்ட காம்ய பலன்களுக்காகத்தான் வழிபட்டு வந்தார்கள்.
இது இப்படியே போனதில் அப்புறம் அந்த மதத் தலைவர்கள், ஹிந்து மதத்தில் ஒவ்வொரு பலனுக்கு ஒவ்வொரு தெய்வம் என்றிருக்கிற மாதிரியே தாங்களும் தெய்வங்களை ஏற்படுத்தும் வரையில் போக வேண்டியதாயிற்று. ஹிந்து மத தெய்வங்களுக்குப் பெயர் மாற்றியோ, அல்லது அதே பெயரிலேயோ தங்கள் மதங்களிலும் எடுத்துக்கொள்ளும் படிக்கூட ஏற்பட்டது.
உத்தேசம் வேறு, நடைமுறை வேறு என்று இருந்த போதிலும் உத்தேசப்படியே நடக்கிற மாதிரி காட்டிக் கொண்டு நடைமுறைக்கு வளைந்து கொடுத்துக்கொண்டு போவதென்றால் அது மதத்திற்குப் பெரிய குறைவல்லவா? அந்த மதத்தில் இருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்களுக்கும் இது குறைதானே? இப்படி அந்த 2500 வருஷத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்தது.