முழுதும் வேத ஸம்மதமானாலே வைதிகம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஒன்றை வைதிக மதம் என்று சொல்ல வேண்டுமானால் அது வேதத்தில் சொல்லியுள்ள சிலவற்றை ஒப்புக்கொண்டு ‘டெவலப்’ பண்ணினதாக இருந்தால் மாத்திரம் போதாது. வேதத்தில் சொல்லியுள்ள எதையுமே அது ஆக்ஷேபிக்கக் கூடாது என்பது இதைவிட முக்யம். ‘சிவனைப் பற்றி வேதத்தில் ஸூக்தங்கள் இருக்கின்றன; அதனால் அதை எடுத்துக் கொண்டு டெவலப் பண்ணிய பாசுபதம் முதலான சைவ மதங்கள் வைதிகமானவை’ அல்லது, இதே மாதிரி, ‘வேதத்தில் விஷ்ணு ஸூக்தங்கள் இருப்பதால் அதன் அடிப்படையில் ஏற்பட்டுள்ள பாகவத பாஞ்சராத்ரம் முதலிய வைஷ்ணவ மதங்கள் வைதிகமானவை’ என்றால் அது ஸரியான வாதம் இல்லை. வேதத்தில் சிவன், விஷ்ணு என்ற இரண்டையும் ஒரேபோல ஸ்துதித்திருக்கிறது. ஒவ்வொன்றையும் சொல்லுமிடத்தில் அதையே பரப்ரஹ்மமாகச் சொல்லியிருக்கிறது. அதனால், சிவனையே முழுமுதல் தெய்வமாகச் சொல்லும் சைவ மதங்களோ, அதேபோல விஷ்ணுவையே முழு முதலாகக் கொள்ளும் வைஷ்ணவ மதங்களோ ஏற்படுவதில் தவறாக, அதாவது அவைதிகமாக எதுவுமில்லைதான் ஆனாலும் இந்த மதங்கள் தங்களுக்கு இஷ்ட தெய்வமாயுள்ள சிவனையோ விஷ்ணுவையோ முழு முதல் தெய்வமாகப் போற்றுவதோடு நிற்காமல், சைவ மதங்கள், ‘விஷ்ணு முழு முதல் தெய்வமில்லை. அவர் சிவனுக்குக் கீழானவர்தான்’ என்றும் வைஷ்ணவ மதங்கள், ‘விஷ்ணு மட்டுந்தான் முழு முதல் தெய்வம். சிவன் அவருக்குக் கீழ்ப்பட்டவர்தான்’ என்றும் சொல்லுமானால் அப்போது அவை வேதத்துக்கு முரணாகத்தான் போகின்றன. ஆகையினால் அவை அவைதிகமானவையாகி விடுகின்றன. தனக்குப் பிடித்ததை மட்டும் பிடித்துக்கொள்வதோடு நின்று விட்டால் பரவாயில்லை. ஆனால் தனக்குப் பிடிக்காதது என்று ஒன்றை தாக்கப் போனால் அது வேதத்தின் ஒரு பகுதியையே தாக்கியதாகிவிடுகிறது. அதனால் அப்படிப்பட்ட மதம் வைதிகமானதாகாது.

இது ஓரளவு broad outlook -ல் (பரந்த பார்வையில்) சொல்வது. இன்னும் strict -ஆகச் (கண்டிப்பாகச்) சொல்பவர்கள், “வேதங்களில் எல்லா ஸ்வாமிகளுக்கும் உரிய யஜ்ஞங்களைச் சொல்லியிருக்கிறது. ஒரு யஜ்ஞத்திலேயே பல ஸ்வாமிகளுக்கு யஜ்ஞ பாகங்கள் கொடுக்கும்படியும் இருக்கிறது. அவை எல்லாவற்றையும் வித்யாஸமில்லாமல் பண்ணுகிறவன்தான் நிஜமான வைதிகன். ‘ஒரு ஸ்வாமியைக் குறித்தவற்றை மட்டும் பண்ணுவேன்; இன்னொன்றை குறித்தவைகளைப் பண்ண மாட்டேன்’ என்கிறவன் வைதிகன் ஆக மாட்டான். மனஸளவில் இஷ்ட மூர்த்தி என்று ஒன்றிடம் அத்யந்த பக்தியுடன் இருந்துவிட்டுப் போகட்டும். கார்யத்தில் யஜ்ஞம், பூஜை என்று வரும்போது ச்ருதி-ஸ்ம்ருதிகளில் எப்படியிருக்கிறதோ அப்படி தெய்வ பேதம் பாராட்டாமல் பண்ணினால்தான் வைதிகம் என்று அர்த்தம்” என்று சொல்வார்கள்.

“ச்ருதியை அநுஸரித்து ஸ்ம்ருதிகள் கொடுத்துள்ள நாற்பது ஸம்ஸ்காரங்களைத்தான் பின்பற்றவேண்டும். அவற்றில் இல்லாத ஏதோ ஒரு ஸம்ஸ்காரம் பண்ணினால் தான் தங்கள் மதத்தைச் சேர்ந்தவராக முடியும் என்று ஒரு மதம் சொல்லுமானால் அது வேத மதத்திற்கு வேறான இன்னொன்றுதான். உதாரணமாக, நாற்பது ஸம்ஸ்காரங்களில் சங்க-சக்ரங்களையோ, சூலம்-ரிஷபம் முதலானவைகளையோ தப்த கின்ஹங்களாக முத்ரா தாரணம் செய்து கொள்வதென்பது (முத்திரைகளாகச் சூடு போட்டுக் கொள்வதென்பது) இல்லை. இந்த விதமான ஸம்ஸ்காரம் பண்ணிக்கொண்டால்தான், ஒருவன் விஷ்ணு பரமான, அல்லது சிவ பரமான ஒரு மதத்தைச் சேர்ந்தவனாவான் என்றால் அவனை வைதிகனென்பதற்கில்லை” என்று Strict -ஆக இருப்பவர்கள் சொல்வார்கள்.

அதோடுகூட, ‘யாராயிருந்தாலும் வர்ணாச்ரம அநுஷ்டானம் இருந்தால்தான் வைதிகர் என்று அர்த்தம். ‘எங்களுக்கு பக்திதான் முக்யம். வர்ணாச்ரம வ்யவஸ்தைகள் தேவையில்லை’ என்றால் அவைதிகம்தான்’ என்பார்கள்.

பக்தி மதமாக இல்லாமல், தத்வ சோதன மதங்களாக உள்ளவற்றுக்கும் இப்படியேதான்: அதாவது, அவை வேத ஆதாரத்தில் சில தத்வங்களை ஆராய்ச்சி செய்கின்றன என்றால் மட்டும் போதாது. இந்தத் தத்வங்கள், யாருக்கு எந்த ஸ்டேஜில் வேதத்தில் உத்தேசிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் கவனிக்கவேண்டும். அந்த நிலைக்கு வர இயலாதவர்கள் விஷயத்தில் வேதம் சொல்லியுள்ளவற்றைச் சகட்டுமேனியாக ‘இதெல்லாம் அவச்யமில்லை’ என்று தள்ளி விடக்கூடாது. மறுபக்கம், அந்த நிலைக்கு மேலே வேதத்தில் சொல்லியிருக்க கூடியவற்றையும் தள்ளிவிட்டு, ‘தான் எடுத்துக்கொண்டுள்ளதோடேயே வேதத்தின் தாத்பர்யம் பூர்த்தியாகிவிட்டது’ என்றும் சாதிக்கக்கூடாது. இந்தவிதமான அபிப்ராயக்காரர்களும், ‘நாங்கள் ஃபிலாஸஃபியாகத் தானே சொல்லிக்கொண்டு போகிறோம்? அதனால் எங்களுக்கும் ஸமூஹ நடைமுறை ஸமாசாரமான வர்ணாச்ரமத்துக்கும் ஸம்பந்தமில்லை’ என்று கத்திரித்துக்கொண்டு போகக் கூடாது.

இந்த அடிப்படைகளில்தான் எது வைதிக மதம், எது அவைதிக மதம் என்று மஹாபாரதத்திலேயே நிர்ணயம் செய்திருக்கிறது.

சரக்கூட்டில் படுத்துக்கொண்டிருந்த பீஷ்ம பிதாமஹர் தர்ம புத்ரருக்குப் பண்ணும் நீண்ட உபதேசம் மஹாபாரதத்தில் சாந்தி பர்வம், அநுசாஸன பர்வம் என்று இரண்டு பர்வங்களாக வருகிறது. அதில் பக்தி உபாஸனா மதங்களான பாஞ்சராத்ரம், பாசுபதம் ஆகிய இரண்டையும், தத்வ சாஸ்த்ரமாக இருக்கப்பட்ட ஸாங்க்யம், ஸாங்க்ய தத்வங்களின் அடிப்படையிலேயே மனோநிக்ரஹத்துக்கு க்ரியாரூபமாக ஸாதனம் சொல்லும் யோகம் ஆகிய இரண்டையும், அதாவது இந்த நாலு மதங்களையும் வேதத்திலிருந்து பிரித்து, வேறு வேறான தனி மதங்களாகத்தான் சொல்லியிருக்கிறது.

ஸாங்க்யம் யோக: பாஞ்சராத்ரம் வேதா: பாசுபதம் ததா என்று சொல்லியிருக்கிறது. அதாவது, ‘ஸாங்க்யம், யோகம், பாஞ்சராத்ரம், வேதங்கள், பாசுபதம் என்ற ஐந்து மதங்கள்’ என்று இருக்கிறது. ஐந்தில் ஒன்றாகவே வேதம் வருகிறதென்றால் மற்ற நாலும் வேத மதத்தைச் சேர்ந்தவையில்லை என்றுதானே அர்த்தம்? பாரதத்திலேயே இன்னோரிடத்தில், யோகம் என்பதை அந்த மதத்தின் மூலபுருஷரான பதஞ்ஜலியின் பெயரை வைத்து ‘பாதஞ்ஜலம்’ என்று சொல்லி, இந்த ஐந்தையும் “நாநா மதாநி” – வெவ்வேறு மதங்கள்-என்றே ஸ்பஷ்டமாகக் குறிப்பிட்டிருக்கிறது.

‘சிவ மஹிம்ந ஸ்தோத்ரம்’ என்று ஈச்வர மஹிமைகளைக் கூறுவதாக ஒன்று உண்டு. புஷ்பதந்தர் பண்ணியது. அது ரொம்பவும் பழமை வாய்ந்த ஸ்தோத்ரம். வட தேசத்தில் ரொம்பவும் ப்ரஸித்தமாக இருப்பது அதிலேயும் இப்படியே வேதம், ஸாங்க்யம், யோகம், பாசுபதம், வைஷ்ணவம் ஆகியன வெவ்வேறு மதங்கள் என்றே சொல்லியிருக்கிறது:

த்ரயீ ஸாங்க்யம் யோக: பசுபதிமதம் வைஷ்ணவம் இதி
ப்ரபிந்நே ப்ரஸ்தாநே1

‘த்ரயீ’ என்றால் வேதம், அது ஒரு மதம். ‘ஸாங்க்யம்’ இன்னொரு மதம். ‘யோகம்’ — அதுவும் தனியாக ஒரு மதம். ‘பசுபதி மதம்’ என்பது சிவபெருமானைக் குறித்த பாசுபதம், அதுவும் ஒரு தனி மதம். கடைசியாக இன்னொன்று ‘வைஷ்ணவம்’. இவற்றை ‘ப்ரபின்ன’மான ‘ப்ரஸ்தான’ங்களென்று சொல்லியிருக்கிறது — “ஒன்றுக்கொன்று மாறுபட்ட மார்க்கங்கள்” என்று அர்த்தம்.

பாரதத்திலும் சிவ மஹிம்ந ஸ்தோத்ரத்திலும் இப்படிச்சொல்லியிருப்பதற்கு ‘வால்யூ’ அதிகம். பாரதக் கதை விஷ்ணு அவதாரமான க்ருஷ்ண பரமாத்மாவின் கதையுடனேயே ஒட்டிப் போவது. ‘ஹரிவம்சம்’ என்பதாக உள்ள பாரதத்தின் ‘ஸப்ளிமென்ட்’ (அநுபந்தம்) ஸ்ரீக்ருஷ்ண சரித்ரத்தையே விரிவாகச் சொல்வது. அப்படியிருந்தும் வேதத்தின் ஸாமரஸ்ய பாவத்துக்கு (ஸமரஸ மனப்பான்மைக்கு) விரோதமாக, மற்ற தெய்வங்களைக் குறைத்தும், ச்ருதி-ஸ்ம்ருதி ஆசாரணைகளுக்கு மாறாகவும் விஷ்ணுவைக் குறித்ததாகவே பாஞ்சராத்ரம் என்ற தந்த்ரம் அநுஷ்டிக்கப்பட்டபோது அதை பாரதம் வேதத்துக்குப் புறச் சமயமாகவே சொல்லியிருக்கிறது. இப்படியேதான், சிவ மஹிமைகளையே சொல்லவந்த ஸ்துதியாயிருந்தாலும் சிவமஹிம்ன ஸ்தோத்ரத்தில் பசுபதி மதத்தை வேதத்துக்கு புறச் சமயமாகச் சொல்லியிருப்பதும்.

மஹாகவிகளின் வாக்குக்கும் ஒரு ஸத்ய ப்ரமாணமுண்டாகையால், அப்படியும் ஒன்று இந்த விஷயமாகச் சொல்கிறேன்:

பண்டித ஸமூஹத்தின் கௌரவத்தை நிரம்பப்பெற்றவர் ஸ்ரீஹர்ஷகவி. பாண்டித்யம் இல்லாதவர்களால் அவருடைய புஸ்தகங்களைப் புரிந்துகொள்ள முடியாது. அவர் நள சரித்ரத்தை “நைஷதம்” என்று பெயர் கொடுத்து எழுதியிருக்கிறார்2. அதிலே தமயந்தி ஸ்வயம்வர கட்டம். நளன் ஸ்வயம்வர மண்டபத்திற்கு வந்திருக்கிறான். அவனுக்கும் தமயந்திக்கும் பரஸ்பர ப்ரேமை. அதனால் அவள் அவனுக்குத்தான் மாலை போடுவாள். இந்த இடத்தில்தான் காவ்யச் சுவையைக் கூட்டிவைப்பதாக, இந்த நாள் மர்மக் கதைகள் மாதிரி புதிராக ஒன்று “நைஷத”த்தில் நடக்கிறது. அதாவது, ஒரு நளனுக்குப் பதில் ஐந்த நளர்கள் அடுத்தடுத்து உட்கார்ந்திருக்கிறார்கள்! அதில் ஒருத்தன்தான் நிஜ நளன். பாக்கி நாலு பேரும் தத்ரூபம் அவனைப்போலவே வேஷம் தரித்துக்கொண்டு வந்துள்ள அக்னி, யமன், வருணன், இந்திரன் ஆகிய நாலு தேவர்கள். அந்த ஐந்து பேரில் யார் நிஜ நளன் என்று தமயந்தி திகைத்துப் போகிறாள். இதைச் சொல்லவரும் போதுதான் கவி (ஸ்ரீஹர்ஷர்) நாம் பார்த்துக்கொண்டிருந்த விஷயத்தைக் கொண்டு வருகிறார் — உவமையாகக் கொண்டு வருகிறார். “உண்மையான வேதமதமான அத்வைதம், அதைப் போலவே வேஷம் போட்டுக்கொண்டுள்ள ஸாங்க்யம், யோகம், பாசுபதம், பாஞ்சாத்ரம் என்று நாலு மதங்கள், ஆகிய ஐந்தும் சேர்ந்துள்ளபோது எது நிஜம், எது பொய் என்று ப்ரமிப்பு ஏற்படுவதுபோல, நிஜ நளனோடு நளவேஷம் போட்டுக்கொண்டிருந்த நாலு தேவர்களைப் பார்த்தபோது ‘இந்த ஐந்து பேரில் யார் உண்மை நளன்?’ என்று தமயந்தி ப்ரமிப்படைந்தாள்” என்கிறார் : ….. பஞ்சம கோடி மாத்ரே… மதாநாம் அத்வைத தத்வ இவ ஸத்யதரேபி லோக: (நைஷதம் : XIII.36.)

இப்படியாக அந்தக் காலத்தில், நம் தேசத்தில் அநாதி காலமாக வேத வாக்குதான் ஈச்வர வாக்கான ஸத்யமான மதம் என்று பண்டித – பாமரரில் பெருவாரியானவருக்கு நம்பிக்கை இருந்ததால், வாஸ்தவத்தில் அவைதிகமான கொள்கைகளையும் க்ரியா கலாபங்களையும் கொண்டிருந்த பல மதங்களும் தங்களை வைதிகமானவையாகவே வர்ணித்துக்கொண்டு ஜனங்களைக் கவர்வதாக இருந்தது. இவற்றில் சில ஃபிலாஸஃபியாக அறிவாளிகளைக் கவர்ந்தன; சில தெய்வ உபாஸனைகளாகப் பொது ஜனங்களைக் கவர்ந்தன.

எல்லா உபாஸனா மார்க்கங்களுமே இப்படி இருக்கவில்லை. வாஸ்தவமாகவே வைதிகமாக ஒவ்வொரு ஸ்வாமிக்கும் ஏற்பட்ட உபாஸனைகளும் இருந்தன. ஆனால் ரொம்பவும் மங்கிப்போயிருந்தன. அவைதிகமாயிருந்து கொண்டு வைதிக வேஷம் போடும் தந்த்ரங்களே அதிகமாக ப்ரசாரத்தில் இருந்தன.

இன்னொன்றைக்கூடச் சொல்லவேண்டும். அதாவது, “வேதம் என்ன பெரிய ‘அதாரிடி’? வேதத்தைவிட ஆகமம் (அதாவது உபாஸனா மார்க்கங்களான தந்த்ரங்கள்) தான் ‘அதாரிடி’. இதுதான் பரமாத்மாவே உபதேசித்து ஸ்தாபித்தது” என்று சொல்லிக்கொண்ட அநேக தந்த்ரங்களும் ப்ரசாரத்திலிருந்தன.

வேத மதத்துக்குத் தனிப்பெருமை அது பகவானே ஏற்படுத்தினது என்பதால்தானே? ‘எங்கள் தந்த்ரம்தான் பகவான் ஏற்படுத்தியது’ என்று சில பேர் சொல்லி, அதற்கும் கதை புராணம் எழுதிக் காட்டினபோது-அதோடு, வேதத்தின் அதிகார பேதங்களையும் தளர்த்திவிட்டு, ஜனங்களின் உணர்ச்சிகளுக்கு ருசியூட்டும் சடங்குகளையும் உண்டாக்கிய போது, பல பேர் ‘இதைத்தான் பின்பற்றுவோமே!’ என்று இவர்கள் பின்னே போனார்கள்.


1சிவ மஹிம்ந ஸ்தோத்ரம் – 7

2 ஸ்ரீ ஹர்ஷர் பற்றியும் நைஷதம் பற்றியும் மேலும் சில விஷயங்கள் “பண்பாடு” எனும் பிரிவில் “ஸ்வயம்வரத்தில் அத்வைதம்” என்ற உரையில் காண்க.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is வேதத்தை ஒப்பியும் வேதாந்தத்தை ஒப்பாத மதங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  புரட்சி மதங்கள்
Next