ஆசார்யாளைப் பற்றி சொல்வதுண்டு:
அந்த: சாக்தோ, பஹி: சைவ:, வ்யாவஹாரே து வைஷ்ணவ: என்று. உள்ளுக்குள்ளே சக்தி-அம்பிகையான பராசக்தி. வெளியிலே ரூபத்தைப் பார்த்தால் வெள்ளை வெளேரென்று, விபூதியும் ருத்ராக்ஷமுமாகப் ‘பரமசிவனே வந்திருக்கிறானோ?’ என்று நினைக்கும்படியாக. லோக வ்யவஹாரம் ஓயாமல் ஓடி ஆடிப் பண்ணிக்கொண்டிருப்பதிலோ விஷ்ணுவாகவே இருக்கிறார். வாயாலே ஆசீர்வாதம் பண்ணுவதும் “நாராயண, நாராயண” என்று தான்! ஸ்ரீமுகம் கொடுப்பதெல்லாம் “க்ரியதே நாராயண ஸ்ம்ருதி:” என்று விஷ்ணு ஸ்மரணையோடுதான்! சிவாவதாரம்! செய்வதெல்லாம் நாராயணன் பேரில்! இப்படி சிவ-விஷ்ணு அத்வைதம்!
விஷ்ணுவை வ்யவஹார சக்தி, க்ரியா என்றெல்லாம் சொன்னால் என்ன அர்த்தம்? அவர் அம்பாளே என்று தான் அர்த்தம்!
புருஷ ரூபத்தில் அவதாரமாதலால் அம்பாளின் புருஷ ரூபமான நாராயணனின் பெயரிலேயே எல்லாக் கார்யமும் செய்தார். வெளியிலே காட்டாமல் உள்ளுக்குள்ளே அம்பாள் ஸ்வரூபம். அதாவது ஹ்ருதயத்திலே தாயாராகப் பரம கருணை! அதுதான் அந்த: சாக்த:.
சக்தி, சக்தி என்றால் அந்தக் கருணைதான். அது இல்லாமல் சிவம் இல்லை. சிவம் தானிருப்பதாகத் தெரிந்து கொள்ளவே ஒரு சக்தி இருக்கத்தானே வேண்டும்? சிவம் தன்னையே கருணையாக வெளிப்படுத்திக் கொள்வதும் சக்தி தான்.
அவளுடைய ‘விமர்ச’மில்லாமல் இவருடைய ‘ப்ரகாசம்’ லோகத்துக்கு ஏற்படவே முடியாது என்று தத்வ ரீதியில் சொல்வார்கள்.
ஆனாலும் ஸீதா-ராமர்கள், ராதா-க்ருஷ்ணர்கள் மாதிரி ஸ்திரீ புருஷ ஜோடியாக அவதாரம் எடுக்க முடியாமல், ஸந்நியாஸாவதாரமாக அமையவேண்டும் என்று காலத்தின் ஸந்தர்ப நிர்பந்தம் இருந்ததால், அவளை வெளியிலே காட்டாமல் உள்ளே வைத்துக்கொண்டுள்ள யோகேச்வர அவஸரத்திலிருந்து அவதாரம் நிகழ்த்துவதென்று ஸங்கல்பமாயிற்று. மஹாவிஷ்ணு எப்போதும் லக்ஷ்மியை வெளிப்பட வைத்துக்கொண்டேதான் இருப்பார். அப்படியில்லாமல் அவர் ஏகாங்கியாக நர-நாராயணர்கள் மாதிரி இருந்தாரென்றால் அப்போது அவர் பூர்ண விஷ்ணுவாகத் தெரியமாட்டார்; அம்சாவதாரமென்னும்படிதான் இருப்பார். இப்போதோ கலி கோலாஹலத்தை அடக்குவதற்குப் பூர்ணமான பகவத் சக்தி அவதரிக்க வேண்டியிருந்தது. ஆனாலும் லக்ஷ்மீ ஸமேதரான விஷ்ணு தம்பதி ஸமேதமாக பூர்ணாவதாரம் செய்ய முடியாமல், இப்போது அவதரிக்க வேண்டியவர் ஸந்நியாஸிகத்தான் இருந்தாக வேண்டுமென்றும் இருந்தது. இப்படிப் பார்க்கிற போதும் பரிபூர்ண சிவமாகவே இருப்பவராக தக்ஷிணாமூர்த்தி என்று ஒரு ஏகாங்கி இருப்பது ரொம்பவும் ஸெளகர்யமாகிவிட்டது! பார்வதி ஸமேதராக இருக்கப்பட்ட பரமேச்வரனின் அம்சமாக மட்டும் இல்லாமல் அவருடைய ஸ்வச்சமான பூர்ண ஸ்வரூபமாகவே இருக்கிறவர் தான் தக்ஷிணாமூர்த்தி. ஆகையால் இப்போது அவரிடமிருந்து அவதாரத்தை உத்பவிக்கச் செய்வதே ஸகல விதத்திலும் பொருத்தமுடையதாக இருந்தது.
இப்படியெல்லாம் எல்லாப் பொருத்தங்களும் இருக்கும்படியாகப் பரமாத்மாவின் ஸங்கல்பம் அமைந்தே பரம சுபமான ஸ்ரீ சங்கராவதாரம் ஏற்பட்டது.