தக்ஷிணாமூர்த்தியாக ஆல மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்தான். அசைவதே கிடையாது, கண் பார்க்கிறதில்லை, வாய் பேசுகிறதில்லை என்று இருப்பவர் தான். ஆனாலும் அப்படிப்பட்டவருக்கு இப்போது கருணையில் மனஸ் உருகிக்கொண்டிருந்தது. மனஸும் இல்லாமலிருப்பவர்தான். மனஸ் என்பது போய், ஆத்மா மட்டுமாக இருப்பதுதான் அத்வைதம். தக்ஷிணாமூர்த்தி என்றால் அத்வைத ஸ்வரூபம் என்று அர்த்தம். ஆனாலும் கருணா நிமித்தமாகவே மனஸைப் பண்ணிப் போட்டுக்கொண்டு, ‘ஐயோ, குழந்தைகள் இப்படிக் கெட்டுப் போகிறதுகளே!’ என்று உருகிக்கொண்டிருந்தார். [சிரித்து] அத்வைதத்துக்கு தக்ஷிணாமூர்த்தி என்று ரூபம் மட்டும் எப்படி வரலாமாம்? அதுவும் நம்மிடம் கருணையால்தானே? அப்போ மனஸும்தான் வரட்டுமே!
‘படி தாண்டாப் பத்தினி’ என்று சொல்வார்கள், இந்த நாளில் அப்படிச் சொன்னால் புரியுமோ புரியாதோ? கோஷா என்று சொன்னால் புரியுமோ என்னவோ? வீட்டைவிட்டு அடி எடுத்து வைக்கமாட்டார்கள். குரல்கூட வெளியில் கேட்காமல் இருப்பார்கள். ஆனாலும் குழந்தை தெருவிலே ஓடிப்போய் ஜலதாரையின் ஒட்டில் நின்றுகொண்டு ஸந்தோஷமாக எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது; அதற்குள்ளேயே குதிக்கலாமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால் அவளுடைய கோஷாக் கட்டுப்பாடு நிற்குமா? பரபரத்துக்கொண்டு, சத்தம் போட்டுக்கொண்டு குழந்தையிடம் ஓடித்தானே வருவாள்? அப்படித்தான் தக்ஷிணாமூர்த்தியும் இருந்தார்.
அவருடைய ஸ்வபாவம் சும்மாயிருப்பது. ‘சும்மாயிருப்பதே ஸுகம்’, ‘சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது‘ என்று சொல்கிற, ‘பெரிய சும்மா நிலை’யிலிருப்பது.
துளிக்கூட சும்மா இருக்கமுடியாமல் ஜனங்கள் படாத பாடுபட்டுக்கொண்டு, பிறத்தியாரையும் படுத்திக் கொண்டிருப்பதை அவர் பார்க்கப் பார்க்க, அவர்களுக்கும் ஒன்றும் பண்ணாமல் சும்மாயிருப்பதைச் சொல்ல வேண்டுமென்று கருணை பொங்கிக்கொண்டு வந்தது.
ஒரு மதமா, ஸித்தாந்தமா, அநுஷ்டானமா என்றில்லாமல்தான் ஸாதாரணமாக ஜனங்கள் தங்களையும் ஹிம்ஸைப் படுத்திக்கொண்டு பிறத்தியாரையும் ஹிம்ஸைப் படுத்துவது வழக்கம். ஆனால் இப்போது ஏகப்பட்ட மதங்கள், ஸித்தாந்தங்கள், அநுஷ்டானங்கள் என்று ஏற்பட்டே ஒன்றோடொன்று மோதிக்கொண்டு ஒரே ஹிம்ஸை மயமாக இருந்தது! சரீர ஹிம்ஸையில்லை; புத்திக்கு ஹிம்ஸை!
சும்மாயிருக்க முடியாமல் உடம்பாலே கார்யம் பண்ணித்தான் வீணாகப் போகவேண்டுமென்றில்லை, மனஸினாலே — அதாவது சிந்தனா சக்தியாலே — எத்தனை க்ருத்ரிமாகக் கார்யம் பண்ணமுடியுமோ அத்தனையும் பண்ணி தினுஸு தினுஸான மதங்கள் என்று உண்டாக்கிப் பரப்பினால், சரீர ஹிம்ஸையை விடவும் ஜாஸ்தி ஹானி ஏற்படுத்தலாமென்று இந்தக் காலநிலையில் தெரிந்தது. அதனால், கார்யத்தை நிறுத்துவது மட்டுமல்லாமல் சிந்தையையும் அடக்கிச் சும்மா இருப்பதையே இந்த அவதாரத்தில் முக்யமாகவும் சொல்லணுமென்று பரம கருணையால் அவர் (தக்ஷிணாமூர்த்தி) நினைத்தார். சுருக்கமாகச் சொன்னால், இந்த அவதாரம் ஜனங்களைச் சும்மாயிருக்கப்பண்ணுவதற்காகவே ஆகும்.