இரண்டு தாயார்க்காரர்! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

த்வைமாதுர :

இந்த ச்லோகத்தில் விக்நேச்வரருக்குச் சொல்லியிருக்கிற பேர் இது (த்வைமாதுரன் என்பது) தான். அவருடைய வேறே பெயர் எதுவும் (ச்லோகத்தில்) இல்லை. கணபதி, கணேசர், விக்நேச்வரர், விநாயகர், கஜாநநர், லம்போதரர் என்றிப்படிப் பல பேர்கள் நம் காதில் அதிகம் பட்டிருக்கிற மாதிரி படாத பேர்: த்வைமாதுரர். அப்படியென்றால் “இரண்டு தாயார்களை உடையவர்” என்று அர்த்தம். ‘த்வி மாதா’- இரண்டு தாயார்கள். ‘த்வை மாதுரர்’:- இரண்டு தாயார்களை உடையவர். ‘இரண்டு பெண்டாட்டிக்காரன்’ என்று கேள்விபட்டிருக்கிறோம். இவரோ நாம் கேள்விப்படாத விதமாக இரண்டு தாயார்க்காரர்’!

யார் அந்த இரண்டு தாயார்கள்? ஒன்று, அம்பாள். இது எல்லாருக்கும் தெரிந்தது. இன்னொன்று கங்கை. ஈச்வரனின் தலையின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிற கங்கா தேவியையும் அவருக்குப் பத்னியாகவே சொல்வது வழக்கம்…

அம்பாளுடைய நேத்ரமே ச்ருங்காரம், பீபத்ஸம், கோபம், ஆச்சர்யம், பயம், ஹாஸ்யம் முதலான எல்லா நாடக ரஸங்களையும் ஒவ்வொரு ஸந்தர்ப்பத்தில் காட்டுவதாக ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’ யில் ஒரு ச்லோகத்தில் வர்ணித்திருக்கிறார்.* அங்கே அம்பாளுடைய நேத்ரம் எப்போது கோபக் குறிப்பைக் காட்டுகிறது என்று சொல்லும் போது ‘கங்கையைப் பார்க்கும்போது’ என்றே சொல்லியிருக்கிறது: ஸ ரோஷா கங்காயாம் . கங்கையை பார்த்தால் அம்பாளுக்கு சக்களத்திக் காய்ச்சல்! அதுதான் கோபம் கோபமாக வருகிறது!

ஆனால் அன்புருவமான பிள்ளையாரோ, ‘கங்கை யார்? நம்முடைய பிதாவின் பத்னி. அதனால், அவளையும் அம்பாளைப் போலவே எனக்கு இன்னொரு அம்மாவாக வைத்துக் கொள்ளுவேன். த்வைமாதுரன் என்றே பேர் பெறுவேன்’ என்று ஒற்றுமைக்கு உருவமாக இருந்துகாட்டுகிறார்!

எல்லாருக்கும் தெரிந்த கதை சிவ நேத்ரத்திலிருந்து பிறந்த அக்னிப் பொறிகள் ஆறும் கங்கையிலே தங்கித்தான் அப்புறம் ஸுப்ரஹ்மண்ய மூர்த்தியாயிற்று என்பது. பொறிகள் ஆறு; கங்கையும் ஆறு! கங்கையில் தங்கி உத்பவித்ததால் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி வெளிப்படையாகவே கங்கையின் புத்திரர். பிதாவின் பத்தினி என்ற அளவில் உபசாரமாகப் பிள்ளையார் அவளுக்கு மாத்ரு ஸ்தானம் கொடுத்தது போலில்லாமல் வ்யக்தமாக அவளுடைய ஸம்பந்தம் பெற்றே ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தோன்றினார். அதனால்தான் (கங்கா புத்ரர் என்று பொருள்பட) அவருக்கு காங்கேயர் என்றே பெயர்.

பிள்ளையாருக்கு கங்கையுடன் நேர் ஸம்பந்தமில்லாத போனாலும் அவளுக்குக் குழந்தையாகத் தம்மைக் கருதிக் கொண்டதுதான் விசேஷம்! எல்லாரையும் அணைத்துப் போகிற அவருடைய அன்புள்ளத்துக்கு அது அடையாளம். குமாரஸ்வாமி பரமேச்வரனின் நேத்ராக்னியிலிருந்து உண்டானாரென்றால், விக்நேச்வரர்தான் அம்பாள் தன் தேஹத்திலுள்ள சந்தனப் பூச்சு, வாஸனைப் பொடி, மஞ்சள், குங்குமம் இத்யாதிகளை அப்படியே தன் தலையோடு கால் வழிந்து எடுத்துத் தன்னுடைய திவ்ய ஹஸ்தத்தினாலேயே பிம்பமாகப் பிடித்து வைத்து உயிர் கொடுத்து உருவாக்கின மூர்த்தி. இப்படிப் பூர்ணமாக அம்பாள் ஸம்பந்தத்தில் உத்பவித்தும் அவர் கங்கையையும் அவளுக்கு ஸமமாக, இன்னொரு தாயாராகப் பார்ப்பது அவருடைய குணச் சிறப்பைக் காட்டுகிறது. ஸ்திரீகள் அத்தனை பேரையும் தாயாராகவே பார்த்த சுத்த ப்ரஹ்மசர்ய மூர்த்தியான அவர், அவர்களில் முக்யமாக ஒன்று அம்பாள், இன்னொன்று அவளுக்கு எதிரியான கங்கை என்று வைத்துக் கொண்டிருக்கிறார்! இப்படி அவர் இருவருக்குப் பிள்ளையான த்வைமாதுரராக இருப்பவர்.

நதிகளில் உருண்டு புரண்டு விளையாடி நீச்சலடிப்பதில் யானைகளுக்கு அலாதிப் ப்ரியம். குதிரை, மாடு, சிங்கம், புலி முதலானவற்றுக்கு இப்படிச் சொல்ல முடியாது. மஹிஷமானால், குட்டையைக் குழப்பிக்கொண்டு சேற்றில் ஸந்தோஷப்படும்! யானைக்குத்தான் நீர் விளையாட்டில் ரொம்பவும் இஷ்டம். அந்த ஒரு மிருகத்துக்குத்தானே தும்பிக்கை இருக்கிறது? அதிலே ஜலத்தை எடுத்து பீய்ச்சாங்குழல் அடிக்கிற மாதிரி வாரி வீசிக்கொண்டு அமர்க்களப்படுத்தும். தன்னுடைய அத்தனாம் பெரிய தேஹத்தைக் கொண்டு அநாயாஸமா நீந்தி விளையாடும். காடுகளில் கூட்டங்கூட்டமாக நதிகளுக்குப் போய் அல்லோலகல்லோலப் படுத்துவது யானையின் வழக்கம். பாகவதத்தில் கஜேந்த்ர மோக்ஷக் கதையில் இப்படியொரு காட்சியை ரொம்பவும் இயற்கையாக வர்ணித்திருக்கும். யானைமுகராக இருப்பதால் தானோ என்னவோ விக்நேச்வரருக்கு கங்கா நதியிடம் புத்ர வாத்ஸல்யம்!

ஸாதாரணமாக யாராவது ஈவிரக்கம், அன்பு, அருள் இல்லாமலிருந்தால், ‘நீயும் ஒரு அம்மாவின் வயிற்றில் பிறந்தவனா?’ என்று கேட்கிற வழக்கம். அம்மாவைச் சொல்லிப் பிள்ளையைக் குறிப்பிட்டால் பிள்ளை அன்புள்ளம், அருளுள்ளம் உள்ளவன் என்று அர்த்தம். நம்முடைய பிள்ளையார் இரண்டு அம்மாக்காரர் என்றால் அவர் இரட்டிப்பு மடங்கு அன்பும் அருளும் நிறைந்தவர் என்று அர்த்தம்!


*“சிவே ச்ருங்காரார்த்ரா” எனத் தொடங்கும் 51 – வது ச்லோகம்

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is இக-பர பலன்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஆறு தாயார்க்காரர்!
Next