இரண்டு க்ருபைகளா ? : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

குருவே ஈச்வரன், ஈச்வரனே குரு என்கிறபோது குரு க்ருபை என்ற ரூபத்தில் இந்த மஹா பெரிய பலனை அவன் கொடுத்து விடுகிறான் என்று அர்த்தமாகிறது. முதலில் குருவாக உபதேசம் பண்ணுகிறான். அது மூளை லெவலோடு நிற்காமல் அந்தராத்மாவுக்குள்ளே புகுந்து அநுபவமாக வேண்டுமானால் நாம் பரிபூர்ணமான பக்தியை அந்த குருவிடம் செலுத்த வேண்டும். இதற்கு ப்ரதியாக குரு பரம க்ருபை பண்ணுகிறபோது ப்ரத்யக்ஷமான அநுபூதி பிறக்கும்.

இரண்டு பேரிடம் பக்தியா என்கிற மாதிரியே இரண்டு பேருடைய க்ருபையா – ஈச்வர க்ருபை என்று ஒன்று, குரு க்ருபை என்று ஒன்று, இப்படி இரண்டு க்ருபைகளா – என்ற கேள்வி வந்தால் பதில் சொல்வது கஷ்டம்தான். ஒருத்தனுக்கு ஞான ப்ரகாசம் உண்டாக்குவதில் குரு, ஈச்வரன் என்ற இரண்டு பேரின் க்ருபைகளில் ஒவ்வொன்றுக்கும் எத்தனை பெர்ஸென்ட் என்று கணக்குப் பார்க்க வேண்டியதாகும்! (சிரிக்கிறார்.) ஞானப் பிரஸாதமென்பது இரண்டு க்ருபைகளுக்கிடையில் பங்குபோட்டு நடத்தக்கூடிய விஷயமில்லை என்றும், ஈச்வரன் என்ற ஒருத்தனுடைய ஒரே க்ருபைதான் குருவின் மூலமாக குருக்ருபை என்பதாக வருவதும் என்றும் ஆலோசித்துப் பார்த்தால் தெரிய வரும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பலனளிப்பவன் ஈஸ்வரனே!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  எல்லா வணக்கமும் போய்ச் சேருவது ஒருவனையே
Next