அநன்ய பக்தி : ஆதர்சத்துக்கான யுக்தியே : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஆனதினால், இப்போது நான் ஒரே மூர்த்தியிடம் – தெய்வ மூர்த்தியோ, குரு மூர்த்தியோ ஏதோ ஒன்றிடமே – பூர்ண பக்தியும் வைப்பதைப் பற்றி விசாரணை பண்ணி, குருவிடமே அப்படி வைத்துவிட்டால் போதும் என்று முடிக்கப் போவதால் நீங்கள் எல்லாரும் இப்போதே அப்படிப் பண்ண ஆரம்பித்துவிட வேண்டுமென்று அர்த்தமில்லை. (சிரித்துக் கொண்டே) எனக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, என்னுடைய சந்த்ரமௌளீச்வரரை விட்டு விட்டுப் போய் விட்டீர்களானால் என்ன பண்ணுவது? அவரில்லாமல் எனக்கு எப்படி பிக்ஷை, பிழைப்பு நடக்கும்? அவரில்லாமல் மடம் என்ன ஆகிறது? ஆசார்யாள்தானே இப்படி மடங்கள் வைத்து, அவற்றில் தன் பெயரை வைத்துக்கொண்டிருக்கும் குருக்களே இத்தனை ஸ்வாமிகளையும் வைத்துக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் பூஜை செய்யவேண்டுமென்று ஏற்படுத்தியிருக்கிறார்! இது என் பிழைப்பைப் பற்றிய விஷயம். உங்களை எடுத்துக்கொண்டாலும், விதவிதமான மூர்த்திகள் உங்களுக்கு வேண்டித்தானே இருக்கிறது? ஏதோ ஒரு ரூபம், அதிலேயே பூர்ணத்ருப்தி என்கிற எண்ணம் வரவில்லை தானே? பாட்டில் ராகமாலிகை மாதிரி ஸ்வாமியிலும் பலதைக் கோத்துக் கொடுத்தால்தானே ரஸமாயிருக்கிறது? ஆகையினால் நான் ‘ஒன்றிடமே அநன்ய பக்தி’ என்று ப்ரஸங்கம் பண்ணப் போவதெல்லாமும் ஐடியலை ஞாபகப்படுத்தத்தானே ஒழிய அதை இப்போதே அநுஸரிப்பதற்காக அல்ல! யுக்தி அநுபவம் என்று இரண்டு சொன்னேனே, அதிலே யுக்தியாகவே இப்போது அநன்ய பக்தி பற்றிச் சொல்லப் போவது. அது இப்போதே உங்கள் அநுபவமாகி விடவேண்டுமென்று அர்த்தமில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is மாறுபாட்டில் ருசியே மனித இயற்கை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அநன்ய பக்தி; நடைமுறை சிரமங்கள்
Next