வாகீசர் யார் ? : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

வாகீசர் என்பது யார்? திருநாவுக்கரசு ஸ்வாமிகளுக்கு அப்படிப் பேர் என்பது தெரிந்திருக்கலாம். மருள்நீக்கியார் என்பதே அவருக்கு இயற்பெயர். பிற்பாடு அவர் சமண மதத்தில் சேர்ந்து அதிலே ஒரு முக்ய புருஷரானபோது தர்மஸேனர் என்று பெயர் வைத்துக்கொண்டார். அதற்கும் பிற்பாடு அவர் மறுபடியும் நம்முடைய மதத்துக்கே திரும்பித் திருவதிகையில் தம்முடைய முதலாவது தேவாரத் திருப்பதிகம் பாடியவுடன் பரமேச்வரனின் வாக்கே அசரீரியாக எழுந்து அவருக்கு ‘நாவுக்கரசு’ என்ற பெயரைச் சூட்டியது. ‘நாவுக்கு அரசு’ என்பதற்கு ஸம்ஸ்க்ருதம் ‘வாகீசர்’. வாக் – சொல், ஈசர் – அரசர். நாவுக்கு அரசர் என்பது சொல்லுக்கு அரசர் என்பதால் தானே? இதற்கும் அப்புறம் திருஞானஸம்பந்தர் அவரை ‘அப்பரே!’ என்று அழைத்ததால் அப்பர் என்றும் அவருக்கு ஒரு பெயர் ஏற்பட்டுவிட்டது.

ஆனால் இங்கே (பிள்ளையார் ச்லோகத்தில்) சொல்லும் வாகீசர் என்பது அப்பர் ஸ்வாமிகளல்ல. வாகீசர் முதலான தேவர்களைப் பற்றியல்லவா இங்கே சொல்லியிருக்கிறது. தேவஜாதியில் வாகீசர் என்பது யார்?

இரண்டு தேவர்களுக்கு அந்தப் பெயருண்டு. ஒருவர் ப்ருஹஸ்பதி. மற்றவர் ப்ரம்மா.

‘ப்ருஹஸ்பதியோ?’ என்று கேட்கிற அளக்கு விசேஷமான புத்தி ப்ரகாசம் பெற்ற தேவகுரு, வியாழன் என்று சொல்கிறோமே. அவர் ஸகல சாஸ்திரங்களிலும் மஹா கெட்டிக்காரரானதால் வாகீசர் எனப்படுபவர். பேச்சில்வல்ல வாகீசர் அவர். வாகீசர் என்றே அர்த்தம் கொடுப்பதான ‘கீஷ்பதி’ என்ற பெயரும் அவருக்கு உண்டு. ப்ருஹஸ்பதியை ப்ரஹ்மணஸ்பதி என்றும் வேதம் சொல்லும். அறிவும் வித்வத்தும் உருவமான அவருக்குப் பிள்ளையார் ஸம்பந்தம் விசேஷமாக உண்டு. ‘வேதகால ப்ரஹ்மணஸ்பதிதான் புராணகால விக்நேச்வரர்’ என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வார்கள். விநாயகமூர்த்தியின் ஆவாஹனத்தில் பிரஸித்தமாக வழங்கும் வேத ரிக்கே ப்ரஹ்மணஸ்பதிக்கானதுதான்.

தேவர்கள் விதிப்படி குருமுகமாகப் பிள்ளையார் வணக்கம் செய்கிறார்களென்று காட்டுவதற்காக ‘வாகீசாத்யா: ஸுமநஸ:’ என்று சொல்லியிருக்கிறதென்று உள்ளர்த்தம் செய்துகொள்ளலாம். தேவகுருவே பிள்ளையாருக்கு நமஸ்காரம் பண்ணிச் சீடர்களான தேவர்களுக்கெல்லாம் வழிகாட்டுகிறார் என்று தொனிக்கிறது.

வாக்தேவியான ஸரஸ்வதியின் பதியான ப்ரஹ்மாவுக்கும் வாகீசர் என்ற பெயருண்டு. ‘வாக்’ என்றாலே ஸரஸ்வதி. ஸரஸ்வதீ காந்தர் வாகீசர்.

பொதுவாக ‘ப்ரஹ்மாதி தேவர்கள்’ என்று சொல்வதே வழக்கமாதலால் இங்கே ‘வாகீசாதி ஸுமனஸர்கள்’ என்று வருவதைக் கொண்டு, வாகீசர் என்பது ப்ரம்மாவைக் குறிக்கும் என்றே வைத்துக்கொள்ளலாம். ப்ரம்மாவுக்கு உள்ள பல பெயர்களில் ‘வாகீச’ என்பதைச் சொல்லியிருப்பதால் பிள்ளையார் அறிவுக்கும் வித்வத்துக்கும் தெய்வம் என்று உணர்த்தப்படுகிறது. வாக்தேவியான ஸரஸ்வதியின் பதி அவர் என்றால், அவள்தானே அறிவுக்கும் வித்யைக்கும் அதிதேவதையாயிருப்பவள்?

ப்ரஹ்மா ஸ்ருஷ்டிகர்த்தா. ஸ்ருஷ்டி என்றவுடன் காலம் என்ற தத்வத்தைத்தான் முதலில் நினைக்கிறோம். காலத்தை அளப்பதற்குத்தான் வருஷம் என்ற அளவுகோலை வைத்துக்கொண்டிருக்கிறோம். ஆகையால் வருஷப் பிறப்பில் பஞ்சாங்க படனம் பண்ணும்போது ப்ரம்மாவை முதலில் சொல்லி, அப்பேர்ப்பட்ட ப்ரம்மா முதலான தேவர்கள் நமஸ்காரம் பண்ணும் விக்நேச்வரருக்கு வந்தனம் செலுத்துவது பொருத்தமாக இருக்கிறது.

ப்ரம்மாவை வாகீசர் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதால் வாக்கு ஸம்பந்தமாக, அதாவது வாக்கு குறிப்பிடும் அறிவு, வித்வத், வித்யை, இலக்கியம் முதலானவற்றில் மேற்கொள்ளும் எல்லா முயற்சியையும் நிர்விக்னமாக நிறைவேற்றித் தர விக்நேச்வர பூஜை அவசியம் என்று தெரிகிறது. தொன்றுதொட்டு இந்த நம்பிக்கைப்படிதான் ஒரு சுவடி எழுதத் தொடங்கும்போது, அது எந்த விஷயம் பற்றிய சுவடியாயிருந்தாலும் ஸரி, ஆரம்பத்தில் “ஸ்ரீ கணாதிபதயே நம:” என்று போடும் வழக்கம் அநுஸரிக்கப்பட்டு வந்திருக்கிறது. *

கால தத்வத்தை ஸ்ருஷ்டிகர்த்தர் என்ற முறையில் ப்ரம்மா ஞாபகப்படுத்துவதால் அவரால் வழிபடப்பெறும் பிள்ளையாரை வருஷம் தொடங்கும் போது நமஸ்காரம் பண்ணவேண்டுமென்பது போலவே, அவர் (ப்ரம்மா) வாகீசர் என்ற ஸரஸ்வதிகாந்தனாயிருப்பதால், அவர் வழிபடும் பிள்ளையாரை எந்தப் புஸ்தகத் தொடக்கத்திலும் நமஸ்கரிக்க வேண்டுமென்றாகிறது!

இதனால்தான் இந்த (‘வாகீசாத்யா: ஸுமநஸ:’ என்ற) ச்லோகத்தையே ஆதி காவ்யமான ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தைப் பாராயணம் பண்ணும்போதும் மங்கள ச்லோகமாக முதலில் சொல்கிறோம். அதற்கப்புறம்தான் ஸரஸ்வதியைக் குறித்ததான “தோர்பிர்யுக்தா” ச்லோகம் சொல்வது.


*“தெய்வத்தின் குரல்” மூன்றாம் பகுதியில் ‘பிள்ளையார் சுழி‘ என்ற முதல் உரையில் ‘எழுத்துப் பணியில் விநாயகர் தொடர்பு‘ என்ற பிரிவு பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஆனைக்கா ஆனைமுகன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  தேவதையரின் இடையூறும் தீர்ப்பவர்
Next