காஞ்சீபுரத்துப் பெருமாள் கோவில் என்று சொன்னால் இப்போது பிரதானமாகவுள்ள வரதராஜாவைத்தான் நினைக்கத் தோன்றுகிறதென்றாலும், வாஸ்தவத்தில் அந்த நகர எல்லைக்குள்ளேயே ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த “திவ்யதேசங்க” ளாகப் பதினாலு விஷ்ணுவாலயங்கள் இருக்கின்றன1. சைவத்தில் “பாண்டிப் பதினான்கு” என்று தெற்கு ஜில்லாக்கள் அத்தனையிலுமாகப் “பாடல் பெற்ற ஸ்தல” ங்கள் பதினாலுதான் இருக்கின்றனவெனில்,2 வைஷ்ணவத்திலோ தொண்டை மண்டலத்தின் ராஜதானியான காஞ்சீபுரம் ஒன்றுக்குள்ளேயே பதினான்கு முக்யமான விஷ்ணு ஆலயங்கள் இருக்கின்றன! அவற்றில் ஸமீபகாலமாகச் சிற்பச் சிறப்பு, சரித்ர முக்யத்வம் ஆகியவற்றால் வைகுண்டப் பெருமாள் கோயில் அறிவாளிக்களுக்கிடையில் கொஞ்சம் ப்ரபலமாகி வருகிறது. அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன்.
1திருக்கச்சி எனும் அத்தியூர் ( இதுதான் வரதராஜராலயம்), அட்டபுயகரம், திருத்தண்கா (தூப்புல்), வேளுக்கை, பாட்கம், திருநீரகம், நிலாத்திங்கள் துண்டம், ஊரகம், திருவெஃகா திருக்காரகம், திருக்கார் வானம். திருக்கள்வனூர், திருப்பவளவண்ணம், பரமேச்சுர விண்ணகரம் ஆகியன.
2மதுரை, திருப்புனவாயில், குற்றாலம், திரு ஆப்பனூர், திருவேடகம், திருநெல்வேலி, ராமேஸ்வரம், திருவாடானை, திருப்பரங்குன்றம், திருச்சுழியல், திருப்பத்தூர், திருக்கானப்பேர் ( காளையார் கோயில்), திருக்கொடுங்குன்றம் ( பிரான்மலை), திருப்பூவணம் ஆகியன.