பல்லவர் தோற்றுவாய் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

‘போத்ராதிராஜன்’ என்னவென்றால்…

பல்லவம் என்றால் துளிர். போதம் அல்லது போத்ரம் என்றாலும் துளிர் என்றே அர்த்தம். அச்வத்தாமாவிடம் ஒரு வனத்திலே தேவ ஸ்த்ரீ ஒருத்தி ஒரு பிள்ளையைப் பெற்றாள் என்றும், அதைத் துளிர்ப்படுக்கையிலே போட்டுவிட்டு தேவலோகம் போய்விட்டாள் என்றும், அந்தப் பிள்ளைதான் துளிரில் வளர்ந்ததால் ‘பல்லவன்’ என்று பெயர் பெற்று ராஜாவாக ஆட்சிக்கு வந்தான் என்றும் கதை இருக்கிறது. தெலுங்கு தேசத்தில் அமராவதி என்ற இடத்திலுள்ள ஸிம்ஹவர்ம பல்லவனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டில் இந்தக் கதையை விரிவாகச் சொல்லியிருக்கிறது. அரக்கோணத்திற்கு ஏழெட்டு மைலிலுள்ள வேலூர் பாளையம் என்கிற இடத்தில் அகப்பட்ட மூன்றாவது (விஜய) நந்தவர்மாவின் தாம்ர சாஸனத்திலும் இந்தக் கதையைக் குறிப்பிட்டிருக்கிறது. அச்வத்தாமா பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த ப்ராம்மணர். அவருடைய பிதாவான த்ரோணாசார்யாருக்கு பாரத்வாஜர் என்றே ஒரு பெயர். பல்லவ ராஜாக்கள் தங்களை பாரத்வாஜ கோத்ரக்காரர்களாகவே சாஸனங்களில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பல்லவ ராஜாக்களே சாஸனங்களில் இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டாலும், பழைய தமிழ் இலக்கியங்களிலிருந்து ஆராய்ச்சி பண்ணித் தமிழபிமானிகள் பல்லவர்களின் ‘ஆரிஜின்’ (தோற்றுவாய்) பற்றி வேறே ஒரு கதை சொல்கிறார்கள். நாகப்பட்டினத்துச் சோழ ராஜா ஒருத்தனுக்கு நாக கன்னிகையிடம் ஒரு பிள்ளை பிறந்தது; அவள் தொண்டைக் கொடியைச் சுற்றி அந்தக் குழந்தையை ஸமுத்ரத்தில் மிதக்க விட்டுவிட்டாள்; அதுதான் கரையேறித் தொண்டைமான் என்ற பல்லவ ராஜா ஆயிற்று என்று இந்தக் கதை. காஞ்சீ மண்டலத்துக்கே தொண்டை மண்டலம் என்று பெயர். தொண்டைக் கொடியை ஸம்ஸ்க்ருதத்தில் ‘துண்டீரம்’ என்பார்கள். அதனால் ஸம்ஸ்க்ருத நூல்களில் துண்டீர மண்டலம், துண்டீர சக்ரவர்த்தி என்றெல்லாம் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.

குழந்தையை தேவ ஸ்த்ரீ படுக்கவிட்ட படுக்கையானாலும் ஸரி, நாக ஸ்த்ரீ அதன் இடுப்பில் சுற்றிய கொடியானாலும் ஸரி, இரண்டும் துளிர்களால் ஆனதுதான். துளிர்தான் பல்லவம். அதனால், எந்தக் கதைப்படி பார்த்தாலும் பல்லவர் என்ற பெயர் பொருத்தமானதாகிறது.

துளிருக்கேதான் இன்னொரு பேர் போதம், அல்லது, போத்ரம். தமிழிலும் சின்னஞ்சிறு கன்றாக உள்ள செடியைப் ‘போத்து’ என்றே சொல்கிறோம். ‘பல்லவ மஹாராஜா’ என்பதே இன்னொரு விதமான பத ப்ரயோகத்தில் ‘போத்ர அதிராஜன்’, ‘போத்ராதி ராஜன்’ என்றாயிற்று. அதனால்தான் ஸிம்ஹ விஷ்ணுப் பல்லவச் சக்ரவர்த்தி என்பது ‘சிம்ம விண்ண போத்ராதி ராஜன்’ என்றாயிற்று.

‘போத்ர ராஜன்’ என்பதைத் தமிழில் ‘போத்தராயன்’ என்று சொல்லியிருக்கும். ஒரு வேலையும் செய்யாமல் கொழுத்துப் போனவர்களை ‘போத் (த) ராசா’ என்று திட்டுகிற வழக்கம் இருக்கிறதே, இந்த ‘போத் (த) ராசா’ கூட ‘போத்ர ராஜா’ விலிருந்து வந்ததுதான்!

வைகுண்டப் பெருமாள் கோவிலில் ஆரம்பித்தது, விஷ்ணுக்ருஹம், ஸிம்ஹ விஷ்ணு, போத்தராசா என்று எங்கெங்கேயோ போய்விட்டது! விஷ்ணு க்ருஹத்துக்குப் போவதற்குள் எங்கெல்லாமோ சுற்ற வைத்துவிட்டேன்!1

கைலாஸம், வைகுண்டம் என்ற இரண்டில் ராஜஸிம்ஹன் கைலாஸநாதர் கோவில் கட்டினமாதிரியே, அவனுக்குப் பின் இரண்டாவது பட்டமாக வந்த நந்திவர்மா வைகுண்டப் பெருமாள் கோவில் கட்டினான். அதற்குப் ‘பரமேச்வர விஷ்ணுக்ருஹம்’ என்றே பழைய பெயர். விஷ்ணுவின் க்ருஹம், ஆனால் பரமேச்வரனின் பேரில் இருக்கிறது என்கிறபோதே நான் இத்தனை நேரம் சொன்ன சைவ-வைஷ்ணவ ஒற்றுமை தெரிகிறது. ஆனால் இங்கே ‘பரமேச்வரன்’ என்பது கோயில் கட்டிய நந்திவர்மாவின் இன்னொரு பெயரை வைத்துத்தான்! ராஜராஜன் கட்டியது ராஜராஜேச்சுரம், கங்கைகொண்ட சோழன் கட்டியது கங்கைகொண்ட சோழீச்சுரம் என்கிற மாதிரி பரமேச்வரப் பல்லவமல்லனான நந்திவர்மா கட்டிய வைகுண்டப் பெருமாள் கோவில் அவன் பெயரிலேயே பரமேச்வர விண்ணகரம் ஆயிற்று.

கைலாஸநாதர் கோவில் சிற்பங்கள் புராண ஸம்பந்தமானவையாகப் பிரஸித்தி பெற்றிருக்கின்றன. வைகுண்டப் பெருமாள் கோவில் சிற்பங்களோ சரித்ர ஸம்பந்தத்தினால் முக்யத்வம் பெற்றிருக்கின்றன.

ராஜஸிம்ஹன் ரொம்பவும் பேர் புகழோடு ஆட்சி செய்துவிட்டு காலகதி அடைந்தபின் ராஜ்யத்தில் ஒரேயடியான குழப்பநிலை உண்டாயிற்று. சாளுக்ய ராஜாவான விக்ரமாதித்தன் காஞ்சீபுரத்தின்மீது படையெடுத்து வந்து அதைக் கைப்பற்றிக்கொண்டான். ராஜஸிம்ஹனுடைய பிள்ளையும் ஒரு பரமேச்வர வர்மாதான். அவன் ரொம்பவும் ஸ்வல்ப காலமே ஆட்சி பண்ணிவிட்டு, ஸந்ததி இல்லாமலே இறந்து போய்விட்டான். தலைப்பிள்ளைக்கு பட்டம் என்ற நம்முடைய Primogeniture வழக்கப்படிப் பல்லவ வம்சத்தில் ஸிம்ஹ வர்மாவுக்கு அப்புறம் ஸிம்ஹவிஷ்ணு வழியாக ராஜஸிம்ஹனின் பிள்ளைவரை போன நடுக்கிளை அதோடு முடிந்து போயிற்று. அப்புறம் அதன் பக்கக் கிளைகளில் ஒன்றில் வந்த கோத்ர தாயாதியான ஹிரண்யவர்மா என்பவனிடம் பல்லவ ராஜ்யத்தின் முக்யஸ்தர்கள் தூது போய்க் கேட்டுக்கொண்டு, அவனுடைய பிள்ளையான இன்னொரு பரமேச்வர வர்மாவுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் பண்ணினார்கள். அவன்தான் நந்திவர்மப் பல்லவமல்லன் என்று பெயர் வைத்துக்கொண்டு அறுபது வருஷத்திற்குமேல் ஆட்சி நடத்தினான்.

அவனுடைய இன்னொரு பெயரில் அமைக்கப்பட்ட பரமேச்சுர விண்ணகரமாகிய வைகுண்டப் பெருமாள் கோவிலில் இதைப் பற்றிய கல்வெட்டு இருக்கிறது.

இப்படி எழுத்திலே வெட்டியிருப்பதைவிட முக்யமாக இந்தக் கோவிலுக்கு என்ன சரித்ர ப்ரஸித்தி என்றால், மஹாவிஷ்ணுவிலிருந்து ஆரம்பித்து ப்ரம்மா வழியாகப் பல்லவ ராஜாக்கள் அத்தனை பேரின் வம்சாவளிக் கதைகளையும் – இந்தக் கோவிலைக் கட்டினவர் வரையில் – சிற்ப வரிசைகளில் வடித்துக் காட்டியுள்ள ஒரு மண்டபம் அங்கே இருப்பதுதான்.

சரித்ர முக்யத்வம் மட்டும்தானென்றில்லாமல் மத ஸம்பந்தமான விசேஷமும் அந்தக் கோவிலுக்கு உண்டு. இங்கே மூன்று அடுக்குகளாக ஸந்நிதிகளை அமைத்து, பெருமாளின் நின்ற திருக்கோலத்தைக் கீழ் தளத்திலும், இருந்த (உட்கார்ந்த) திருக்கோலத்தை நடு தளத்திலும், கிடந்த (சயனித்த) திருக்கோலத்தை மேல்தளத்திலும் அமைத்திருக்கிறது. ‘அஷ்டாங்க விமானம்’ என்பதாகப் பொதுவாகச் சொல்லப்படுகிற ஆகம விதிகளின்படி இப்படிப் பல அடுக்குகளில் ஆலயம் நிர்மாணிப்பது ரொம்பவும் அபூர்வமே. பாண்டி நாட்டில் திருக்கோட்டியூரிலுள்ள பெருமாள் கோவில், மதுரையிலேயே கூடலழகர் கோவில், காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில், இதைக்கட்டிய நந்திவர்மனின் பிள்ளையான தந்திவர்மன் காஞ்சிக்கு ஸமீபத்திலுள்ள உத்திரமேரூரில் கட்டிய ஸுந்தர வரதப்பெருமாள் கோவில் ஆகிய நாலில்தான் இந்த அமைப்பு இருப்பதாகத் தெரிகிறது.2

நந்திவர்மப் பல்லவமல்லன் திருமங்கையாழ்வாரின் காலத்தில் இருந்தவன் என்று தெரிகிறது. அவனைத் தம்முடைய பாசுரத்தில் குறிப்பிட்டு அவர் பாடியிருக்கிறார்.

இந்த ஆழ்வாரிலிருந்து குரு – சிஷ்ய ஸமாசாரமாக நாம் பார்த்த ஆழ்வாருக்குப் போகலாம். சிஷ்யனுக்காக ஸ்வாமியையே, ‘இப்படிப் பண்ணு, அப்படிப் பண்ணு’ என்று சொல்லித் தாம் சொன்னவண்ணம் செய்ய வைத்த அந்த ஆழ்வாருக்குப் போகலாம். திருமழிசையாழ்வார் என்று பெயர் சொன்னேன், ஞாபகமிருக்கிறதல்லவா?

அவர் காஞ்சீபுரத்திலே ஒரு பெருமாள் கோவிலில் வாஸம் பண்ணி வந்தாரென்று சொல்லி அது எந்தக் கோவில் என்று சொல்வதில்தான் இருந்தேன். காஞ்சியிலுள்ள பதினாலு திவ்ய தேசங்களுக்குள் அவர் இருந்தது திருவெஃகா என்பதிலாகும்.


1உடனிருந்து ஸ்ரீ சரணர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர், நம் ஆலயங்களில் கர்ப்ப க்ருஹத்திற்குச் செல்வதற்குமுன் சுற்றிச் சுற்றிப் பல மூர்த்திகளைப் பார்த்து மகிழ்வதுபோலவே, ஸ்ரீ சரணர்களின் உரைகளில் மைய விஷயத்திற்குப் போவதற்குள் வேறு பல விஷயங்களையும் அறிந்து மகிழுமாறு உள்ளதென்று சொல்லி, எனவே விஷ்ணுக்ருஹத்துக்குள் போவதற்கு முன்பும் ‘பரிவார ஸமாசாரங்களாகப்’ பல தெரிந்துகொள்வது பொருத்தமாகவே இருக்கிறது என்றார். அதை ஸ்ரீ சரணர்கள் வெகுவாக ரஸித்து, இதன் பின் உரையாடலில் கலந்துகொள்ள வந்த இன்னோர் அன்பரிடமும் திரும்பக் கூறினார்.

2 ஸ்ரீ சரணர்களின் திருவுள்ளப்படி சென்னை பெஸன்ட் நகர் கடற்கரையில் மஹாலக்ஷ்மிக்கு எழுப்பப்பட்டுள்ள ஆலயமும் அஷ்டாங்க விமான அமைப்பிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பல்லவரும் சைவ-வைணவமும்;வைகுண்டப் பெருமாள் கோயில்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  திருவெஃகா பெருமாளின் பெருமை
Next