அவருக்கு (யதோக்தகாரி என்ற) அந்தப் பெயர் வருவதற்கு முற்பட்ட காலத்திலேயே திருமழிசையாழ்வார் அவரை இஷ்டமூர்த்தியாக உபாஸித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அத்யந்த சிஷ்யனாக ஒரு பையன். கணிகண்ணன் என்று பேர். அவன் பிறந்ததே ஆழ்வார் அநுக்ரஹத்தில்தான். அவனுடைய பெற்றோருக்கு ரொம்ப காலமாக ஸந்ததியில்லை. அவர்கள் நித்தியம் ஆழ்வாருக்குப் பால் கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். யோக நிஷ்டையிலேயே போய்க் கொண்டிருந்த ஆழ்வார் எப்போதாவதுதான் கண்ணைத் திறப்பார். எதுவும் ஆஹாரம் பண்ணுவதில்லை. இந்தப் பாலை மட்டுந்தான் கொஞ்சம் குடித்துவிட்டு பாக்கியை அவர்களுக்கே கொடுத்துவிடுவார். ப்ரஸாதமாக அவர்கள் அதைக் குடிப்பார்கள். அதன் பலனாகத்தான் அவர்களுக்குப் புத்திரன் பிறந்தான்.
கணிகண்ணன் என்ற அந்தப் பிள்ளை குழந்தைநாளிலிருந்தே ஆழ்வாரிடம் வந்து அந்தரங்க சிஷ்யனாகிவிட்டான்.
ஒரு நாள் அவன் கோவிலுக்குப் போகும்போது அங்கே ஒரு தொண்டு கிழவி, முதுகு நன்றாகக் கூனிப் போனவள், எலும்பும் தோலுமாக ரொம்பவும் ச்ரமப்பட்டுக் கொண்டு பெருக்கி, மெழுகி, கோலம் போட்டுக் கைங்கர்யம் செய்வதைப் பார்த்தான். உடம்பு கொஞ்சங்கூட முடியாவிட்டாலும், மூச்சு போகும் வரையில் பகவத் கைங்கர்யம் பண்ணாமலிருப்பதில்லை என்ற த்ருடமான பக்தியிலேயே அவள் தொண்டு புரிவது தெரிந்தது. கணிகண்ணனுக்கு அப்படியே மனஸ் உருகிவிட்டது. ‘ஐயோ, இவளுக்கு நாம் உபகாரம் பண்ணவேண்டாமா? எப்படிப் பண்ணுவது? என்று மனஸார நினைத்தான்.
இந்த மாதிரிப் பெரிசாக ஒரு காருண்ய சிந்தனை வந்தால் அப்போது தன்னால் குருவுடைய அநுக்ரஹ சக்தி சிஷ்யனுக்குள்ளும் ஆவிர்பவித்துவிடும். ஈச்வரனிடமிருந்து குரு பெற்றிருக்கிற சக்தியை குருவிடமிருந்து சிஷ்யனும் பெற்றுவிடுவான். அந்த விதத்தில் ஆழ்வாரின் அநுக்ரஹ சக்தி அந்த நிமிஷத்தில் கணிகண்ணனுக்கே வந்துவிட்டது.
தன்னை மறந்த நிலையில் அந்தக் கிழவியிடம்போய் அன்போடு அவள் முதுகைத் தடவிக்கொடுத்தான்.
உடனே, அநுக்ரஹ சக்தியினால் அவளுடைய கூன்முதுகு நேராக நிமிர்ந்தது. அது மட்டுமில்லை. எலும்பும் தோலுமாக, விருத்த தசையிலிருந்த கிழவி அந்த க்ஷணத்திலேயே நல்ல ஆரோக்யமுள்ள யுவதியாக மாறிவிட்டாள்.
மதுராபுரியில் – வட மதுரை என்பதில் – க்ருஷ்ண பரமாத்மா குப்ஜை (கூனி) க்கு இதே போன்ற அநுக்ரஹம் தான் பண்ணினார். அது ஸப்த மோக்ஷபுரிகளில் ஒன்று. காஞ்சிதான் அந்த ஏழு மோக்ஷபுரிகளுக்குள் தக்ஷிண தேசத்தில் இருக்கப்பட்ட ஒரே ஒரு க்ஷேத்ரம். வடக்கே பகவான் பண்ணின அத்புதமான அருளை தெற்கே அவனுடைய அடியார்க்கடியானே பண்ணிவிட்டான். ஆழ்வார் பகவானுடைய அடியார். கணிகண்ணன் ஆழ்வாருக்கு அடியான்.
‘கூன் பாண்டியன்’ என்றே சொல்லப்பட்டவனைத் திருஞானஸம்பந்தர் ‘நின்ற சீர் நெடுமாறன்’ என்பவனாக நிமிர்த்திய கதையும் நினைவு வருகிறது.
கணிகண்ணன் குமரியாக்கிய கிழவி யாரென்றால் கிழவியாவதற்கு முந்திக் காஞ்சீபுரத்து ராஜாவின் ஸபையில் தாஸியாக இருந்தவள். பிற்பாடு நிஜமாகவே ‘தேவதாஸி’ யாகி ஸ்வாமியின் கைங்கர்யத்தில் ஈடுபட்டவள்.
‘அடடா, இந்த பாகவதோத்தமருடைய அநுக்ரஹத்தால் இப்படி நல்ல பலம் வந்துவிட்டதே! இதை வைத்துக் கொண்டு பெருமாள் ஸேவையிலேயே ஸதா காலமும் இருந்துவிட வேண்டும்’ என்று யுவதியான பின்பும் அவள் தீர்மானம் பண்ணிக்கொண்டு, அப்படியே செய்ய ஆரம்பித்தாள்.
கிழவி குமரியானால் ஊர் உலகமெல்லாம் ஆச்சர்யப்படாதா? எங்கேயும் அதே பேச்சாகத்தானே இருக்கும்? காஞ்சீபுரத்தில் இருந்துகொண்டு ஆட்சி நடத்திய பல்லவ ராஜாவின் அரண்மனைக்குச் சேதி போயிற்று. ராஜாவும் அப்போது வ்ருத்தாப்ய தசையில் இருந்தான். தனக்கு ப்ரியமாக இருந்தவள் குமரியாகிவிட்டாள் என்றதும் அவனுக்குத் தகாத சபலம் ஏற்பட்டது.
கணிகண்ணனை வரவழைத்து, “என்னையும் இளமையாகப் பண்ணப்பா!” என்றான்.
கணிகண்ணன் பரிஹாஸமாகச் சிரித்தான். குருவே ஸகலமும், அவரே சரணம் என்று இருந்த அவனுக்கு ராஜா, கீஜா யாராயிருந்தாலும் பொருட்டாகத் தெரியவில்லை. யாராயிருந்தாலும் தான் கொஞ்சங்கூட பயப்படாமல், பவ்யப்படாமல் தர்மப்படி நடக்கணும், அவர்களுக்கும் தர்மத்தைச் சொல்லணும் என்ற தீரம் அவனுக்கு இருந்தது.
ராஜாவைப் பார்த்து, “நானா அந்தக் கிழவியைக் குமரி ஆக்கினேன்? எனக்கு ஏது அந்த சக்தி? என்னுடைய குருநாதருடைய சக்திதான் எனக்குள் புகுந்து கொண்டு அப்படிப் பண்ணுவித்தது” என்றான்.
“அப்படியானால் அந்த குருவையேதான் அழைத்துக் கொண்டு வாயேன்” என்று ராஜா சொன்னான்.
“அவரைப் பற்றி உனக்குத் தெரியாதா? நீ ராஜாவாயிருந்தும் உன்னைப் பார்க்க அவர் இத்தனை காலமாக வராததிலிருந்தே அவரைப் பற்றி நீ தெரிந்து கொண்டிருக்க வேண்டுமே! அவருக்கு பகவானைத் தவிர எவரிடமும் போய் என்னவும் ஆகவேண்டியதில்லை. பகவானையே நினைக்கிறவர்கள், பகவத் கைங்கர்யத்துக்கே ஆசைப்படுபவர்கள் ரொம்பவும் கஷ்டப்படும் போது அவர்கள் யாரானாலும் அவர்களிடம் அவருக்கு ஸ்வாபாவிகமாகக் கருணை உண்டாகி அநுக்ரஹம் செய்து கஷ்டத்தை நிவர்த்தி செய்துவிடுவார். அவர்கள் போய் அவரிடம் சொல்லவேண்டுமென்பதில்லை. அவரும் தாமே அவர்களிடம் போய் அநுக்ரஹம் பண்ண வேண்டுமென்பதுமில்லை. ஏதோ ஒரு கருவி மூலம் அநுக்ரஹம் பண்ணிவிடுவார். அந்த கிழவிக்கு அப்படித் தான் நடந்தது. அவள் தன்னுடைய ஸொந்த சரீர அநுபோகங்களுக்காக யௌவனம் பெறவேண்டுமென்று நினைக்கவில்லை. பகவானுக்கு சரீர கைங்கர்யம் நன்றாகச் செய்ய வேண்டுமென்பதொன்றே அவள் நினைவாயிருந்தது. அதனாலே என் குருவுக்கு தயை பொங்கிக்கொண்டு வந்தது. ப்ரக்ருதி (இயற்கை) நியதியையும் மாற்றினால்கூடப் பரவாயில்லை என்று அவளை யுவதியாக்கினார்.
“நீயோ சரீர போகங்களை அநுபவிக்கவேண்டும் என்ற ஆசையிலேயே யௌவனத்தைக் கேட்கிறாய். இதற்கு அவர் ஒரு நாளும் ஒப்புக்கொண்டு அநுக்ரஹிக்க மாட்டார். யாரானாலும் ப்ரக்ருதி நியதிப்படி ஜரா மரணங்கள் நேரவேண்டியபோது நேரத்தான் செய்யும். நீ போனால் வேறே எவனோ ஒருத்தன் ராஜாவாக வந்து ராஜ்ய பரிபாலனம் பண்ணிவிட்டும் போகிறான். உனக்கு முந்தி எத்தனையோ பேர் ஆட்சி நடத்திவிட்டு அப்புறம் கிழடுதட்டி, ‘போய்த்தானே’ இருக்கிறார்கள்? ஒருவிதமான விசேஷ காரணமுமில்லாமல் உன்னை இளமையாக்குவதற்கு என் குருநாதர் ஸம்மதிக்கவே மாட்டார்” என்று கொஞ்சங்கூட ஒளிவு மறைவில்லாமல் கணிகண்ணன் துணிச்சலாகச் சொன்னான் – பல்லவ ராஜாகிட்டேயே.
ராஜஸ குணமே கொண்ட ராஜாவுக்குக் கோபம் வந்து விட்டது. “உன்னை இந்த ஊரை விட்டே ப்ரஷ்டம் பண்ணுகிறேன்” என்று ஆஜ்ஞை பண்ணினான்.
“நானே இப்படிப்பட்ட ராஜா இருக்கிற ஊரில் இருக்கிறதில்லை என்றுதானப்பா தீர்மானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்!” என்று கணிகண்ணனும் சொல்லிவிட்டு நேரே கோவிலுக்கு, ஆழ்வாரிடம், வந்தான்.
அரண்மனையில் நடந்ததையெல்லாம் அவரிடம் சொல்லி விட்டு ஊரை விட்டுப் புறப்பட்டான்.