வைஷ்ணவ ஆலய மூர்த்திகள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

வைஷ்ணவர்களின் கோயில்களை எடுத்துக்கொண்டால் அங்கே நவக்ரஹங்கள் கூடத்தான் கிடையாது. பெருமாள், பெருமாளோடு இணைபிரியாத தாயார், அவருடைய வாஹனம், அவருடைய அவதாரங்கள், அவரையே சேர்ந்த பார்ஷதர்கள், அவருடைய பக்தியிலேயே ஸதாவும் திளைத்துக் கொண்டிருக்கும் ஆழ்வார்கள், வைஷ்ணவ ஸித்தாந்தத்துக்கே ஏற்பட்ட ஆசார்ய புருஷர்கள் – என்பதாக முழுக்க முழுக்க விஷ்ணு ஸம்பந்தமிருப்பவர்களுக்குத்தான் அவருடைய ஆலயங்களில் இடம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். நவக்ரஹங்களை இப்படிச் சொல்ல முடியாதல்லவா? வைஷ்ணவர்களைப் பற்றி ‘மறந்தும் புறந்தொழார்’ என்பார்கள். பெருமாள், அப்புறம் பெருமாளே ஸகலமும் என்று அவருக்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், ஸேவை செய்கிறவர்கள், வைஷ்ணவ ஸித்தாந்த ப்ரவர்த்தகர்கள் ஆகியவர்கள் தவிர, புறம்பாக உள்ள எவரையும் அவர்கள் தொழ மாட்டார்கள்.

ப்ரஹ்மா விஷ்ணுவின் ஸாக்ஷாத் புத்ரர்தான். தகப்பனாரை மிகவும் மதித்து அவருக்கு அடங்கியே இவர் இருந்ததாகத்தான் புராணங்களிலிருந்து தெரிகிறது. ஆனாலும் அவரிடமே உருகி உருகி பக்தி பண்ணிக்கொண்டு அவர் இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்ருஷ்டி என்று தனக்கு தனி ஆபீஸ் வைத்துக் கொண்டுதான் நடத்திவருகிறார். அதாவது, வைஷ்ணவர்கள் முழு முதற்கடவுளாகக் கருதும் நாராயணனே த்ரிமூர்த்திகளில் ஒருவரான பாலனகர்த்தாவாக ஒரு வேஷம் போட்டுக் கொள்ளும்போது, அந்த த்ரிமூர்த்திகளில் இன்னொருவராக, அதாவது அவருக்கு ஸம ஸ்தானத்திலிருப்பவர் போல, இவர் ஸ்ருஷ்டி கர்த்தாவாக இருக்கிறார். பெருமாளின் அவதாரமாகவேயோ, அல்லது அடியாராகவோ இருப்பவருக்குத்தான் வைஷ்ணவ ஆலயங்கள் இடம் தருமே தவிர, அவருக்கு ஸமதை மாதிரி ஒரு ஸ்தானத்திலுள்ள இன்னொருவருக்குத் தராது. அதனால்தான் விஷ்ணு ஆலயங்களிலும் ப்ரம்மா இல்லை போலிருக்கிறது!

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பூஜை இல்லாத காரணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஆகமத்தில் ப்ரம்மா
Next