ஜன்மாவைக் கொடுக்கிறவர், மறக்கமுடியாததாகத் தலையில் எழுதிவிடுகிறவர் – அதற்குப் பேரே ‘ப்ரம்ம லிபி’ என்றுதானே சொல்கிறோம்? – என்பதற்காக ப்ரம்மாவைப் பூஜிக்க மாட்டோமென்றால் அது வாஸ்தவத்தில் ஸரியில்லைதான். எய்தவன் இருக்க அம்பை நொந்து கொள்கிற காரியம்தான். நொந்துகொள்ள வேண்டியது நம்மையேதான். ப்ரஹ்மாவை அல்ல. பூர்வத்தில் நாம் ஏகமாகப் பண்ணி, தீர்ந்துபோகாமலே பெரிசாகக் கர்மா மூட்டையைக் கட்டியிருக்கிறோம். நாமே கட்டிக்கொண்ட மூட்டைதான். அவர் (ப்ரம்மா) எதையோ பிடித்துப் போட்டுக் கட்டவில்லை. அத்தனை கர்மாவையும் ஒரு புருஷாயுஸில் அநுபவித்துத் தீர்க்கமுடிவதில்லை. தேஹ தர்மமென்று ஒன்றை ஈச்வரன் வைத்திருப்பதில் அது வ்யாதி, வக்கை என்று எதற்கோ ஆளாகி ஒரு நாள் ஜீர்ணித்து (அழிந்து) போகிறது. அதற்குள் கர்மா தீர்ந்திருக்கவில்லை. மூட்டையில் பாக்கியிருக்கும்போதே சரீரம் போய்விடுகிறது. இப்போது என்ன பண்ணுவது? சரீரத்தை விட்டுப்போன உயிருக்கு மோக்ஷம் கொடுத்து அதைப் பரமாத்ம தத்வத்தில் கரைப்பதற்கில்லை. இத்தனை கர்மா பாக்கி இருப்பவர்களுக்கு அந்த நித்யானந்த நிலையை எப்படி பகவான் தருவான்? பின்னே அந்த உயிர் என்ன ஆவது? ஆவியாக, பேயாக, பிசாசாக உலாவ விடலாமா என்றால் மநுஷ ரூபத்தில் பண்ணிய கர்மாவை ஆவி ரூபத்தில் தீர்த்துக் கொள்ளமுடியாது. ஆனால் அந்த ஆவிக்கும் க்ஷூத் – த்ருஷ்ணாதிகள் (பசி, தாஹம் முதலியன) உண்டு. ஆகையால் கர்மாவையும் தீர்க்காமல், பசி, தாகம் என்று தவித்துக்கொண்டு அது பாட்டுக்குச் சிரகாலமும் (என்றென்றைக்கும்) திரிய வேண்டியதாகத் தானிருக்கும். இவை தீர யாரையாவது பிடித்து ஆட்டி, அவர்களை உறிஞ்சி ஆஹாரம் முதலானவற்றைப் பெற்று பாப மூட்டையை ஜாஸ்தியாக்கிக் கொள்ளும். இப்படியெல்லாம் ஆகாமலிருப்பதற்குத்தான் இன்னொரு உடம்புக்குள் சேர்ந்து இன்னொரு ஜன்மா தருவது என்று பரமாத்மா திட்டம் பண்ணி, இந்தக் கார்யத்தைச் செய்யும் அதிகாரியாக ப்ரஹ்மாவை வைத்திருக்கிறான். நல்லதைப் பண்ணி நாம் மூட்டையை கரைத்துக் கொள்வதற்காக அவன் கருணையுடன் மறுபடி மறுபடி சான்ஸ் கொடுக்கிறானென்பதே உண்மை நிலை. அப்படியிருக்க நாம் சான்ஸை தவறவிட்டு, மேலும் தப்புப் பண்ணிக்கொண்டே மூட்டையை இன்னும் பெரிசாக்கிக் கொண்டு, இன்னொரு ஜன்மா, அப்புறமும் பல ஜன்மாக்களென்று ஆக்குகிறோமென்றால் இதற்கு ப்ரஹ்மாவிடம் குறைபட்டுக்கொண்டு என்ன புண்யம்?
ஆனாலும் நம்முடைய நிலையில், இப்படி இந்த ஸம்ஸாரத்தில் மொத்துப்பட்டுக் கொண்டு கிடக்கும்போது, ஜன்மாவைத் தரும் ஸ்ருஷ்டிகர்த்தாவைப் பூஜிக்கவேண்டும் என்ற பக்தி தோன்றத்தான் மாட்டேனென்கிறது.