ப்ரம்மாவுக்கு மட்டும் ஏன் விலக்கு ? : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஒன்றைச் சொல்லப் புகுந்தால் இன்னொன்று அகப்படுகிறது! ப்ரம்மாவுக்குக் கோவில் இல்லாமலிருப்பதற்கு இப்போது இன்னொரு காரணம் கிடைக்கிறது.

ஒருத்தருக்குக் கோவிலெடுத்துக் கும்பிடவேண்டுமென்றால் ஒன்று, அவர் ஸகல சக்த பரமாத்மாவாக இருக்க வேண்டும். அல்லது அவர் அதிகாரம் பெற்றிருக்கும் விஷயம் நமக்கு வேண்டியதாக இருக்க வேண்டும். செல்வம் தருவது (லக்ஷ்மி), அறிவு தருவது (ஸரஸ்வதி), விக்னத்தை போக்குவது (பிள்ளையார்), ஆரோக்யம் தருவது (தன்வந்தரி; ஸூரியபகவானும்தான்), அல்லது நவக்ரஹங்கள் மாதிரி நமது ஜாதக பீடைகளைப் போக்குவது, ஐயனார் மாரியம்மன் மாதிரி துஷ்ட சக்திகளையும் நோய்நொடிகளையும் போக்குவது – என்றிப்படி ஒருவர் அதிகாரம் பெற்றுள்ள விஷயம் நாம் வேண்டிப் பெறக்கூடிய ஒன்றை அருளுவதாக இருக்க வேண்டும். ஸ்ருஷ்டியதிகாரத்தில் இப்படியன்றுமில்லை என்று முன்னேயே பார்த்தோம். இல்லாவிட்டால் (ஆலய வழிபாட்டுக்குரிய ஒரு மூர்த்தி) ஒரு பெரிய அடியாராகவோ, ஆசாரியராகவோவாவது இருக்கவேண்டும். ப்ரஹ்மாவானால் இதில் எந்தத் கணக்கிலும் சேர்வதாகத் தெரியவில்லையோல்லியோ?

அதனால்தான் நவக்ரஹங்கள், ஆழ்வார் – நாயன்மார், மாரியம்மன் – இருளன் – வீரன் ஆகியவர்களுக்குக்கூடக் கோவில் இருந்தும் மும்மூர்த்தியில் ஒருவரும், சதுர்முகங்களால் சதுர்வேதங்களை ஸதா ஓதிக் கொண்டிருப்பவருமான ஒரு பெரிய தெய்வத்திற்கு மட்டும் கோவில் இல்லை. பாவமாகத்தான் இருக்கிறது!

பரமாத்மாவாகவே தம்மை அவர் தெரிந்துகொள்ளவில்லை, அல்லது தெரிந்து கொண்டாலும் அப்படிக் காட்டிக் கொள்வதில்லை என்பதால் அவருக்குப் பூஜையில்லை; அதோடு ஒரு வீரன், இருளன் மாதிரியான க்ஷூத்ரதேவதை கொஞ்சங்கூடப் பரமாத்ம பாவமே இல்லாததாயிருந்தாலும், அதனாலும் நமக்கு அநுகூலமாக ஒரு கெட்டதை நிவ்ருத்தி செய்யமுடிகிறபோது, ஸ்ருஷ்டிகர்த்தா என்பவர் மட்டும் அப்படி எதுவும் செய்யமுடியாததால் அவருக்குப் பூஜை இல்லை என்று சொன்னால் ஒரு கேள்வி கேட்கலாம். “எந்தவிதமான அநுக்ரஹ சக்தியுமில்லாத ஒரு மாதா, பிதா, பதி போன்றவர்களைப் பூஜித்தால் கூட, அவர்களுக்கு ஸ்வயமாக அருள் சக்தியோ ஞானமோ கொஞ்சமும் இல்லாவிட்டாலும்கூட, அவர்களுக்குள்ளேயும் பரமாத்மா உட்கார்ந்திருப்பதால், பூஜிக்கிற நமக்கு அவர்கள் மூலமாக அந்தப் பரமாத்மாவே அநுக்ரஹித்துவிடும் என்று சொல்லியிருக்கிறதல்லவா? நீங்களே கூடச் சொல்லியிருக்கிறீர்களே! ‘நம்முடைய பக்தியும், சரணாகதியும்தான் முக்யம். அது யாரைக் குறித்து என்பது முக்யமில்லை. யாரைக் குறித்ததானாலும் நம்முடைய பக்தி சுத்தமானதாக இருந்தால் ஸர்வாந்தர்யாமியான பரமாத்மா நமக்கு அநுக்ரஹம் பண்ணிவிடுவார்’ என்று சொல்லியிருக்கிறீர்களே! அப்படியிருக்கும்போது, ஒரு க்ஷூத்ர தேவதையையோ, ஸாதாரண மநுஷப் பிறவிகளான ஒரு அப்பா – அம்மாவையோ கூட வழிபட்டுப் பரமாத்மாவின் அநுக்ரஹத்தைப் பெறமுடியும் என்னும்போது, ப்ரஹ்மா ஒருத்தரை மாத்திரம் இந்தக் கணக்கிலும் சேர்க்காமல் ஏன் ஒதுக்கி வைக்கணும்? அவர் என்ன பாவம் பண்ணினார்?” என்று கேட்கலாம்.

பாவமே பண்ணவில்லை. அவருக்கு ஒரு தனிஸ்தானம் கொடுத்து உசத்தித்தான் வைத்திருக்கிறது. ஸர்வ சக்த பரமாத்மா என்று வைக்காவிட்டாலும், அதற்கு அடுத்த படியில் அவருக்குத்தான் புராண, சாஸ்த்ரங்களில் இடம் கொடுத்திருக்கிறது. ஸூர்யன், சந்த்ரன் முதலான நவக்ரஹங்களும் தேவராஜாவான இந்த்ரனும் கூட அவர் காலிலே நிறைய விழுந்திருப்பதாகப் பார்க்கிறோம். ஈச்வரகோடியைச் சேர்ந்த மூர்த்தியாக ப்ரஹ்மா இல்லாவிட்டாலும் அப்படிப்பட்ட மூர்த்திகளிடம் ஏனைய தேவதைகளைவிட நெருங்கிப் பழகுபவர். அதனால் ஏனைய தேவர்கள் ஸுலபத்தில் தாங்களாகப் பிடிக்க முடியாத சிவன், விஷ்ணு, அம்பாள் முதலியவர்களிடம் இவர் அவர்களை அழைத்துக்கொண்டு போய் ‘ரெகமன்ட்’பண்ணுவார். அதனால்தான் அவர்கள் இவர் காலில் வந்து விழுவது. தகப்பனார், ஈச்வர கோடியைச் சேர்ந்தவர் – அப்படிப்பட்ட விஷ்ணுவே அஸல் மநுஷன் மாதிரி வேஷம் போடுவது என்று தீர்மானித்துக் கொண்டு ராமாவதாரம் பண்ணிய காலத்தில் (ராவணவதமாகி, ஸீதை அக்னி ப்ரவேசம் செய்யும் கட்டத்தில்), “நீ வெறும் மநுஷ்யனா? ஸாக்ஷாத் நாராயணனல்லவா நீ? இந்த ஸீதை மஹாலக்ஷ்மியல்லவா?” என்று ஆகாசத்திலே வந்து ஞாபகப்படுத்தியது ப்ரஹ்மாதான். அவருக்கு எவ்வளவு சக்தி என்பதற்கு, இன்றைக்கும் ஒரு விஷயத்தைத் தலை தூக்க விடாமல் முடித்துப்போடும்போது “ப்ரஹ்மாஸ்திரம் போட்டாச்சு” என்று சொல்வதே அத்தாட்சி.

இப்படியிருந்தாலும் ஒரு ‘பெக்யூலியர் பொஸிஷ’னில் (தமக்கே உரிய ஒரு விசித்ரமான நிலையில்) அவர் இருப்பதால் தான் அவருக்கு மட்டும் கோயில் இல்லாமல் வைக்கும்படி ஆகியிருப்பதாகத் தோன்றுகிறது.

அவர் ஏதோ பாவம் பண்ணினார், ‘பெக்யூலியர் பொஸிஷ’னில் இருக்கிறார் என்று சொல்வதைவிட, நாம் தான் ஏதோ பாவம் பண்ணி, நம்முடைய மனஸின் ஸ்வபாவம் ஒரு ‘பெக்யூலியர் பொஸிஷ’னில் இருப்பதால் நம்மால் அவரைக் கோவிலில் வைத்து வழிபட முடியவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.

பரமாத்மா எவருக்குள்ளேயும் இருந்துகொண்டு, அந்த ஒருவரிடம் நாம் பக்தி பண்ணினால் அநுக்ரஹித்து விடுவாரென்றபடி ப்ரஹ்மாவுக்குள்ளேயும் இருந்துகொண்டு பண்ணத்தான் செய்வார். அதில் ஸந்தேஹமேயில்லை. ஆனால், கஷ்டம் என்னவென்றால் நம்மால் ப்ரஹ்மாவை பக்தி பண்ண முடியாமலிருப்பது தான்! நாம் மட்டும் ப்ரஹ்மாவை வழிபட்டு விட்டோமோ, நிச்சயமாக அவர் மூலமும் ஸர்வாந்தர்யாமியான பரமாத்வினால் நமக்கு வேண்டியது அநுக்ரஹிக்கப்பட்டுவிடும். ஆனால் அப்படி வழிபடவிடாமல் நம் மனஸின் இயற்கை செய்கிறது. நம் மனஸினால் சிவன், விஷ்ணு, தேவி, முருகன் போன்றவர்களைப் பரமாத்மாவே என்று வழிபட முடிவதுபோல இவரைச் செய்ய முடியவில்லை. எதனாலோ இவரை அப்படி முழுதற்தெய்வமாக வழிபடும் நடைமுறை இல்லாமலே இருந்திருப்பதால் இவருக்குப் பரமாத்ம ஸ்தானம் கொடுத்துப் பார்ப்பதற்கு நம் மனஸினால் முடியவில்லை. ஆசார்யாள் ஷண்மதம் என்று ஸ்தாபித்த காலத்திலேயே அவற்றில் விஷ்ணுமதம், சிவமதம் ஆகியவற்றோடு ப்ரஹ்ம மதம் என்று ஸ்தாபிக்கக் காணோமே! (ஷண்மதங்களில் ஒன்றாக) ஸூர்ய மதத்தைக்கூட அவர் ஸ்தாபித்திருந்தும் த்ரிமூர்த்திகளில் ஒருவரான இவர் பெயரில் ஒன்று ஸ்தாபிக்கத்தானே இல்லை? இப்படி நெடுங்காலமாக இருந்து வந்திருப்பதால் இப்போது நம்மாலும் இவரை முழுமுதலாக பாவிக்க முடியவில்லை.

ஒரு குறிப்பிட்ட அதிகாரம் மாத்திரம் கொண்ட தேவதையைக்கூட நாம் வழிபட ஆரம்பித்துவிட்டால், அப்புறம் அதனிடமே ப்ரியம் உண்டாகி, அதுவே நம் இஷ்ட தேவதையாகிவிட, அதன் பிற்பாடு அதுவே நம்மைப் பொறுத்தமட்டில் நமக்கு ஸகலவித அநுக்ரஹமும் செய்யுமென்ற அநன்ய பக்தி ஏற்பட்டு அதை முழுமுதலாகப் பூஜிக்க முடிகிறது. ஆனால் இவர் விஷயமாகவோ, முதலுக்கே மோசமாக, ‘ஜன்மா தருவது’ என்பதான இவரது அதிகாரமே நமக்கு இஷ்டமில்லாத விஷயமாகிவிடுவதால், இவரை வழிபடவேண்டுமென்ற எண்ணம் ஆரம்பத்திலேயே நமக்குத் தோன்றுவதில்லை.

யாராயிருந்தாலும் அவர்மூலம் பரமாத்மா அருள்வார் என்றாலும், நாம் பல காரணங்களுக்காக ப்ரியப்பட்டு வழிபடக் கூடியவர்களாக இன்னும் எத்தனையோ தேவதைகள் இருக்கும்போது, அப்படி நம் ப்ரியத்தை விசேஷமாக ஸம்பாதிக்க முடியாத ஒருவரிடம் – அவர் தாமே பரமாத்ம நிலையிலிருந்துகொண்டு அநுக்ரஹிப்பாரென்று நமக்குத் தோன்றாதபோதிலும், அவரிடம் நமக்காக இயற்கையில் ஒரு விசேஷபக்தியும் சுரக்காமலிருந்தபோதிலும், அப்படிப்பட்ட ஒருவரிடம் – போய் இவர் மூலமும்தான் பரமாத்மா அநுக்ரஹிக்கட்டுமே என்று வழிபடுவதென்றால் அது ரொம்ப செயற்கையாகவும், வலிந்து மேற்கொண்ட ஜீவனில்லாத கார்யமாகவும்தான் இருக்கும். அதனால் அப்படிப் பண்ண நம்மில் எவருக்கும் தோன்றுவதில்லை.

ஏதாவது ஒரு காரணத்துக்காக முதலில் ஒருவரிடம் இஷ்டப்பட்டுப் போய்விட்டால் அப்புறம்தான் அவரிடம் பக்தியைப் பெருக்கிக்கொண்டு போகமுடிகிறது. முதலுக்கே மோசமென்றால் ஒன்றும் பண்ணிக்கொள்ளுவதற்கில்லை.

மனஸின் ஸ்வபாவத்தில் இன்னொன்று: அப்பா, அம்மா, குரு இன்னும் யாரோ மஹான், இந்த நாளில் ‘தலைவர், ‘தலைவர்’ எனப்படுகிறவர் – இப்படி ஒருத்தர் ப்ரத்யக்ஷமாகத் தெரிகிறபோது, நமக்கு அவரிடம் ஏற்படுகிற பிடிமானத்தினால் அவரையே பரமாத்மாவைப்போல பக்தி பண்ணி சரணாகதி செய்யத்தோன்றுகிறது. ப்ரயக்ஷமாகத் தெரியாத ஒரு தேவதையிடம், அது பரமாத்மாதான் என்று நமக்காகத் தோன்றாதபோது, இப்படி ஒரு குருவிடமோ, தலைவரிடமோ, பெற்றோர் போன்றவரிடமோ நாம் பரமாத்ம பாவத்தை ஏற்றிவைத்துப் பார்க்கிறமாதிரிப் பண்ணமுடிவதில்லை. ‘ஏற்றி வைத்து’ என்பதுகூட ஸரியில்லை. அப்படிச் சொன்னால் புத்தி பூர்வமாகச் செய்வதாகத் தோன்றுகிறது. ஆனால் இப்படி புத்தி வேலையில்லாமல், நமக்கு ஒரு தலைவரிடம் ரொம்பவும் ப்ரியம், அல்லது குருவிடம் மரியாதை, வேறே ஒருவரிடம் ஒரே ‘அட்டாச்மென்ட்’ என்றால் உடனே தன்னால் ‘இவர்தான் நமக்கு ஸகலமும்; இவருக்கே நம் வாழ்க்கை அர்ப்பணம்’ என்ற தீர்மானம் ஏற்பட்டுவிடுகிறது.

‘எந்த மூர்த்தியின் மூலமும் பரமாத்மாவே அநுக்ரஹிக்க முடியும்’ என்று புத்தி பூர்வமாக நமக்குத் தெரிந்தாலுங்கூட, மனஸுக்குப் பிடிமானமில்லாத ஒரு மூர்த்தியிடம் இப்படி ஒரு காரணத்தை ஏற்றிவைத்து பக்தி பண்ணுவதென்பது நம் மனஸின் ஸ்வபாவத்துக்கு ஒத்து வரவில்லை.

இப்போது, ஒரு கோவிலில் ப்ரம்மாவுக்கும் ஸந்நிதி இருப்பதாக வைத்துக்கொண்டு பார்ப்போம்.

(கோவிலில் ஸந்நிதிகள் கொண்டுள்ள) சிவலிங்கம், அம்பாள், பெருமாள், தாயார் ஆகியவர்கள். ஸர்வ சக்தர்கள் என்று தெரிகிறது. அதனால் மனஸார நமஸ்காரம் பண்ணமுடிகிறது.

நவக்ரஹங்கள், அடியார்கள் முதலானவர்கள் – அப்படியில்லை என்று தெரிகிறது. ஆனாலும் நமக்குப் பிடித்தமானதை அநுக்ரஹிக்கக்கூடிய சக்தி உள்ளவர்கள் என்றும் தெரிகிறது. ஆகையால் நமஸ்காரம் பண்ணுகிறோம்.

ஸர்வ சக்தி பொருந்திய மூர்த்தி, அல்லது ஏதோ ஒரு விதமான சக்தி மட்டும் பொருந்திய மூர்த்தி என்று இரண்டு விதமாகத்தான் நம்மால் – அதாவது average பக்தர்களால் – ஒன்றிடம் பக்தி வைக்க முடிகிறது. ஸர்வ சக்தி இல்லாத மூர்த்தியின் மூலமும் ஸர்வ சக்தி வாய்ந்த பரமாத்மா அநுக்ரஹம் பண்ண முடியும் என்ற எண்ணத்தோடு இதை அதுவாகப் பார்ப்பது நமக்கு அவ்வளவாக முடிவதில்லை. சண்டிகேச்வரரையோ விஷ்வக்ஸேனரையோ ‘மூலமான பரமாத்மா இவர்மூலம் அருள் செய்யட்டும்’ என்று நினைத்து நம்மால் வேண்டிக்கொள்ள முடிகிறதா? ஸர்வ சக்தி, கிஞ்சித் (சிறிதளவு) சக்தி என்று தெளிவாக இரண்டு பிரித்துக் கொண்டு விடுகிறோம்.

இதற்கு வித்யாஸமாக ஒரே ஒரு இடத்தில் மட்டும் செய்கிறோம். ஆசார்ய புருஷர்களின் பிம்பங்களைப் பார்த்தால், ‘நம்மைப் பொறுத்தமட்டில் நமக்கு ஈச்வர கோடியாகவே இருந்து அநுக்ரஹிக்கக் கூடியவர்கள்; பரமாத்மா பல ரூபங்களில் குறிப்பாக இப்படி நம்மிடம் ஸுலபத்தில் வருவான்’ என்று தெரிகிறது. அவர்களை நமஸ்கரிக்கிறோம்.

அதாவது, ப்ரம்மகோடி என்று தெளிவாக ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள், அப்படியில்லை என்று தெளிவாக ஒரு பிரிவினர், நம்மைப் பொறுத்தமட்டில் அப்படியிருக்கிறவர்கள் என்று ஒரு பிரிவினர் – இருப்பதாகப் பார்க்கிறோம். இப்படி மூன்று பிரிவுகள் செய்து நமஸ்கரிக்கிறோம்.

ப்ரஹ்மாவின் ஸந்நிதி இருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் ப்ரம்மகோடியில் இல்லை. அதோடு த்ரிமூர்த்திகளில் ஒருவரான ஸ்ருஷ்டி கர்த்தாவாக அவரை நினைப்பதே நம் மனஸில் வேரோடிப் போயிருக்கிறது. புராண காலங்களில் அவரை முதலில் பிடித்து அவர் மூலமாக ஈச்வர கோடிகளைப் பிடிக்கலாம் என்ற அபிப்ராயம் இருந்திருந்தாலும், அப்புறம் பஹுகாலமாக, லோகத்தில் கலிபாதை ஜாஸ்தியாகி அதனால் ஜன்மா என்பதே ரொம்ப வெறுத்துக்கொள்ளவேண்டி ஆனதினாலோ, அல்லது வேறே காரணத்தினாலோ ப்ரஹ்மாவிடம் பக்தி குறைந்து, எனவே அவரைக் கொண்டு ஈச்வர கோடியைப் பிடிப்பதென்பது மறைந்துபோயிருப்பது வாஸ்தவம். ஆகையால் அவரையே முழுமுதலாக நினைக்க முடியாததோடு, அவர் மூலம் முழுமுதலிடம் போகலாமென்ற அபிப்ராயமும் நமக்கு இல்லை. ஆசாரிய புருஷர்களைப் போல நம்மைப் பொறுத்தமட்டில் முழுமுதல் தெய்வமே இவராக இருந்து அநுக்ரஹிக்கும் என்று நினைக்கவும் தோன்றவில்லை; அதற்கு விசேஷமாக basis (அடிப்படை) இல்லை.

அப்புறம், கோவிலில் ஆழ்வார், நாயன்மார் போன்ற பக்தர்களைப் பார்க்கும்போது அவர்களுடைய பக்தியின் உயர்வுக்காக அவர்களை நமஸ்கரிக்கத் தோன்றுகிறது. ப்ரஹ்மாவுக்கும் இப்படி பக்தர் என்று விசேஷமாகச் சிறப்பிக்கப்படும் அடியார் கோஷ்டியிலும் சேரவில்லை!

மற்ற கிஞ்சித் – சக்தி மூர்த்திகளை (ஸ்வல்ப சக்தி படைத்த தேவதைகளை) அவரவருக்குள்ள சக்திக்காக நமஸ்கரிப்பது போல இவருக்கும் பண்ணிவிட்டுப் போகலாமேயென்றால், இவருடைய சக்தி என்ன? ஸ்ருஷ்டி செய்வது. அதாவது நமக்கு ஜன்மாவைத் தந்து, “தலையெழுத்து, கர்மம்” என்று தலையில் அடித்துக்கொள்கிறோமே, அதை – பழைய ஸ்டாக்கிலிருந்து இந்த ஜன்மாவில் அநுபவிக்கவேண்டியது இவ்வளவு என்பதை – எழுதி விடுவது. அதோடு அவர் வேலை முடிந்தது. அதற்கப்புறம் அவர் நமக்குச் செய்வது, செய்யக்கூடியது எதுவுமேயில்லை. ஒவ்வொரு சாஸ்த்ரத்திலும், ஸயன்ஸிலும் “விதிகள்” என்று பலவற்றைச் சொல்கிறோம். அவை மாற்றமுடியாத நியதிகள் தானே? ரூல்கள்தானே? மாற்றமுடியாததாக நம் தலையில் “விதியை” எழுதும் ப்ரம்மாவுக்கே “விதி” என்று பேர் இருப்பதால் அவரும் ஸ்வதந்திரமாக நமக்கு எந்த அநுக்ரஹமும் செய்யமுடியாத ஒரு ரூல் மாதிரிதானிருப்பதாக தோன்றுகிறது. ஆகையினால் அவரிடம் பக்தி பொங்கிக்கொண்டு வரும்படி எதுவுமே நமக்கு இல்லை.

கிஞ்சித் சக்தியுள்ளவரானாலும் நம்மைக் காட்டிலும் எவ்வளவோ பெரிய சக்தர்தானே, அதற்காக ஒரு நமஸ்காரம் பண்ணிவிடலாமே என்றால், இங்கேதான் அவர் மற்ற எல்லாருக்கும் (எல்லா தேவர்களுக்கும்) வித்யாஸமாக, ‘பெக்யூலிய’ ராக இருக்கிறார்.

அது என்ன?

இவரொருவர் மாத்திரம் ஈச்வர கோடியாக இல்லாமலே, அப்படியிருக்கும் சிவ – விஷ்ணுக்களுக்கு ஸமதை மாதிரியும் த்ரிமூர்த்திகளில் இருக்கிறார்! சிவம் என்கிற பேரில் ஸர்வ சக்தராக இருப்பவர் கிஞ்சித் சக்தரான ஸம்ஹார ருத்ர மூர்த்தியாகவும், அதே போல, ஸர்வ சக்தி வாய்ந்த விஷ்ணு அந்தப் பேரிலேயே கிஞ்சித் சக்தரான பரிபாலன மூர்த்தியாகவும் இருக்கிறபோது, ஸர்வ ஸக்தராக நாம் தெரிந்துகொள்ளாத ப்ரஹ்மாவும் ஸ்ருஷ்டி கர்த்தாவாக அவர்களோடு மூன்றாமவராக அவர்களோடு ஸம ஸ்தானம் பெற்றவராகக் காணப்படுகிறார்.

ப்ரம்மாவை ஸ்ருஷ்டிப்பதற்கு அதிகமாக எந்த சக்தியும் பெற்றவராகவோ, நமக்காகப் பரமாத்விடம் ரெகமென்ட் செய்யக் கூடியவராகவோ பார்க்கிற பார்வை நமக்கில்லை. பரமாத்மாவின் கட்டளைப்படி, நம் கர்மப்படி ஜன்மா தருபவர் என்பதோடு அவரை முடித்துவிடுகிறோம். அதே ஸமயத்தில் விஷ்ணு, சிவன் ஆகியவர்கள் விஷயத்தில் எப்படியிருக்கிறது? விஷ்ணு என்று நினைத்த மாத்திரத்தில் ஸாக்ஷாத் பரமாத்மா, ஸர்வசக்தி வாய்ந்தவரென்றுதான் தோன்றுகிறதேயொழிய, பரமாத்மாவின் அதிகாரிகளில் ஒருவராக நம்முடைய கர்மாப்படி ஜீவயாத்திரையில் கணக்குத் தீர்க்கும் பரிபாலகர் என்று சின்னதாகவா நினைக்கிறோம்? அப்படியே, சிவன் என்றால் பரம்பொருள், எல்லாம் வல்லவர். எல்லாமும் தரவல்லவரென்றுதான் தோன்றுகிறதேயொழிய சாவைத் தருபவரென்றா தோன்றுகிறது? இப்படித் தோன்றினால் அவருடைய கோவிலுக்குப் போகவே மாட்டோம்!

த்ரிமூர்த்திகளில் பரிபாலனமும், ஸம்ஹாரமும் செய்பவர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஸகலமும் செய்யவல்லவர்கள் என்பதையே நினைப்பூட்டும் சிவன், விஷ்ணு என்பவர்களோடு, த்ரிமூர்த்திகளில் ஸ்ருஷ்டிப்பவராக மட்டுமே நம்மால் நினைக்க முடியும் ப்ரஹ்மாவைக் சேர்த்தால் நம்முடைய average மனநிலையில் குழறுபடியாகிறது. இவர் எங்கே அவர்களுக்கு நடுவிலே போய் ஸமதையாய் நின்றார் என்று தோன்றுகிறது. இப்போது தோன்றுகிறதோ இல்லையோ, ஸ்தூலமாக அவருக்கும் கோவிலில் முக்யமான இடம் கொடுத்திருந்தால் அவரைப் பார்க்கிறபோது ஆண்டவனாகவோ, அடியாராகவோ, ஆசார்யராகவோ எப்படியும் வைத்துப் பார்க்க முடியாத அவரைப் பற்றி இப்படி வேறு, ‘ஈச்வர கோடிகளோடு இவர் எப்படி ஸமதை?’ என்ற கேள்வியும் வரும் – வரலாம் – என்றுதான் அவருக்குக் கோவில்லாமல் வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. இப்படியும் ஒரு காரணம் இருக்கலாமோ என்று தோன்றியதைச் சொன்னேன்.

நம்மால் முழு முதல் தெய்வமாக மதிக்கப்படும் சிவ – விஷ்ணுக்களுக்கு ஸமதை மாதிரி இவர் எப்படி இருக்கலாம் என்று கேள்வி வந்துவிட்டதால், அப்புறம் நம்மைவிட அவர் எப்படியும் பெரிய சக்திமான்தானே என்ற அளவில் அவரிடம் மரியாதை பாராட்டுவதில்கூட ஒரு ‘ரிஸர்வேஷன்’ வந்துவிடும். இதற்கு இடமே கொடுக்கவேண்டாமென்று தான் அவருக்குக் கோவிலில் இடமில்லை என்று வைத்திருப்பார்கள் போலிருக்கிறது என்று தோன்றியதைச் சொன்னேன்.

இதர தேவதைகள் அநேகரைவிட ப்ரஹ்மா குறைந்து போய்விடவில்லைதான். ஆனால் நாம் அவரிடம் நிறைந்த பக்தி செலுத்த முடியாதவர்களாக இருக்கிறோமே! கோவில் என்று ஒன்று அவருக்குக் கட்டி வைத்துவிட்டால் ஜனங்களுக்குப் போகத் தோன்றும். அதற்காகத்தானே கோவில் கட்டுவதே? ஆனால் போய் அவரை தர்சனம் செய்தால் அவரிடம் பொங்கிக்கொண்டு ப்ரேமை, பக்தி வருவதாக இருக்காது. (யாருக்காவது ப்ரஹ்மாவிடம் பக்தி என்று கேள்விப்படுகிறோமோ?) விசேஷமாக பக்தி வராவிட்டால் போகிறது; சித்ரகுப்தன் மாதிரியானவர்களிடம் மட்டும் பெரிசாக பக்தி வந்துவிடுகிறதா என்ன – என்றால் அங்கேயெல்லாம் கேள்வியும் வருவதில்லையோல்லியோ? அதனால் நம்மைவிட நிச்சயம் பெரியவரென்று ஒரு நமஸ்காரம் செய்துவிட முடிகிறது. இவரிடம் மட்டும் கேள்வி, சிவ – விஷ்ணுக்களோடு இவருக்கு எப்படி ஸமஸ்தானம் என்று. அவர் அப்படி ஸம ஸ்தானம் கொண்டாடாமலே இருக்கலாம். அவரைக் குற்றம் சொல்லவேண்டாம். ஆனால் ‘ப்ரம்மா – விஷ்ணு – சிவன் என்று த்ரிமூர்த்திகள்’ என்று கேட்டுக் கேட்டு நமக்கு அப்படிப்பட்ட அபிப்ராயம் ஆழமாக ஏற்பட்டிருக்கிறதே! அதனால் கேள்வி புறப்படத்தான் செய்யும். கேள்வி இருக்கிற இடத்தில் பக்தி எப்படி இருக்கும்? விசேஷ பக்தி என்றில்லை, ஸாதாரணமான ஒரு மரியாதை உணர்ச்சிகூட எப்படி இருக்கும்? அப்போது பண்ணும் நமஸ்காரம் எப்படி genuine – ஆக இருக்கும்? பண்ணுகிற அநேக தகிடுதத்தங்களுக்குப் பரிஹாரம் தேடிக் கொள்வதற்குத்தான் கோவில். கோவிலுக்குப் போயே மனப்பூர்வமாயில்லாமல் ஒப்புக்கு நமஸ்காரம் செய்வதென்றால் அது ரொம்பவும் தோஷம் தானே? இப்படி வேண்டாம் என்றுதான் ப்ரஹ்மாவுக்குக் கோவிலில்லாமல் விட்டிருக்கலாம். அவருடைய குறைபாடில்லை, காரணம். நம் குறைபாடுதான் (காரணம்). அவருடைய சக்தி இப்படி என்று நம்மால் கணித்துக் கொள்ளமுடியாமல், நாம் பக்தி வைக்கக்கூடிய மூன்று பிரிவில் எதிலும் அவரை வைக்கமுடியாமல், ‘கிஞ்சித் சக்தர் என்ற பிரிவில் வைக்கலாமே!’ என்றால், ‘பின்னே பூர்ண சக்தர்களோடு ஸமம் மாதிரி இருக்கிறாரே!’ என்று கேள்வி கேட்டுக்கொண்டு நாம் இருப்பதால், பொய் நமஸ்காரம் பண்ணும் தோஷம் நமக்குச் சேர்ந்துவிட வேண்டாமென்ற கருணையிலேயே அவருக்குக் கோவில் இல்லாமல் வைத்திருக்கிறார்கள். இப்படியும் ஒரு காரணம் தோன்றுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is முழுமுதலாக வழங்கும் மூர்த்திகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ப்ரம்மாவை உள்ளடக்கி த்ரிமூர்த்தியர் ஏற்பட்ட காரணம்
Next