ப்ரஹ்மாவுக்கு மூன்று பத்னிகள். ஸரஸ்வதி ஒருத்தி. காயத்ரி, ஸாவித்ரி என்று இன்னும் இரண்டு பேர். காயத்ரி மந்த்ரம் என்ற தலைசிறந்த மந்திரத்தின் வெளி ரூபமாக இருக்கப்பட்ட சந்தஸ் (மீட்டர்) தான் காயத்ரி. அதன் உள்ளுயிராக இருக்கிற ஜ்யோதி சக்திக்கே ஸாவித்ரி என்று பெயர். ஸகல வேதங்களுக்கும் ஸாரமாகவுள்ள மந்த்ரத்துடன் ஸம்பந்தப்பட்ட போதிலும் அந்த இரண்டு பேருக்கும் கோவில் இல்லை. காரணம் மேலே சொன்னதுதான். பதிக்கு இல்லாதது தங்களுக்கும் வேண்டியதில்லை என்று அவர்கள் வைத்துவிட்டதுதான் காரணம்.
இப்படிப் பார்த்துக்கொண்டு போகும்போது நாரதருக்குக் கோயிலில்லாததற்கும் காரணம் தெரிகிறது. விஷ்ணுவின் அடியார்கள், பாகவதோத்தமர்கள் என்று எடுத்தால் நாரதர் ‘டாப்’பில் நிற்கும் ஒருவர். பக்தி ஸூத்ரமே அவர் பண்ணியதுதான். கலிக்கு ஸங்கீர்த்தனம் தான் (ப்ரத்யேக மோக்ஷ மார்க்கம்) என்னும்போது, ஸதா ஸர்வ காலமும் வீணாகானத்தோடு பகவந் நாம கீர்த்தனம் பண்ணிக்கொண்டிருக்கும் அவருக்குத்தான் ஊருக்கு ஊர் கோவில் இருக்கணும். ஆனாலும் கோவிலே இல்லை என்றால் என்ன காரணம்? தகப்பனாரான ப்ரம்மாவுக்கும், மூன்று தாயார்களுக்கும் ஆலயம் இல்லாதபோது, பிள்ளை மட்டும் ஆலயத்தில் வஸிப்பாரா? மாதா பிதாக்களுக்கில்லாதது தமக்கும் வேண்டாம் என்ற ஸத்புத்ர தர்மத்தை அவர் பின்பற்றுகிறார்!
பொதுவாக இன்னொரு காரணம் தோன்றலாம்: தக்ஷ ப்ரஜாபதிக்கு அவரிடம் கோபம் வந்து, ‘நீ நின்ன இடத்திலே நிக்காம சுத்திண்டேயிரு’ என்று சபித்தான், அதனால்தான் அவர் ‘த்ரிலோக ஸஞ்சாரி’ என்னும்படியாக ஓடிக் கொண்டேயிருக்கிறார் என்று கதை உண்டு. சுற்றிக் கொண்டே இருப்பவரை – இருக்க வேண்டியவரை – ஆலயங்களில் ப்ரதிஷ்டை பண்ணி எப்படி உட்கார்த்தி வைப்பது?
குருவில் ஆரம்பித்து எங்கெங்கேயோ த்ரிலோக ஸஞ்சாரம் பண்ணிவிட்டு நாரதரில் வந்து நிற்பதும் பொருத்தந்தான்! அவர் தான் ஸங்கீர்த்தன குரு. த்யாகையர்வாளின் குரு. குருவாகவும் இருந்து கொண்டு, அதே சமயம், “கலி ஸந்தரணம்” – கலியைத் தாண்டுவது – என்று இந்த யுகத்துக்கு ஸ்பெஷலாக உள்ள மந்த்ரத்தை முதல் முதலாகப் பெற்றுக்கொண்ட சிஷ்யராகவும் அவர் இருக்கிறார். எல்லாரும், எக்காலமும், எங்கே வேண்டுமானாலும் சொல்லக்கூடிய அந்த மந்த்ரம்,
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
என்பதுதான். தகப்பனாரான ப்ரம்மாவிடமிருந்தே நாரதர் இந்த மந்த்ரத்தில் உபதேசம் பெற்றிருக்கிறார்.