மஹாலக்ஷ்மியை “த்ரிபுவநைக குரோஸ் தருணி” என்று இந்த ஸ்தோத்ரத்தில் ஓரிடத்தில்* அவர் சொல்லியிருக்கிறார். “மூவுலக குருவின் ப்ரிய பத்னி” என்று அர்த்தம். குரு என்றால் ஆசார்யர், தகப்பனார் என்று இரண்டு அர்த்தம். இவளைத் தாயார், தாயார் என்கிறதற்கேற்ப மஹாவிஷ்ணுவைத் தகப்பனாராகக் கருதி ‘குரு’ என்று சொல்லியிருக்கலாம். த்ரிபுவனங்களுக்கும் இவர்கள் தாய்தந்தையர் என்ற அர்த்தத்தில் சொன்னதாகக் கொள்ளலாம். ஆனால் தாயார் ஸந்நிதி, அம்மன் ஸந்நிதி என்று லக்ஷ்மி, பார்வதி ஸந்நிதிகளைச் சொல்வதுபோலப் பெருமாள், ஈச்வரன் ஸந்நிதிகளைத் தகப்பனார் ஸந்நிதி, அப்பன் ஸந்நிதி என்று சொல்லும் வழக்கம் அதிகமில்லை. மலையாளத்தில் மட்டுந்தான் குருவாயூரப்பன், வைக்கத்தப்பன், ஐயப்பன் என்பது.
ஆகையால் லோக குரு, ஜகத்குரு என்பதுபோல ‘த்ரிபுவந குரு’ என்ற மஹா ஆசார்யனாக மஹாவிஷ்ணுவைக் கருதியே அவனுடைய பத்னியை ‘த்ரிபுவந குரோஸ் தருணி’ என்று சொன்னதாகக் கொள்வதும் ஸரியாயிருக்கும். பகவான் க்ருஷணனாகவும் நம்முடைய பகவத் பாதர்களாகவும் அவதரித்த காலங்களில் நர சரீரத்தில் அவதாரம் செய்ததால் இந்த நரலோகத்துக்கே குருவாயிருந்து “லோக குரு” என்று பெயர் வாங்கினான். நாராயணனாக திவ்ய சரீரத்திலிருக்கும்போது நரர், ஸுரர், அஸுரர் ஆகிய எல்லோருக்கும் பலவேறு ஸந்தர்பங்களில் உபதேசம் செய்து த்ரிலோக குருவாக இருந்திருக்கிறார். அவருடைய பத்னி லக்ஷ்மி. அவளுக்கு ஸதா கால நமஸ்காரமென்றால், பதியை நீக்கிப் பண்ணமுடியாது. “தம்பதியா நில்லுங்கோ, நமஸ்காரம் பண்றேன்” என்று சொல்வதுதான் சாஸ்த்ர வழக்கு. அதனால் த்ரிலோக குருவுக்கும் எப்பவும் நம் நமஸ்காரம் இருக்கணும்.
த்ரிலோக அதிபதியான பரமேச்வரனாகவும் லோகமெல்லாம் அடிபட்டுப்போன நிலையிலுள்ள பரப்ரம்மாகவும் நமக்கு இருப்பவர் நம்முடைய குருவேதான். த்ரிலோக குரு என்று வேறே எவரையோ தேடிப்போக வேண்டாம். இவர் ஒரு புது மாதிரியான த்ரிமூர்த்தியாகவும், ஒரு புது பரப்ரஹ்மமாகவும் இருப்பதால் நமது பரம நன்றி நமஸ்காரங்களுக்கு உரியவராகவும் அவற்றால் எட்ட முடிபவராகவும் இருக்கிறார். ஆனபடியால்,
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நமோஸ்து
என்று அநேக ஸ்தோத்ரங்களில் வருவதுபோல அவருக்கு வந்தனம் செய்து கொண்டிருப்போம்!
துரிதோத்தரணம் பண்ணுவதொன்றையே கார்யமாகக் கொண்டுள்ள அவருக்குரித்தான நமஸ்காரமே நமக்கு மிகப் பெரிய செல்வமாக நம்முடன், நம் உள்ளுக்குள், இருந்து ரக்ஷித்துக் கொண்டிருக்கட்டும்.
* 10 -வது ச்லோகம்.