இரண்டாயிரம், இரண்டாயிரத்து ஐநூறு வருஷங்களுக்கு முந்தி நம்முடைய தேசத்தின் நிலைமை ரொம்பவும் சீர்கெட்டுப் போயிருந்தது.
அநாதி காலமாக வேதோக்தமான வழி நம் தேசத்திலிருந்து வந்திருக்கிறது. ஸநாதன தர்மம் என்று அதற்குப் பேர். வேதத்தை அநுஸரித்து ஏற்பட்டதால் அதற்கு வைதிக மதம் என்றும் பேர் சொல்லலாம். அப்புறம் பஹு காலம் கழித்துதான் அந்நிய தேசத்தினர்கள் ஹிந்து மதம், ஹிந்து மதம் என்று அதற்குப் பேர் கொடுத்துச் சொல்லி நாமும் அவர்கள் வைத்த பெயரையே சொல்லிக்கொண்டிருக்கிறோம். இதற்குப் பேர் ஸநாதன தர்மமென்றோ, வைதிக மதமென்றோகூட நம்முடைய மதத்திற்கு ஆதாரமாக இருக்கப்பட்ட நூல்களில் எதிலும் சொல்லியிருக்கவில்லை. வேறே மதங்களில்லாமல் இது ஒரே மதம்தான் அநாதி காலமாக இருந்துவந்ததால் இதற்கு ஒரு பேர் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.* அப்புறம் மேற்கு தேசங்களிலிருந்து வந்தவர்கள் நம்முடைய பாரத தேசத்தில் முதலில் ஸிந்து நதியைத்தான் கடக்க வேண்டியிருந்ததால், ஸிந்துவை Indus – ஆக்கி, அப்படியே அதைச் சேர்ந்து வரும் பாரத தேசத்துக்கும் India என்று பேர் கொடுத்து, அதன் ப்ராசீனமான மதத்தை Hinduism என்றும், அதைப் பின்பற்றும் நம் எல்லோரையும் Hindus என்றும் சொல்ல ஆரம்பித்து, இந்தப் பெயர்களே நிலைத்து விட்டன.
வேதங்கள் வகுத்துள்ள இந்த ஸநாதன தர்மத்தில் இரண்டு மார்க்கங்கள் — ப்ரவ்ருத்தி மார்க்கமென்றும், நிவ்ருத்தி மார்க்கமென்றும். லோக வாழ்க்கையை நன்றாக, தர்மமாக நடத்துவதற்கு ப்ரவ்ருத்தி மார்க்கம். லோக வாழ்க்கையை விட்டுவிட்டு, அதை முடித்து விட்டு பரமாத்மாவோடு ஐக்யமாகி ஜனன மரணத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு நிவ்ருத்தி மார்க்கம்.
தர்மமாக, அதாவது தனக்கும் நல்லதாகவும், ஜன ஸமூஹத்துக்கும் நல்லதாகவும் வேத விதிப்படி இல்லற வாழ்க்கை நடத்தி, வர்ணாச்ரம வியவஸ்தைகளை அநுஸரித்து கர்மாநுஷ்டானங்களைச் செய்வதுதான் ப்ரவ்ருத்தி மார்க்கம். இதிலே கர்மாநுஷ்டானம் எவ்வளவு நன்றாகச் செய்கிறோமோ, அந்த அளவுக்குப் புண்யம் கிடைத்து, புண்ய பலனாக ஸ்வர்ககம் என்ற இன்ப லோகத்தில் வாஸம் கிடைக்கும். ஆனால் அந்த இன்பம் சாச்வதமல்ல. அந்த இன்பத்தை அநுபவிக்க அநுபவிக்க நம்முடைய புண்ய ‘பாலன்ஸ்’ குறைந்துகொண்டே வரும். முழுக்க அது தீர்ந்தவுடன் “புநரபி ஜனனம்” என்கிறபடி மறுபடி இந்த மண்ணுலகிலேயே பிறக்க வேண்டியதுதான். ஆனாலும் வேத தர்மப்படி (பூர்வ ஜன்மத்தில்) செய்ததால் இது நல்ல பிறவியாக, நல்ல வசதிகள் வாய்த்த பிறவியாக இருக்கும். இந்தப் பிறவியிலும் தர்மம் தப்பாமல் வாழ்க்கை நடத்தினால் மறுபடி ஸ்வர்க போகம். ஆனாலும், (முன்பு) சொன்னமாதிரி, இந்த போகம் சாச்வதமல்ல.
சாச்வதமல்ல என்பது ஒரு பக்கம். அதோடுகூட அநுபவிக்கும்போதேகூட இந்த இன்பம் பூர்ணமான நிறைவைத் தருவதாக இருக்காது. ‘இனிமேலே எதுவும் வேண்டாம்! இந்த நிலை நிரந்தரமாக வாய்த்து விட்டதல்லவா? இதிலிருந்து கொஞ்சங்கூட விலகுவதற்கில்லை. இனியொரு குறை நமக்குக் கிடையாது’ என்று எப்போது ஆக முடியுமோ அப்போதுதான் நிறைவான பூர்ணானந்தம். பூலோகம், ஸ்வர்கம் ஆகிய இரண்டிலுமே எத்தனைதான் ஸந்தோஷமிருந்தாலும் அது இப்படிப்பட்ட நிறைந்த ஆனந்தத்தைத் தரமுடியாது. பல தினுஸான பயம், துக்கம், காமக்ரோதாதி இழுபறிகள் இல்லாமல் இந்த லோகங்களில் இருந்துவிட முடியாது. இந்த இன்பங்களைப் பெறுவதற்காக ஓயாத முயற்சியும் பண்ணிக்கொண்டேதானிருக்க வேண்டும். அதாவது போராடிக் கொண்டேதானிருக்க வேண்டும்.
அது மட்டுமில்லை. இந்த இன்பங்கள் நம்முடைய உள்ளாழத்தில் நாம் என்னவாக இருக்கிறோமோ அதை த்ருப்தி பண்ணுமா? பண்ணவே பண்ணாது. ஏதோ கண்ணுக்கு, காதுக்கு, வாய்க்கு, இன்னம் ஸ்பர்சாதிகளுக்கும், மனஸுக்கும், அறிவுக்குங்கூட இன்ப அநுபவம் இருக்குமேயொழிய, இதற்கெல்லாமும் உள்ளே, நம்முடைய அந்தஃகரணத்துக்கும் உள்ளே இருக்கப்பட்ட ஆத்மாவுக்கு இவற்றிலே கொஞ்சமும் ஸுகாநுபவம் இருக்காது. இன்பங்களை அநுபவிக்கிற நமக்கே அப்பப்போ ஒரு தீர்க்கமான யோசனை வரும்போது, ‘இது என்னது? நம்மிலே ஸாரபூதமாக உள்ளேயிருக்கிற ஏதோ ஒன்றுக்கு ஒரு நிறைவையும் பெறாமல், வெளிமட்டத்தில் ஸெளக்யம், இன்பம் என்று அஸ்திரமான (நிலையற்ற) எதையோ தேடிக்கொண்டு போய்ப் பைத்தியம் மாதிரி என்னென்னவோ பண்ணி த்ருப்திப்படப் பார்க்கிறோமே!’ என்று தோன்றும்.
பூர்ணமான உள்நிறைவைத் தருவது நிவ்ருத்தி மார்க்கம்தான். கர்மாக்களை விட்டு, ஜன ஸமூஹத்தை விட்டு ஸந்நியாஸியாகி ஸதா காலமும் ஆத்ம சிந்தனை, த்யானம் என்று இருப்பவன்தான் ஆத்மா ப்ரஹ்மமே என்று அறிந்து அநுபவிப்பதான, நிறைந்த நிறைவான நிலையைப் பெறுவான். ஸமாதி என்றும் ஸாக்ஷாத்காரம் என்றும் சொல்லும் அந்த நிலையொன்றுதான் ஒரு முறை கிட்டினால் அப்படியே சாச்வதமாக இருப்பது. பேச்சு வழக்கில்கூட ‘ப்ரம்மானந்தமாயிருந்தது!’ என்று நமக்குத் தெரியும் இன்பத்தைச் சொல்கிறோம்! வாஸ்தவத்தில் அந்த “ப்ரம்மானந்தம்” நிவ்ருத்தி மார்க்கத்தில் ஸித்தி பெற்றவனுக்குத்தான் தெரியும்! அது, ப்ரம்மம் என்று ஒன்றை இன்னொருவன் அநுபவித்து ஆனந்திப்பது அல்ல. ப்ரம்மம் என்ற ஆனந்தம்தான் ப்ரம்மானந்தம். இவன் (நிவ்ருத்தி மார்க்கத்தில் ஸித்தி பெற்றவன்) தானே அந்த ப்ரம்மம் என்ற ஆனந்தமாக ஆகிவிடுகிறான். அங்கேதான் பயமேயில்லை, துக்கமில்லை, காமமும் க்ரோதமும் போட்டு இழுக்கிறதும் இல்லை. ஓயாத முயற்சியும் வேண்டியிருப்பதில்லை. ஸித்தியடைவதற்கு முன்னாடி ரொம்பப் பாடுபடத்தான் வேண்டும். போராட்டம் என்றேனே, அது பெரிசாக இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு தரம் அந்த லக்ஷ்யத்தை அடைந்துவிட்டால் போதும். அப்புறம் அதிலிருந்து நழுவுவது, விலகுவது என்பது கிடையாது.
“தில்லை வெளியிலே கலந்து விட்டாலவர்
திரும்பியும் வருவாரோ?”
என்று சொன்னது இதைத்தான். ஒரு தரத்துக்கு இரு தரமாக,
அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத்
என்று “ப்ரஹ்ம ஸூத்ரம்” முடிந்திருப்பதும் இதைத்தான் சொல்கிறது. ப்ரஹ்மஸூத்ரகாரர், “இது தாமே சொல்வதில்லை, ச்ருதியிலேயே (வேதத்திலேயே) இப்படி இருக்கிறது” என்றும் சொல்கிறார். ‘சப்தாத்’ — என்றால் சப்த ப்ரமாணம் என்பதான ச்ருதியிலிருந்து என்று அர்த்தம். ச்ருதி சிரஸான சாந்தோக்ய உபநிஷத்தில் இப்படியே இரண்டு தடவை சொல்லி முடித்திருக்கிறது.
அதாவது, நிவ்ருத்தி மார்க்கத்தினால்தான் நித்யமான பேரின்பம். ப்ரவ்ருத்தியில் பெறுவதெல்லாம் நச்வரமான (நிலையற்ற) சிற்றின்பம்தான்.
* “தெய்வத்தின் குரல்” முதற்பகுதியில் “பெயரில்லாத மதம்” என்ற உரை பார்க்கவும்.