‘ந்யாயேந்து சேகர’ த்திலுள்ள மங்கள ச்லோகம் சொன்னேன். சொல்கிறபோது இந்து சேகர ஸம்பந்தமுள்ளதாகவே பிள்ளையாரின் விளையாட்டை வர்ணிக்கும் இன்னொரு ச்லோகம் ஞாபகம் வந்தது.
தத்வம், தர்க்கம் பார்த்ததற்கு மாற்றாக அந்த விளையாட்டையும் சொல்கிறேன்.
‘இந்து சேகரம்’ என்றால் சந்திரன் இடம் பெற்றுள்ள சிரஸ் என்று அர்த்தம். பரமேச்வரன்தான் இப்படி இந்து சேகரனா இருக்கிறானென்பது எல்லாருக்கும் தெரிந்தது. ஞானப்பாலுண்ட குழந்தை முதல் பாட்டிலேயே “தூவெண்மதி சூடி” என்று சொல்லியிருப்பது இதனால்தான். ஈச்வரன் ஜடாபாரத்திலே சூட்டிக் கொண்டிருக்கிற சந்திர கலையுடனேயே விக்நேச்வரக் குழந்தை பண்ணிய விளையாட்டைப் பற்றி ஒரு ச்லோகம் சொல்கிறேன். லோகத்துக்கெல்லாம் ஸந்தோஷம் கொடுக்கிற விளையாட்டு. ஸர்வ லோகத்துக்கும் தாய் தந்தையராக இருக்கப்பட்ட அம்பாளும் ஈச்வரனும் ப்ரியத்திலே ஒன்று கூடினால் அதைப் போல லோகத்துக்கு ஸந்தோஷம் எதுவுண்டு? அப்படிப்பட்ட ஸந்தோஷத்தை பாலக்ரீடையால் (குழந்தை விளையாட்டால்) கணபதி உண்டாக்கியதாக ச்லோகம்.
காவ்ய மரபிலே சில உண்டு. நாயகனும் நாயகியும் – தமிழில் தலைவன், தலைவி என்பவர்கள் – எப்போதும் ப்ரியமாயிருந்து ஆனந்தமாகக் காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தார்கள் என்றால் காவ்யத்தில் ரஸம் போத மாட்டேனென்கிறது. அவர்கள் நடுவிலே கொஞ்சம் பிரிந்து போனார்கள், அப்புறம் சேர்ந்தார்கள் என்றால் ரஸம் ஏற்படுகிறது. பிரிவதில் இரண்டு விதம். எவனோ ஒரு ராவணன் (நாயகியைத்) தூக்கிக் கொண்டு போகிறான், அல்லது ஒரு மாதவியிடம் மயங்கி (நாயகன்) பிரிந்து போகிறான் என்பது ஒரு விதம். இது மனஸுக்கு ரொம்பக் கஷ்டம் தருவதாக இருப்பது. இது சோகரஸம். பிரிந்திருக்கிறோமே என்ற சோகத்தில் நாயகனோ, நாயகியோ இரண்டு பேருமேயோ தாபப்படுவதற்கு ‘விப்ரலம்பம்’ என்று பெயர். இப்படி ஒரே சோகமாக இல்லாமல் விநோதமான ரஸக்கலவையாகப் பொய்க் கோப ரஸம், அதிலேயே கொஞ்சம் ஹாஸ்யரஸம், அங்கங்கே ஓரொரு இழை சோகரஸம், உள்ளுக்குள்ளே பார்த்தால் அதிலேயே ச்ருங்கார ரஸம் என்றிப்படி எல்லாம் சேர்ந்து நாயக – நாயகிகள் தங்களுக்குள்ளேயே சண்டைபோட்டுக்கொண்டு பிரிந்தாற்போலிருப்பதுமுண்டு. ‘ப்ரணய கலஹம்’ என்று இதைச் சொல்வார்கள். தமிழில் ஊடல் என்பார்கள்.
பொய்க் கோபத்தில் இப்படிப் பிரிந்து போன பிற்பாடு இரண்டு பேருக்கும் சேரணும் என்று தாபம் உண்டாகிவிடும். ஆனால் தங்களைக் குறைத்துக்கொண்டு, மானத்தை, கோபத்தை விட்டு ஸமாதானமாகப் போவதற்கும் மனஸ் இடம் கொடுக்காது. எப்படியாவது, ஏதாவது ஸந்தர்பம் ஏற்பட்டு ஒன்றுசேரும்படியாக ஆகாதா, ஆகாதா என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஸாமர்த்யசாலியான கவியாக இருந்தால் ரொம்பவும் அழகாக அப்படிப்பட்ட ஸந்தர்ப்பத்தை ஜோடித்து இரண்டு பேரையும் ஒன்றுசேர்த்து விடுவார். இதிலே ரஸிக ஜனங்களுக்கும் மிகுந்த திருப்தி உண்டாகும்.
இம்மாதிரிதான் பரமேச்வரனுக்கும் அம்பாளுக்குமே ஊடல் ஏற்பட்டிருந்த ஒரு ஸமயத்தில் சந்திரமௌளியான பிதாவின் தலையிலுள்ள பிறைச்சந்திரனோடு பிள்ளையார் லீலை பண்ணப்போக லோகத்தின் மாதா பிதாக்கள் கோபத்தை மறந்து ஒன்றுசேரும்படி ஆயிற்று என்று ச்லோகம் இருக்கிறது.
அந்த ச்லோகம் எந்தப் புஸ்தகத்திலிருக்கிறது என்பதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லணும்.