பிள்ளையாருடைய பெயரில் எதுவுமே ச்லோகத்தில் இல்லை. ‘களபம்’ என்றுதான் வருகிறது. “கலயது கலபோ” என்று அழகான மோனையாக வருகிறது. (கலபம், களபம் என்று இருவிதமாகவும் ஸம்ஸ்க்ருதத்தில் வரும். ல-ள வித்யாஸம் அந்த பாஷையில் பார்ப்பதில்லை.) ‘களபம்’ என்றால் யானைக்குட்டி. ‘குட்டி யானை’ என்று சொன்னால் அதைவிடச் செல்லமாகயிருக்கிறது. வேடிக்கையாகவே பெரிய காரியங்களையும் ஸாதித்தது தெரியாமல் ஸாதித்துக் கொடுத்துவிட்டு, நாம் செல்லம் கொடுத்துக் கொஞ்சும் ஒரு விளையாட்டு ஜீவனாக இருக்க ப்ரியப்படுபவரை ‘கணேசர்’, ‘விக்நேச்வரர்’ என்ற மாதிரிப் பெரிய பெயர்களால் தெய்வமாகக் காட்டாமல், குட்டியானை என்று சொன்னாலே ஸந்தோஷப் படுவாரென்றுதான் ‘களபம்’ என்று போட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
அவ்வையார் “அகவ”லை
சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு
என்று ஆரம்பிக்கிறாள். ஆனால் இங்கே ‘களபம்’ என்பது யானைக் குட்டியில்லை. யானைக்குட்டி ஸ்வாமியின் பாதத்தில் குங்குமப்பூ, பச்சைக் கர்ப்பூரம் முதலியவற்றோடு சேர்ந்து அரைத்த சந்தனம் பூசியிருக்கிறது. கலவை என்றும் கலவைச் சந்தனம் என்றும் சொல்கிற அந்த கந்தோபசாரத்தைத்தான் களபம் என்றும் சொல்வது. இங்கே (“அகவ”லில்) அதுதான் அர்த்தம். பெரிய யோக மூர்த்தியாக, அத்வைத ஞான மூர்த்தியாகப் பிள்ளையாரை ஸ்துதித்து அவ்வை பண்ணியது இந்த அகவல். அதனால் இதிலே ‘பால லீலாபிராமனாக’ விளையாட்டு பண்ணும் குட்டியானையாக அவரைச் சொல்ல முடியவில்லை. (“அகவல்” அறிந்தவர்களிடம் சிறிது உரையாடி விட்டு) “அற்புதம் நின்ற கற்பகக் களிறு“, “வித்தக விநாயக” என்று அவரை உயர்ந்த ஸ்தானம் கொடுத்துத்தான் அவ்வை கூப்பிடுகிறாள். யோக சாஸ்த்ர ரஹஸ்யங்களைச் சொல்ல வந்த நூலில் அவரை அப்படிக் காட்டுவதுதான் ஒளசித்யம் (உசிதமானது) . ஆனாலும் குட்டியானையாக அவர் விளையாடிக்கொண்டிருப்பதையும் கொஞ்சம் கோடியாவது காட்டாமல் விடக்கூடாது என்று அவளுக்கு இருந்திருக்கும் போலிருக்கிறது! என்ன யோக சாஸ்த்ரம் எழுதினாலும் அவள் குழந்தைகளுக்கேயான பாட்டிக் கவியல்லவா? குழந்தைகளுக்கு மிகவும் ப்ரியமான யானைக்குட்டியை மறைமுகமாகவாவது சொல்லாமல் விடக்கூடாது என்றே, “புரிஞ்சுக்கிறவா புரிஞ்சுக்கட்டும்” என்று, எடுத்தவுடனேயே “சீதக் களப” என்று போட்டுவிட்டாள் என்று தோன்றுகிறது.