இதன் தொடர்ச்சியாக, இத்துறையில் ஏனைய துறைகளில் போல அரசாங்கம் தனக்கு ஆலோசனை அளிப்பதற்காகக் குழு நியமிப்பதென்றில்லாமல், தான் அறவே விலகி நின்று மதத்துறை சம்பந்தமான விஷயங்களில் முடிவெடுத்து நடத்த முழு நிர்வாகப் பொறுப்பபு ¢ பெற்ற, சட்டப்படிப் பூரண அதிகாரம் கொண்டதொரு சுதந்திரமான தனி Autonomous அமைப்பே நிறுவ வேண்டியது அவசியமாகிறது. அதன் சிபாரிசின் மீதே தேவை ஏற்படின் அரசாங்கம் சட்டம் வகுக்கலாம்.
பல மதங்கள் வழங்குகின்ற இந்நாட்டில் அவையனைத்திற்கும் பொதுவான பக்தி, ஆத்ம சிந்தனை, அன்பு, உண்மை, நேர்மை, தொண்டு, பணிவு, ஆகியவற்றை அப் பல மதங்களையும் சார்ந்த எல்லாப் பிரஜைகளுக்கும் வளர்த்துக் கொடுப்பதற்காகத் திட்டங்கள் வகுத்து நடத்தும் பொருட்டு எல்லா மதப் பிரதிநிதிகளும் ஒன்றுகூடிப் பணிபுரிவதே முக்கியமாக இச்சுதந்திர அமைப்பின் நோக்கமாக இருத்தல் வேண்டும். இதுகாறும் பிரிந்து பிரிந்து சண்டையிடுவதாகவே பெரும்பாலும் இருந்துவந்துள்ள எல்லா மதஸ்தரையும், அதே போல் ஒவ்வொரு மதத்திற்குள்ளுமேயுள்ள உட்பிரிவினரையும் அச்சகலருக்கும் பொதுவான மேற்சொன்ன குணநலன்களை வலியுறுத்துவதன் மூலம் இவ்வகண்ட பாரதம் என்ற ஒரே ஐக்கியமான குடும்பத்தினையே சார்ந்த அன்பு அங்கத்தினர்களாகச் செய்யும் பொறுப்பினை ஆற்றுவது இச் சுதந்திர மத அமைப்பின் முக்கியமான பணியாயிருக்க வேண்டும்.
மக்களுக்கு மன மேம்பாடளிப்பதிலும் அரசாங்கத்திற்குப் பங்குண்டு என்பதால் மட்டுமன்றி, ஓர் அரசாங்கம் அமைதியான முறையில் செயற்பட நாட்டின் சகல பிரிவினரும் ஐக்கியமுற்றிருப்பது அத்தியாவசியம் எனும் காரணத்தினாலும் இப்பணிகளுக்கு உதவி புரியும் மேற்படி அமைப்பின் நிதித் தேவை முழுவதையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்.
மேற்படி அமைப்பில் இடம் பெறத் தக்கவர் யாவர்? தங்களது மத நூல்களைப் பயின்று தேர்ச்சி பெறுவதற்கும், அம்மத அநுஷ்டானங்களை உரியவாறு புரிவதற்குமே வாழ்வை அர்ப்பணித்த பெரியவர்களாக அவர்கள் இருத்தல் வேண்டும். இந்த யோக்கியதாம்சங்களோடு உலக நடப்புக்களில் பரிசயமுள்ளோராகவும், மக்களோடு நன்கு பழகி அவர்களது மனப்போக்குகளை அறிந்தோராகவும், நடைமுறைக் கண்ணோட்டம் கொண்டோராகவும், நிர்வாக அறிவு பெற்றோராகவும் உள்ளவர்களும் அதில் அங்கம் வகிக்க வேண்டும். இத்தகையோரே இத்துறையில் என்ன செய்ய வேண்டுமோ, எப்படி மக்களை அதில் முன்னேற்ற வேண்டுமோ அவற்றைப் பக்குவமாகச் செய்யவியலும்.
நாட்டிலுள்ள எல்லா மதங்களின் பிரதிநிதிகளாகவும் மேற்சொன்ன தகுதி பெற்றோராக நம்பப்படும் மதத்தலைவர்களுக்கு அங்கத்துவம் அளித்து இச்சுதந்திர மத நிர்வாக அமைப்பு உருவாக்கப் பெற்று இத்துறையின் நேரடிப் பொறுப்பு அதனிடமே ஒப்புவிக்கப்பட வேண்டும். அரசாங்கமும் இத்துறையில் நேரடியாகத்
தலையிட்டு எந்த மாற்றமும் செய்தல் அறவே கூடாது.