ஹிந்து மதத்தின் நிறுவன அமைப்பு:பண பலமும் ஆள் பலமும் இல்லாதது.

ஹிந்து மதத்தின் நிறுவன அமைப்பு:பண பலமும் ஆள்பலமும் இல்லாதது

ஸ்தாபன ரீதியில் மதத்தைக் கட்டிக்காப்பது என்பதைவிட, தனி மனிதர் ஒவ்வொருவரும் தமது தர்மப்படி மதாநுஷ்டானங்களைச் செய்து அவர்தம் சொந்த வாழ்க்கையின் சக்தியாலேயே மதம் காக்கப்பட வேண்டும் என்பதே ஆதிகாலத்திலிருந்து ஹிந்து மதக் கொள்கையாகவும் நடைமுறையாகவும் இருந்து வந்திருக்கிறது. 2500 வருடம் முன்பு அவ்வாறு அநுஷ்டானத்தாலேயே ஜீவிய உதாரணம் படைத்து மனத்திற்கு உயிரூட்டியவர்களின் தொகை நலிவு கண்ட போதுதான், இங்கு ஹிந்து மத தத்துவ சாஸ்தீர அடிப்படையையே கொண்ட பௌத்தம் என்ற புது மதம் நிறுவப்பட்டது. அதுவோ ஸ்தாபன ரீதிக் காப்புக்கு முக்கியமான இடமளிப்பதாக உருவாக்கப்பட்டது. புத்தரிடம் சரண் புகுவதோடு 'சங்கம்' என்ற பெயரில் மதப் பயிற்சி கொடுக்கவும் மதப்பிரசாரம் செய்யவும் அமைக்கப்பட்ட ஸ்தாபனத்திடம் சரண் புகுவதும் அதன் ஆதாரக் கோட்பாடுகளில் ஒன்றாயிற்று. புது மதம் உருவாகி வளர வேண்டுமாயின் பழைய மதஸ்தரையே மதம் மாற்றினாலன்றி எவ்வாறு இயலும்? அவ்வாறே நடைபெற்றது. அந்த நிலையில்தான் ஸ்ரீ ஆதி சங்கராசாரிய சுவாமிகள் தோன்றி இனி ஹிந்து மதத்திற்கும் ஸ்தாபனக் காப்பு ஏற்படுத்த வேண்டிய அத்தியாவசியம் உண்டாகியுள்ளதென உணர்ந்து திருமடங்களை நிறுவலானார். பிற்பாடு ஹிந்து மதத்திலேயே பிற மரபுகள் பிறந்த போதும் அவர்களுக்கும் இவ்வாறே ஸ்தாபனங்கள் நிறுவப்பட்டன. இன்றளவும் இந்த எல்லா மரபுகளின் திருமடங்களும் இயங்கி வருகின்றன. ஆயினும், அவற்றுக்கெல்லாம் பொது மதமாக இப்பரந்த பாரத கண்டமெங்கணும் கோடானுகோடியர் தழுவியுள்ள ஹிந்து மதத்திற்கான ரட்சணையை அளிக்கப் போதுமான திரவிய பலமோ, ஆள்கட்டு என்ற பலமோ அவற்றுக்குக் கிடையாது. மடத் தலைவரது அநுஷ்டான பலத்தாலும், அவர் ஜீவிய சக்தியுடன் உபதேச ரூபமாகச் செய்வதாலும் மதத்தை ரட்சிப்பதே சிலாக்கியமென்றும் மடங்கள் திரவியம், ஆள்கட்டு ஆகியவற்றில் மிதமிஞ்சிப் பலம் பெற்றால், அது ஆத்மிகச் சூழ்நிலைக்குக் குந்தகம் விளைவிக்குமென்றும நம் மதப் பெரியோர்கள் உணர்ந்திருந்ததாலேயே இவ்வாறு வரம்புக்குக் கட்டுப் படுத்தியிருந்தது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is அரசு போஷணை:ஹிந்து மதமும் பிற மதங்களும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  மன்னர்களும் மக்களும் செய்த மதபோஷணை
Next