பிரசாரமும் துஷ்பிரசாரமும்
இப்பிரசார விஷயத்தில்தான் ஒருவர் தமது விருப்பப்படி ஒரு மதத்தைத் தேர்ந்தெடுப்பதில் மதமாற்றம் என்ற விஷயம் வருகிறது. பிரசாரம் என்பதைக் கூர்ந்து கவனத்துடன் கண்குத்திப் பாம்பாகக் கவனித்து, துஷ்பிராசாரமாகாமற் காப்பாற்றுவதற்கான விஷயம்.
பிரசாரம் செய்கையில், ஒரு மதக் கொள்கைகள் முதலியன அனைவருக்குமான பொதுச் சமுதாயத்தின் முன் வைக்கப்படுகின்றன. ஒரு மதத்தின் நூல்கள், சொற்பொழிவுகள் முதலியவற்றைப் பிற மதத்தினரும் படித்தும் கேட்டும் அதனைப் பற்றி அறிய முடிகிறது. அவ்வாறு அறிந்ததில் அம்மதத்தின் கொள்கைகள், அநுஷ்டான முறைகள் முதலியவற்றில் சுயமாக விருப்பம் ஏற்பட்டு பிற மதஸ்தர் ஒருவர் அதில் சேர்வதுதான் உண்மைத்தன்மை உடையதாகும். ஒருவருடைய சுயமான விருப்பம் ஒன்றின் மீது மட்டுமேதான் அவ்வாறு தாய் மதத்திலிருந்து பிற ஒன்றுக்கு மாறுவது உண்மைத்தன்மை உடையது.