சிறுவர்களுக்கு – 2
உள்ளத்தைக் குளிப்பாட்டுங்கள்
உடல் தூய்மை
குழந்தைகளான உங்களுக்குச் சொறி சிரங்கு ஒன்றும் வராமலிருக்க வேண்டும். இவை வந்து விட்டால் ரொம்பக் கஷ்டப்படுகிறீர்கள். படிக்க முடிவதில்லை. விளையாட முடிவதில்லை. உட்கார முடிவதில்லை. சாப்பிட முடிவதில்லை. சொறி, சிரங்கு எதனால் உண்டாகிறது? அழுக்கினால் உண்டாகிறது. ஆகவே உடம்பை அப்பழுக்கில்லாமல் சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் சொறியும் சிரங்கும் வராமல் இருக்கும். உடம்பைச் சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படியென்றால் நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும். சோப்போ, சீயக்காயோ போட்டு உடம்பைத் தேய்த்து நன்றாக நீராடினால் உடம்பின் அழுக்குகள் போகின்றன. ஒரு நாள், ஒரு வேளை இப்படிக் குளித்துவிட்டால் போதாது. மறுபடியும் மறுபடியும் அழுக்கு சேர்ந்து கொண்டே தான் இருக்கும். எனவே, தினந்தினமும் நீராட வேண்டும். பிரதி தினத்திலும் கூடக் காலை மாலை இரண்டு வேளைகளிலும் குளித்தால் மிகவும் நல்லது.
உங்களுடைய சின்ன வயசிலேயே பச்சைத் தண்ணீரில் குளிக்கப் பழகி விட்டீர்களானால் அப்புறம் சளி, இருமல் உங்களைத் தீண்டாது. பச்சைத் தண்ணீரில் குளித்தால் நரம்புகளுக்கும் தெம்பு, மனசிலும் ஓய்ச்சல் போய் உற்சாகமாக இருக்கும். உடம்பிலே அழுக்குப் போவதோடு கூட மனசு கூடப் பளிச்சென்று இருக்கிற மாதிரி இருக்கும்; வேலையில் சுறுசுறுப்பு பிடிக்கும்.
சுத்தத்தைத்தான் தூய்மை தூய்மை என்பது. நீங்கள் எல்லாவிதத்திலும் தூய்மையாக இருக்க வேண்டும். அழுக்கு என்பது உங்கள் கிட்டவே வரக்கூடாது. அதற்குத்தான் முதலில் உடம்புக்குக் குளிப்பதைச் சொன்னேன். உடம்புக்கு அப்புறம் உடுப்பு.