நால்வருக்கும் விநாயகர் அருள்

நால்வருக்கும் விநாயகர் அருள்

அந்த ஸுந்தரமூர்த்திக்கும் பிள்ளையார் அநகே அநுக்ரஹங்கள் பண்ணியிருக்கிறார். அவருக்கு மாத்திரம் இல்லை. 'நால்வர்' என்று சிறப்பித்துச் சொல்கிற அப்பர், ஸம்பந்தர், ஸுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நாலு மஹாபெரியவர்களுக்குமே ஒவ்வொரு ஸமயத்தில் விக்நேச்வரர் அருள் புரிந்திருக்கிறார்...

இங்கே ஒரு புலவர் வந்து விக்நேச்வரரைப் பற்றி ஒரு பழைய தமிழ்த் துதி பாடினார். "மூத்த நாயனார் திருவிரட்டை (திரு இரட்டை) மணி மாலை" என்று அதற்குப் பெயர். அதிலே ஒரு இடத்திலே, பிள்ளையாருக்கு ஒற்றைத் தந்தம், இரட்டைக் காது, மூன்று கண் என்று வருகிறது - 'ஒரு கோடு, இரு செவி, முக்கண்' என்று பாடியவர் நல்ல புலவர் ஆனதினால். "ஒன்ணு,இரண்டு,மூணு' என்கிறதோடே முடிக்காமல், நாலாவதாக 'நால்வாய்' என்றும் சேர்த்திருக்கலாம்" என்றார்.

நால்வாய் என்றால், "பிள்ளையாருக்கு ஏது நாலு வாய்?" என்று தோன்றும். இங்கே 'நால்' என்பது எண்ணிக்கை இல்லை. 'நாலுதல்' என்றால் தொங்குவது' என்று அர்த்தம். யானை வாயைப் பார்த்தீர்களானால் தெரியும். அது தொளதொள என்று தொங்கினாற் போலத்தான் இருக்கும். அதனால் யானைக்கு நால்வாய் என்று ஒரு பேர். பிள்ளையார் யானைதானே?

'நால்வாய்' என்று அவர் சொன்னதும் எனக்கு நாலு பேருடைய வாய் நினைவு வந்தது. யார் அந்த நாலு பேர் என்றால் நமக்கு சிவ பக்தியையும் தமிழையும் ஒரு சேர வளர்த்துக் கொடுத்திருக்கிற நால்வர்தான். தேவார திருவாசகங்களைக் கொண்டு தமிழால் சிவ பக்தியையும், சிவ பக்தியால் தமிழையும் வளர்த்துத் தந்தது அவர்களுடைய வாய்தானே? அந்த நால் வாயை நினைத்துக் கொண்டேன். அப்புறம் அந்த நால்வாய்க்கும் இந்த நால்வாய்க்கும் இருக்கிற ஸம்பந்தங்களை ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தேன். அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லலாம் என்று (நினைக்கிறேன்) .


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is ஒளவை கயிலை சேர்ந்தது: சுந்தரர் சரிதத் தொடர்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  சம்பந்தருடன் சம்பந்தம்
Next