முன்பின் பிறவிகள்; கர்வம் முதலான அழுக்

முன்பின் பிறவிகள்; கர்வம் முதலான அழுக்குகள்

நாம் போட்டி போடும்படியாக, நம்மைவிட இன்னொரு மாணவன் படிப்பிலோ, விளையாட்டிலோ அதிகத் தகுதி பெற்றிருப்பது எதனால்?

நமக்கெல்லாம் பல பிறவிகள் உண்டு. போன பிறவியில் நம்மைவிட நல்லது செய்த பசங்களுக்கு இந்தப் பிறவியில் பகவான் நம்மைவிடச் செளகரியங்கள் தந்திருக்கிறார். அவர்களைக் கண்டு பொறாமைப்படலாகாது.

இதே போல், நம்மளவு செளகரியமோ, அறிவோ அழகோ இல்லாதவர்களைப் பார்த்து நாம் தாழ்த்தியாக நினைத்துக் கர்வப்படவும் கூடாது. கர்வம் என்பது சொறி, சிரங்கு எல்லாவற்றையும்விடக் கொடிய பெரிய வியாதி போன்றது. போன பிறவியில் நம்மைவிடத் தப்பு செய்ததால் அவர்கள் இப்போது பணத்தில், புத்தியில், அழகில் நம்மைவிடக் கீழாக இருக்கலாம். ஆனால் நமக்குக் கர்வம் வந்தால், இதுவே அவர்கள் செய்த தப்புக்களையெல்லாம்விடப் பெரிய தப்பு. இதனால் நாம் அடுத்த பிறவியில் இப்போது அவர்கள் இருப்பதைவிடக் கீழான நிலையில் பிறப்போம்.

இன்னும் பலவிதமான அழுக்குகள் இருக்கின்றன. பிறர் இல்லாதபோது அவர்களைப் பற்றி கேலியாகவோ, நிந்தையாகவோ பேசுவதில் உங்களுக்கு எண்ணம் போகவே கூடாது. இப்படிப் பேசுவதில் ஒரு சுவாரசியம் இருக்கிறதே என்பதற்காக இதில் ஈடுபடக்கூடாது. ஒருவனிடம் தப்புத் தெரிந்தால், அதை நேரில் நல்லபடியாக, நயமாக, அன்பாக அவனிடமே சொல்ல வேண்டுமே ஒழிய, அந்தத் தப்பை மற்றவர்களிடம் சொல்லி சந்தோஷப் படுவது வெறும் கோழைத்தனம் தான். இப்படிப் புறங்கூறுகிறபோது அங்கே அந்தப் பையன் இல்லாதிருக்கலாம் – ஆனால் எங்கேயும் உள்ள ஸ்வாமி அங்கேயும் இருக்கிறார். என்றைக்கோ ஒரு நாள் அவர் தண்டித்து விடுவார். அதற்கு யாரும் தப்பமுடியாது.