சிறுவர்களுக்கு – 3
அம்மை அப்பன்
உலகக் குடும்பத்தின் அம்மாவும் அப்பாவும்
இந்த உலகம் முழுவதையும் நடத்துகிறவர் ஸ்வாமி. இதில் மனிதர்கள் இருக்கிறோம். மிருகங்கள் இருக்கின்றன. பட்சிகள் இருக்கின்றன. புழு பூச்சிகள் இருக்கின்றன. மரம், செடி, கொடி, புல், பூண்டு எல்லாம் கொண்ட ஒரு பெரிய குடும்பமே உலகம். அந்தக் குடும்பத்தை நடத்துகிறவர் ஸ்வாமி.
நம்முடைய சிறிய குடும்பம் ஒவ்வொன்றையும் அம்மா, அப்பா என்ற இரண்டு பேர் நடத்துகிறார்கள். குடும்பம் நடப்பதற்குச் சாமான்கள் வேண்டியிருக்கின்றன. அவற்றை வாங்குவதற்குப் பணம் வேண்டியிருக்கிறது. அப்பா என்கிறவர் உத்தியோகம் செய்து, சம்பளமாகப் பணம் வாங்கிக்கொண்டு வருகிறார். அந்தப் பணத்தைக் கொண்டு சாமான்கள் வாங்கிப் போடுகிறார். இந்தச் சாமான்களை வைத்துக் கொண்டு அம்மா சமைத்துப் போடுகிறாள்; மற்ற வீட்டுக் காரியங்களைச் செய்கிறாள்.
ஸ்வாமி மனிதர்களை விட ரொம்பப் பெரியவர்; நம்மை விட அவருக்குச் சக்தி ரொம்பவும் அதிகம். அதனால் அவருடைய உலகக் குடும்பத்தை நடத்துவதற்கு ஒருத்தர் சம்பாதிக்க வேண்டும். இன்னொருத்தர் சமைத்துப் போட வேண்டும் என்று இல்லாமல் அவர் ஒருவராகவே நடத்திவிடுகிறார்.
நம் அப்பா அம்மா மாதிரி, ஸ்வாமி சரக்குகள் வாங்க வெளியே போக வேண்டாம். எல்லாச் சரக்குக்கும் மூலம் அவரேதான். குணங்களும் சரக்குகள் மாதிரிதான். இந்த குணங்கள் எல்லாவற்றுக்கும் கூட ஸ்வாமியேதான் மூலம். அவர் குணக்கடல். எல்லாக் குணங்களும் அவரிடமிருந்து தான் வந்தன. அப்பாவும் அம்மாவும் நமக்குத் தருகிற சாமான்களுக்கெல்லாம் மூலம் ஸ்வாமியிடமே இருக்கிற மாதிரி, அவர்கள் இருவரும் நம்மிடம் காட்டுகிற அன்புக்கும் மூலம் ஸ்வாமியிடம்தான் இருக்கிறது.
நமக்கு எப்போதும் நல்லதையே நினைத்துக் கொண்டு, நம்முடைய சந்தோஷத்துக்காக எத்தனை கஷ்டத்தையும் தாங்கிக் கொள்கிற அன்பு நம் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இருக்கிறதல்லவா? நாம் நல்லவர்களாக வேண்டும்; புத்திசாலிகளாக வேண்டும்; நாம் வாழ்க்கையில் நன்றாக முன்னுக்கு வர வேண்டும் என்பதுதானே நம் பெற்றோரின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது? இதற்காகவே தான் அவர்கள் சில சமயங்களில் நம்மைத் தண்டிக்கிறார்கள் கண்டிக்கிறார்கள். இதைக் கொண்டு நாம் அவர்களிடம் கோபப்படக்கூடாது. நம்முடைய நல்லதை நினைத்தேதான் அவர்கள் கண்டிக்கிறார்கள் என்று உணர வேண்டும். அவர்கள் கோபித்துக் கொண்டாலும் அதற்குக்கூடக் காரணம் நம்மிடம் அவர்களுக்குள்ள அன்புதான். இந்த அன்பினால் தான் அவர்கள் நம்மை வளர்த்துப் படிக்க வைத்து, நமக்கு உடம்புக்கு வந்தால் இரவெல்லாம் கண் விழித்துக் கவனித்து, எல்லாக் காரியங்களும் செய்கிறார்கள். இப்பேர்ப்பட்ட அன்பு அவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், இந்த அன்பு என்ற சரக்குக்கும் மூலம் ஸ்வாமிதான். ஸ்வாமியேதான் அப்பா அம்மா என்கிற உருவங்களில் வந்து நம்மிடம் அன்பைச் செலுத்துகிறார்.