அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
நம் அப்பாவையும் அம்மாவையும் ஸ்வாமியாக நினைக்க வேண்டும். இதையே மாற்றி ஸ்வாமியையும் அப்பா அம்மா என்ற உருவங்களில் நினைக்க வேண்டும்.
‘கொன்றை வேந்தன்’ என்ற நீதி நூலில் ஒளவைப் பாட்டி முதலில் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்கிறாள். இது தாய் தந்தையரைத் தெய்வமாக நினைப்பது. இதை அடுத்தே ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறாள். ‘ஆலயம் தொழுவது’ என்றால் ஆலயத்திலுள்ள தெய்வத்தைத் தொழுவதேயாகும். அப்படித் தொழும்போது அத்தெய்வத்தையே தாய் தந்தையர் என அன்புடன் எண்ண வேண்டும்.
ஸ்வாமி எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்றால் அவருக்கு நம்மைப்போல் உருவம் இருக்க முடியாது. ஆனால் உருவம் இல்லாத ஒருவரை எப்படி நினைப்பது? அதனால் அவரை அப்பா அம்மா என்ற இரு உருவங்களில் நினைக்க வேண்டும். நமக்குத் தெரிந்தவர்களில் நம்மிடம் ரொம்ப அன்பாக இருப்பது தாய், தந்தையர்தானே? அன்பாக இருப்பவர்களை நினைத்துக் கொண்டால்தான் நமக்கும் சந்தோஷமாக இருக்கிறது. அதனால் ஸ்வாமியை அம்மாவாக, அப்பாவாக, இரண்டும் சேர்ந்த அம்மையப்பனாக நினைத்துப் பக்தி செலுத்த வேண்டும்.
பார்வதி என்ற அம்மாவாகவும், பரமசிவன் என்ற அப்பாவாகவும் அவர் ஆகியிருக்கிறார்; லக்ஷ்மி என்ற அம்மாவாகவும் மஹாவிஷ்ணு என்ற அப்பாவாகவும் ஆகியிருக்கிறார்; சீதை என்ற அம்மாவாகவும் ராமர் என்ற அப்பாவாகவும் ஆகியிருக்கிறார்.
இந்த உருவங்களை நினைத்துக் கொண்டாலே அன்பாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது.