சினிமா, போதைப் பொருட்கள், பத்திரிகைகள், ஸ்போர்ட்ஸ்
இழுப்புச் சக்திகளில் பாலிடிக்ஸ் மாதிரி நான் சொன்ன மற்றவை ஸினிமா, பத்திரிகைகள், ஸ்போர்ட்ஸ்.
அறிவு வளர்ச்சிக்கு உதவும் டாகுமெண்டரி தவிர ஸினிமா அடியோடு வேண்டாம்; பாலிடிக்ஸ் மாதிரித் தான் அதுவும் என்பதே என் அபிப்பிராயம். தற்போதைய ஸினிமாக்களைப் பற்றி நான் கேள்விப்படுவதிலிருந்து வேறு விதமாக என்னால் அபிப்ராயப்படமுடியவில்லை. ஆனாலும், எவரானாலும் மனோரஞ்சகமாகக் கொஞ்சம் பொழுதுபோக்கு இல்லாவிட்டால் வாழ்க்கையே இறுக்கிப் புழுங்குகிற மாதிரிதான் ஆகிவிடும். குறிப்பாக இந்த ஸ்வதந்திர யுகத்தில் இந்தப் பாயிண்டையும் கவனிக்காமலிருக்க முடியவில்லை. அதனால் என்னுடைய அபிப்ராயக் கண்டிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொடுத்து, எப்போதாவது ஒரு ஸமயம், இருப்பதற்குள் தரக் குறைவாக இல்லாதது என்று பெயர் வாங்கிய படங்களுக்குப் போவதென்று மாணவர்கள் வைத்துக் கொள்ளலாம் என்று ‘கன்ஸெஷன்’ கொடுக்கிறேன்.
ஸினிமாவுக்குச் சொன்னதேதான் மற்ற கலை நிகழ்ச்சிகளுக்கும். ஆடல்-பாடல், நாடகம் எந்தக் காலத்திலும் இருந்திருப்பதால், வரம்புக்கு உட்பட்டு அவற்றை மாணவர்களும் பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு போகட்டும் என்று ரொம்பவும் விட்டுக் கொடுத்தே சொல்கிறேன்! இதிலே ஆபத்து என்ன என்றால், கொஞ்சம் அதில் பிரவேசித்தாலே அது போதைப் பொருள் மாதிரி மேலே மேலே இழுத்துக் கொண்டு போவதுதான்.
போதைப் பொருள் என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டேன். இப்படி காபி, ஸிகரெட்டில் ஆரம்பித்துப் பல இருக்கின்றன. இவை மாணவர்களுக்கு ஒருநாளும் கூடவே கூடாது. பொதுஸேவை, ஸினிமா ஆகியவற்றில் நான் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் சொன்னது மாதிரி இங்கே ‘ரிலாக்ஸ்’ பண்ணுவதற்குக் கொஞ்சம்கூட இடமில்லை. நல்லதற்கே இல்லாத காபி, ஸிகரெட், இன்னும் நான் வாய்விட்டுச் சொல்லப் பிரியப்படாத போதை வஸ்துக்கள் ஆகியவற்றின் பக்கமே மாணவர்கள் போகப்படாது.*
*Drugs எனும் போதை வஸ்துக்கள் பரவலாக ஆகாத காலத்தில் கூறியது.
அடுத்த இழுப்பு பத்திரிகைகள். உணர்ச்சிகளைக் கிளறிவிட்டுப் பரபரப்பூட்டுகிறதாகவே தற்காலத்தில் பெரும்பாலான பத்திரிகைகள் இருப்பதாகத் தெரிகிறது. பத்திரிகைகள் ஆத்ம ஸம்பந்தமாகவும், கலாசார விஷயமாகவும், லோக நலனுக்கானதாகவும், அறிவை விருத்தி செய்வதாகவும் எவ்வளவோ சிறப்பான விஷயங்களை விநியோகிக்கமுடியும். ஆனால் நடைமுறை இதற்கு ரொம்பவும் மாறுபட்டிருப்பதாகவே தெரிகிறது. நல்லதற்கில்லாத விஷயங்களில் யுவர்களைக் கவரும் படியாகவே அவற்றில் பல விஷயங்கள் வருவதாகவும் பார்க்கிறேன்.
அப்படியிருக்கிம்போது நல்லதையே பொறுக்கியெடுத்து selective reading என்று மாணவர்கள் படிப்பது சிரமம்தான். சிரமம் என்பதால் விட்டுவிடக்கூடாது. இந்த வயஸில் பிடிவாத குணம் என்பது பலமாக இருக்கிறதல்லவா? அந்தப் பிடிவாதத்தையே நல்ல வழியில் ‘சானலைஸ்’ செய்து, ஸினிமா, பத்திரிகை ஆகியவற்றின் விஷயத்தில் நல்லதில் மட்டுமே ஈடுபடுவது என்று ஒரே பிடியாக இருக்கவேண்டும். சொல்வது ஸுலபம், செய்வது கஷ்டம் என்பது எனக்குத் தெரியாமலில்லை. ஆனால் மாணவர்கள் இன்றைக்குப் படிப்பில் உருப்படவும், நாளைக்கு உலகத்தில் ஸத் பிரஜைகளாக உருவாகவும் இந்தக் கஷ்டத்தை ஸாதித்தேயாகவேண்டும் என்பதாலேயே சொல்கிறேன். எனக்கே, அவர்களை நினைத்தால், நாலா திசைகளிலும் பலவித தப்பான forceகள் அவர்களைப் போட்டு இழுப்பதை நினைத்தால், பாவமாகத்தான் இருக்கிறது. ஸ்வாமியிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
கடைசியாக ஸ்போர்ட்ஸுக்கு வருகிறேன். ஆனால் அதுதான் இப்போது அநேக மாணவர்களுக்கு முதலாவதாக இருப்பதாகத் தெரிகிறது. மாணவர்களுக்கு விளையாட்டு ரொம்பவும் அவசியம்தான். தேக பலத்தை விருத்தி செய்து கொள்வது, ஸந்தோஷமாகத் துள்ளிக் கொண்டு விளையாடி வேலையின் அலுப்பையும் வாழ்க்கையின் சலிப்பையும் போக்கிக் கொள்வது, ‘டீம் ஸ்பிரிட்’ என்பதாக ஒரு கட்டுப்பாட்டில் ஒன்றுபட்டு உழைப்பது – என்றிப்படிப் பல நல்ல அம்சங்கள் விளையாட்டில் இருக்கிறது. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அம்ருதமே நஞ்சாகும் என்று வசனம் இருக்கிறதே! அப்படித்தான் இப்போது ஆகியிருப்பதாக தெரிகிறது.
Sense of proportion – விகிதாசாரப் பாகுபாட்டு உணர்ச்சி – என்று ஒன்று சொல்வார்கள். அதாவது எது எதற்கு எவ்வளவு இடம் என்று நிர்ணயமாகப் பாகுபடுத்திக் கொண்டு அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். அப்படி தினமும் அரை மணி, ஒரு மணி விளையாட வேண்டியதுதான். அதற்கு மேல் அதையே ஸதா கால சிந்தனையாக்கிக் கொண்டுவிடக் கூடாது.
இப்போது யுவர்கள் விளையாடுவதைவிட அதிக நேரம் பெரிய பெரிய விளையாட்டுப் போட்டிகளில் பிற ஆட்டக்காரர்கள் – ஸ்போர்ட்ஸ்மென் என்கிறார்கள் – கலந்து கொண்டு ஆடுவதைப் போய் நேரில் பார்ப்பதிலோ, அல்லது அதைவிடப் பல மடங்கு நேரம் அதைப் பற்றிய ‘கமெண்டரி’ கேட்பதிலோ, பத்திரிகைகளில் sports column படிப்பதிலோதான் செலவழிக்கிறார்கள். நாள் கணக்கில், வாரக் கணக்கில், தினந்தோறும் மணிக் கணக்கில் இப்படியே செலவிடுகிறார்கள் என்று கேள்விப்படும்போது, ‘ஐயோ, பொன்னான நேரத்தை இப்படி விருதா செய்யவா?’ என்றுதானிருக்கிறது. ‘டைவர்ஷன்’ வேண்டுமென்றால் ஏதோ கொஞ்சம் பார்க்கட்டும், கேட்கட்டும், படிக்கட்டும். ஆனால் பரீக்ஷையைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டிருக்கிற போதுகூட ‘கமெண்டரி’யில் முழுகுவது என்றால் அது புத்திசாலிகள் செய்கிற காரியமாகவே இல்லையே! நம்முடைய மாணவர்கள் அப்படிப்பட்ட (புத்திசாலிகளல்ல என்கிற) பட்டம் பெறலாமா என்று இருக்கிறது.