பழங்காலக் கல்விக்கூடங்கள்

பழங்காலக் கல்விக்கூடங்கள்

மொத்தத்தில் யௌவனப் பருவம் என்பது ஒன்றுக்கொன்று ரொம்பவும் எதிரெதிரான சக்திகளின் போராட்டமாகவே இருக்கும்படியாக இக்காலத்தில் ஆகியிருக்கிறது. இந்தப் பருவத்தில்தான் வேகம், துடிப்பு கட்டுக்கடங்காமல் பெருகுவது. ஆனாலும் இதே சமயத்தில்தான் ரொம்பவும் கட்டுப்பாடாக இருக்க வேண்டியும் இருக்கிறது. பழங்காலத்தில் பாலப் பிராயம் ஆகி, ஏழெட்டு வயஸிலேயே குருகுலம் என்று கொண்டுவிட்டார்கள். அந்தச் சின்ன வயசிலிருந்தே குருவின் வீடு, கல்விக்கூடம், இரண்டுமாக இருந்த குருகுலத்தில் வீட்டின் ஸ்வதந்திரம் கொஞ்சமும், கல்விக்கூடத்தின் கண்டிப்பு நிறையவுமாக இருந்த ’ஸெட்-அப்’பில் சிறுவர்கள் வளர்ந்து பழகியதால், வாலிப தசை வரும்போதும் ஒரு கண்டிப்பின் கீழ் கட்டுப்பட்டிருப்பது தன்னியற்கையாக ஸாத்யமாயிருந்தது. இப்போதோ அஸ்திவாரப் பிராயமான அந்தச் சின்ன வயசில் ஸ்வக்ருஹத்திலே – சொந்த வீட்டிலே – ஒரே ஸ்வதந்திரமாக அடங்காமலிருப்பதும், அதனாலேயே அதற்குத் தனியாக உள்ள கல்விக்கூடத்திலும் அதே போக்கில் போய், கட்டுப்பாட்டுக்கு உடன்படாமலிருப்பதுமாக இருக்கும் நிலவரம் ஏற்பட்டிருக்கிறது.

ஸொந்த வீட்டுக்கும் குருகுலத்துக்கும் உள்ள அடிப்படையான வித்யாஸத்தால் இப்படிக் கோளாறாக நடக்கிறது. ஸொந்த வீட்டில் அப்பா-அம்மாவிடம் ரொம்பவும் ஸ்வாதீனம் கொடுத்துப் போகிறது. அவர்களும் வாத்ஸல்யத்தின் மீது செல்லம் கொடுப்பதில் போதிய அளவு கண்டித்து வளர்ப்பதில்லை. குருகுலத்தில் அப்படியில்லை. குரு அவச்யமான அளவுக்கே ப்ரியம் காட்டி, உரிய அளவுக்குக் கண்டிப்பு செய்பவர். அகத்தில் கண்டிப்புப் போதாமல் பள்ளிக்கூடத்தில் மட்டும் கண்டிப்பு என்று வரும் போது பசங்களுக்கு முரண்டு பிடிக்கத்தான் தோன்றும். இப்படியாக அஸ்திவாரப் பிராயத்தில் கட்டுப்பட்டுவிட்டால் அந்த தோஷம் அடுத்ததான காளைப் பருவம் என்றே சொல்லப்ப்டுகிற வாலிப தசையில் நன்றாகவே தலைக்கேறத்தானே செய்யும்?