கட்டுப்பாடு தேவை
குருகுலவாஸ முறையைத் தற்போது சொல்லி என்ன ப்ரயோஜனம்? நடைமுறை ஸாத்யமில்லாத ஒன்றுக்காக மனப்பால் குடிப்பதாகத்தான் அது ஆகும். கறிக்குதவாத ஏட்டுச் சுரைக்காய்தான் இப்போது அதைப் பற்றிப் பேசுவது.
ஆனாலும் அது இல்லாத பெரிய குறையினால் ஏற்பட்டுவிட்ட காளைப் பருவ ஸ்வாதந்த்ரியத்தைப் போக்குவதற்கு ஏதாவது பண்ணித்தான் ஆகவேண்டும். கட்டுப்பாடில்லாத காளை எல்லாரையும் முட்டிவிட்டுத் தானும் அடி, சூடு வாங்காமலிருக்க ஏதேனும் பண்ணித்தானாக வேண்டும்.
ஆனபடியால், எப்படியோ ஒரப்படி இந்தக் காளைக்கு மூக்கணாம் கயிறு போட்டாகவேண்டும். அப்போதுதான் அது தனக்கும் உபயோகமாக, மற்ற பேருக்கும் உபயோகமாக உருவாக முடியும்.
மிருக ஜாதிக்காளைக்கு வேறு மநுஷ்யர்கள்தான் மூக்கணாங்கயிறு போட வேண்டும். மநுஷ்ய ஜாதிக் காளைக்கும் கல்விக்கூடத்து ஆசிரியர்களும் வீட்டுப் பெரியவர்களும் அப்படிப் பண்ண வேண்டும்தான். ஆனால் அப்படி மட்டுமே முடித்துவிட்டால் இந்தக் காளை மநுஷ்ய ஜாதியாக இருப்பதற்கு அழகில்லை, கௌரவமில்லை. மநுஷ்ய ஜன்மா எடுத்ததற்கு அழகு, இந்தக் காளை ஸ்வயமாகத் தானேயும் கட்டுப்பாடு, அடக்கம் என்ற மூக்கணாங்கயிற்றைப் போட்டுக்கொள்வதுதான். தனக்கு மற்றபேர் மூக்கணாங்கயிறு போடும்போதும் முரண்டு பிடிக்காமல், இஷ்டப்பட்டு அதற்கு காட்டிக்கொண்டு நிற்க வேண்டும்.