கோமாதாவும் பூமாதாவும் ஜனக மாதாவும், கோமாதாவும் பாலைச் சுரக்கிற மாதிரி, தானியங்கள், (உ)லோஹங்கள், தாதுக்கள் ஆகிய வளங்களையும், இவை எல்லாவற்றுக்கும் ம

கோமாதாவும் பூமாதாவும்

ஜனக மாதாவும், கோமாதாவும் பாலைச் சுரக்கிற மாதிரி, தானியங்கள், (உ)லோஹங்கள், தாதுக்கள் ஆகிய வளங்களையும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீர்வளம் என்பதையும் பூமி சுரக்கிறது. அதனால் தான் பூமாதா என்பது. பசுத்தாய் என்பது போல் புவித்தாய்.
மிருகமாகத் தெரிகிற பசு, ஜடமாகத் தெரிகிற பூமி ஆகிய எல்லாவற்றிலும் உயிருள்ளதும் அன்பே உருவமானதுமான மாத்ருத்வத்தை – தாய்த் தத்துவத்தை – கண்டு கொண்டு நம்முடைய முன்னோர்கள் கோமாதா என்றும் பூமாதா என்றும் சொன்னார்கள்.
பூமாதாவே கோமாதாவாக உருக்கொண்டதும் உண்டு. த்வாபரயுகம் முடிகிற நிலைக்கு வந்து, கலியுகம் ஆரம்பிப்பதற்கு முந்தைய ஸமயம். லோகத்திலே துஷ்ட அரசர்களின் ரூபத்தில் அஸுர சக்திகள் தலையோங்கிய அப்போது பூமாதேவியால் அந்தப் பாப பாரத்தைத் தாங்க முடியவில்லை. அப்போது பூமாதேவியும், அவளுடைய சார்பிலே பிரம்மாவும் மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டு பிரார்த்தித்துக் கொண்டதன் மேல்தான் பகவான் க்ருஷ்ணாவதாரம் பண்ணினார். அந்த ஸமயத்திலே தன்னுடைய முறையீடு பகவானுடைய மனஸைத் தொட்டு இறக்கி அவரை ரக்ஷணத்துக்கு வரும்படிப் பண்ண வேண்டுமானால் தான் அவருடைய பத்னியான பூமாதேவி ரூபத்திலில்லாமல் அதைவிட ப்ரியத்துக்கும் பரிவுக்கும் உரிய தாயான கோமாதா ரூபத்தில் இருந்தால்தான் முடியும் என்பதால் பூமாதாவே கோமாதாவாக உருவம் எடுத்துக்கொண்டுதான் போனாள் என்று புராணக்கதை இருக்கிறது. அதற்கேற்கத்தான் பகவான் கோபாலனாகப் பிறந்து, அந்த அவதாரத்தில் கோக்களோடு அத்யந்தமாக உறவாடினார்.
கோ’ என்றாலே பூமி என்றும் ஒரு அர்த்தம்.
க்ருஷ்ணர் பூர்ணாவதாரம். அம்சாவதாரம் என்பதாக பகவான் தன்னுடைய ஓரொரு அம்ச கலையை மட்டும் வெளிப்படுத்தியும் அவதாரங்கள் நிகழ்த்தியதுண்டு. பாகவதத்தில் சொல்லியிருக்கிற கணக்குப்படி பகவானுக்கு இருபத்து நாலு அவதாரங்கள். அந்த இருபத்து நாலில் நம் எல்லோருக்கும் தெரிந்த தசாவதாரங்கள் போக பாக்கியிருக்கிற பதினாலு பேரும் அம்சாவதாரங்கள். அப்படி பகவானின் அம்ச அவதாரங்களாக இருந்தவர்களில் ப்ருது என்கிற சக்ரவர்த்தியும் ஒருத்தர். அவர்தான் லோகத்தில் நாடு, நகரம் என்ற அமைப்புகளை முறைப்படி ஏற்படுத்தியவர். அவர் பூமாதாவையே கோமாதா ரூபத்தில் கண்டு அந்த பசுத்தாயிடமிருந்து அவரவர்களும் தங்கள் தங்களுக்கு இஷ்டமான ஸம்பத்துக்களை தங்கள் தங்கள் ஸ்வதர்மம் என்ற கன்றைக் கொண்டு கறந்து கொள்ளச் செய்தார் என்று பாகவதத்தில் சொல்லியிருக்கிறது.*
*4.18
கோ ரூபத்தில் பகவானுக்கு எத்தனை ப்ரீதி என்பதற்காகச் சொன்னேன். கோவுக்கும் அவரிடத்தில் அதேபோல ப்ரீதி. வேணுகோபாலனாக பகவான் இடது பாதத்தை பூமியில் ஊன்றிச் செங்குத்தாக வைத்துக் கொண்டிருக்கும்போது தாமரை மாதிரியான அவருடைய உள்ளங்காலை ஒரு கோ நக்கிக் கொண்டிருக்கும். சித்ரங்களில் அப்படியே போட்டிருக்கும்.