கோமாதா, பூமாதா, ஜனக மாதா மாதிரியே ஸ்ரீமாதா என்று ஒரு மாதா. மற்ற மூன்று மாதாக்களுக்கும், அவர்கள் மாத்திரமல்லாமல் லோகத்திலுள்ள ஸகல மாதாக்களுக்கும், மாதா-பிதா-பத்னி-குழந்தை முதலிய ஸகல உயிரினங்களுக்கும், உயிரில்லாத அசேதனங்கள் அத்தனைக்குங் கூட மூலகாரணமாயிருக்கிற தாயான பராசக்தியே ஸ்ரீமாதா. அவளிடமிருந்து சுரக்கிற அருட்பாலால்தான் நம்முடைய ஜனகமாதாவுக்கும், கோமாதாவுக்கும் பால் சுரப்பது; அந்த அருட்பாலால்தான் பூமாதா தான்ய வளமும் நீர்வளமும் சுரப்பதும்.
அந்த ஸ்ரீமாதாவுக்கே கோமாதா என்பதையும் ஒரு பெயராக லலிதா ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. ஸஹஸ்ரநாமத்தில் முதல் நாமாவே ‘ஸ்ரீமாதா’ என்பது. உள்ளே அந்த நாமாவளியில் ‘குருமூர்த்தி:, குணநிதி:, கோமாதா’ என்று வருகிறது. ஞானப் பாலூட்டும் ‘குரு மூர்த்தி’யாகவும் ஸகல கல்யாண குணமாக இருந்து கொண்டு அருட்பாலூட்டும் ‘குணநிதி’யாகவும் அம்பாளுக்குப் பெயர்கள் சொன்ன கையோடு ‘கோமாதா’ என்று சொல்லியிருப்பது விசேஷம். ஸ்ரீமாதாவான அம்பாள் வாஸ்தவமாகவே தேரழுந்தூரில் கோமாதாவாக வந்ததாக அந்த ஊர் ஸ்தல புராணத்தில் இருக்கிறது. அப்போது ரொம்பவும் பொருத்தமாக, கோபாலக்ருஷண மூர்த்தியாகப் பிற்காலத்தில் வந்த அவளுடைய ஸஹோதரரான மஹாவிஷ்ணுவே பசு ரூபத்திலிருந்த அவளை ஸம்ரக்ஷித்தாரென்றும், அப்புறம் கோபாலரான அவர் பசுபதியான பரமேச்வரனுக்கு அவளைத் திருமணஞ்சேரியில் கன்யாதானம் செய்து கொடுத்தாரென்றும் ஐந்தாறு ஸ்தல புராணங்களை ஒன்றாக இணைத்துக் கதை இருக்கிறது.*
*கதை விவரத்திற்கு ‘தெய்வத்தின் குரல்’, இரண்டாம் பகுதியில், ‘புராணம்’ என்ற உரையில் ‘பல வரலாறுகளிடையே தொடர்பு’ எனும் பிரிவு பார்க்க.
ஸ்ரீமாதாவும் கோமாதாவும் கோமாதா, பூமாதா, ஜனக மாதா மாதிரியே ஸ்ரீமாதா என்று ஒரு மாதா மற்ற மூன்று மாதாக்களுக்கும், அவர்கள் மாத்திரமல்லாமல் லோகத்திலுள்
ஸ்ரீமாதாவும் கோமாதாவும்