உதாஹரணமாக அது தரும் பாலையே எடுத்துக் கொள்வோம்.
லௌகிகமாகத் தெரிவது, அத்தனை ஆஹார தினுஸுகளுக்குள்ளும் பசும்பால் ஒன்றுதான் ஒரு மநுஷ்யன் ஜீவிப்பதற்குத் தேவையான ஸகல ஊட்ட ஸத்தும் கொடுத்து complete food – பூர்ண ஆஹாரம் – என்று சொல்லும்படியாக இருக்கிறது. ஸாதாரணமாக, இப்படிப்பட்ட புஷ்டி ஊட்டுகிற வஸ்து என்றால் அது ஜீர்ணிப்பதற்கு ஸுலபமாக இருக்காது. ஆனால் பாலோ பச்சைக் குழந்தையும் ஸரி, பல்லு போன கிழவரும் ஸரி எளிதில் ஜீர்ணித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. மிகவும் பலஹீனமான நோயாளிக்கும் உரிய ஆஹாரமாக அது இருக்கிறது.
அலௌகிகமான வைதிகப் பார்வையில் பார்த்தாலோ அந்தப் பாலுக்கே ஸத்வ குணத்தை அபிவிருத்தி செய்கிற தன்மை இருக்கிறது. அலௌகிகம் தான் என்றாலும் இதை வெறும் நம்பிக்கையின் மேல் மட்டும்தான் ஏற்கவேண்டுமென்றில்லாமல், வெறும் க்ஷீர பானம் மாத்திரமே ஆஹாரம் என்று வைத்துக் கொண்டிருக்கும் ஸாதுக்கள் எவ்வளவு ஸாத்வீகமாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது வைதிகமான அலௌகிகத்துக்கே லோகத்தில் ப்ரதயக்ஷ நிரூபணமும் பெற முடிகிறது.
‘கோமாதா’ என்று அம்பாளுக்கு நாமா சொன்னதற்கு முந்தி ‘குருமூர்த்தி’, ‘குணநிதி’ என்ற நாமங்கள் வருகின்றன. ஞானியான ‘குருமூர்த்தி’யாக, ஸத்வகுண ஸம்பன்ன ‘குணநிதி’யாக ஒருவரை உருவாக்கும் அநேக அம்சங்களில் ஆஹார சுத்தியும் ஒன்று. அப்படிப்பட்ட சுத்தமான ஆஹாரமாகப் பால் இருக்கிறது.
இதிலே ஒரு வேடிக்கை. சாக போஜனம் என்பதாகத் தாவர வர்க்கத்திலிருந்து பெறாமல், ஜீவஜந்துக்களிடமிருந்து பெறுகிற ஆஹார வகைகள் பொதுவாக ஸத்வ குணத்துக்கு ஹானி உண்டாக்கி ராஜஸ, தாமஸ குணங்களை வ்ருத்தி செய்வதாகவே இருக்கும். ஸத்வம்-ஸாத்விகம் என்றால் மனம் தெளிந்து சாந்தமாகவும் அன்பாகவும் இருப்பது. பரபரப்பு, படபடப்பு இல்லாமலிருப்பது. அதே ஸமயத்தில் ஓய்ந்துபோய்த் தூங்கி விழாமல் நல்ல விழிப்புடனும் இருப்பது. ரஜஸ்-ராஜஸம் என்றால் காம க்ரோதாதி மோதல்களில் துடித்துக்கொண்டு பரபர, படபட என்று பரப்பது. தமஸ்-தாமஸம் என்றால் எதிலும் ஊக்கம், உத்ஸாஹம் இல்லாமல் ஓய்ந்துபோய் தூங்கி வழிந்து கொண்டு மந்தமாக இருப்பது. இந்த மந்த நிலையில் உசந்த மனோபாவங்கள் எழும்பாமல் காமக்ரோதாதிகள் உள்ளே முளை விட்டுக் கொண்டுதான் இருக்கும்; வெளியிலேதான் அவை துடிப்பாக வராமலிருக்குமே தவிர உள்ளே அசுத்தம்தான். ஸத்வம் மட்டுந்தான் சுத்தம். ரஜஸ், தமஸ் இரண்டும் அசுத்தம்.
ஒரு ஜீவ ஜந்துவிடமிருந்து பெறுகிற ஆஹார வஸ்து என்றால் அது ராஜஸ-தாமஸப் போக்குகளை உண்டாக்குவதே பொது இயல்பு. பசும்பால் ஜீவஜந்துவிடமிருந்து பெறுகிறதுதான். அது ரத்தத்துக்கே ஸமானம். அப்படிப்பட்ட ஒன்றை ஆஹாரம் பண்ணுவது ஸத்வ குணாபிவ்ருத்திக்கு ஹானி உண்டாக்குவதாக இருக்கும் என்பதோடு, அஹிம்ஸா போஜனத்துக்கும் விரோதமானதாகத் தோன்றுகிறது. ஆனால் நம்முடைய சாஸ்த்ரங்களோ அஹிம்ஸையையே பரம தர்மமாகக் கொண்டவனும், மனம், குணம் என்பவை அறவே அற்றுப் போகாமல் இருந்து கொண்டிருக்கிற வரையில் பரம ஸாத்விகனாகவே இருக்கவேண்டியவனுமான ஸந்நியாஸிக்கும் கோ க்ஷீர பானத்தை அநுமதித்திருக்கின்றன. ரக்த மாம்ஸம் என்றே தள்ளத்தக்க ஒன்றும் பரம பரிசுத்தத்தை உண்டாக்குவதாகப் பசுவிடம் இருக்கிறதென்றால் அது எப்பேர்ப்பட்ட தெய்வத்தன்மை பெற்றதாக இருக்க வேண்டும்?
பசும்பால் : முழு உணவு, ஸத்வ அபிவிருத்தி உதாஹரணமாக அது தரும் பாலையே எடுத்துக் கொள்வோம் லௌகிகமாகத் தெரிவது, அத்தனை ஆஹார தினுஸுகளுக்குள்ளும் பசும்ப
பசும்பால் : முழு உணவு, ஸத்வ அபிவிருத்தி