திருவள்ளுவரின் உதாஹரணம்
தமிழை வளர்த்துக் கொடுத்தவர்களில் திருவள்ளுவரை மிஞ்சி ஒருத்தருண்டா? அவர் முதல் குறையே எப்படிப் பாடிக்கொடுத்திருக்கிறார்?
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
என்று தானே பாடியிருக்கிறார்? அதிலேயே ஆதி, பகவன்,உலகு என்று மூன்று ஸம்ஸ்க்ருத வார்த்தைகளைப் போட்டிருக்கிறார். 'உலகு' என்பது 'லோகம்' என்கிற ஸம்ஸ்க்ருதப் பதத்திலிருந்தே வந்தது. 'லோகம்' என்றால் நம்மால் நமக்கு வெளியிலே 'பார்க்கப்படுவது'. இங்கிலீஷ் 'லுக்'கும் அந்த தாதுவிலிருந்து வந்ததுதான். பார்க்கிற இந்த்ரியமான கண்ணுக்கு 'லோசனம்' என்று பேர் இருப்பதும் இந்தத் தாதுவின் அடியாகத்தான். 'லேபாக்' - 'பார்க்கப்படுவது' என்கிற அதே அடிப்படையில் தமிழ்ப் பேராகவே உலகத்துக்கு உள்ள வார்த்தை 'பார்'. 'வையம்', 'வையகம்' என்பதும் லோகத்துக்கு ஒரிஜினலான தமிழ்ப் பெயர். 'ஆதி பகவன் முதற்றே உலகு' என்பதற்குப் பதில் 'பழங் கடவுள் முதற்றே வையம்' என்று திருவள்ளுவர் தாராளமாகப் பாடியிருக்கலாம். 'மீட்ட'ரும் ஸரியாகவே இருந்திருக்கும். அப்படியிருந்தும், விசால மனஸ் படைத்த அந்தப் பெரியவர் பாஷா வித்யாஸங்களைப் பார்த்துக் கொண்டிருக்காமல் தம்முடைய நூலை ஆரம்பிக்கிற கடவுள் வாழ்த்தின் முதல் குறளிலேயே மூன்று ஸம்ஸ்க்ருத வார்த்கைளைப் போட்டிருக்கிறார். அவருடைய பெயரை எப்போதும் முழக்கிக் கொண்டிருக்கிற தமிழ் அன்பர்கள், தங்களுடைய அன்பு, தாங்கள் பெரிதாகச் சொல்லிக் கொள்கிற பகுத்தறிவோடு சேர்ந்திருக்க வேண்டுமானால் அவர் காட்டும் வழிப்படிதான் போகவேண்டும். திருவள்ளுவர் வாழ்த்துகிற அந்தக் கடவுள் - ஆதி பகவன் - தான் இந்த மனப்பான்மையை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.