பசு காத்தலே பாரினைக் காத்தல் லோக க்ஷேமத்துக்கு முதுகெலும்பாயிருப்பது வேதம், அந்த வேதத்துக்கு முதுகெலும்பு வேள்வி வேள்விக்கு முதுகெலும்பாய் இரு

பசு காத்தலே பாரினைக் காத்தல்

லோக க்ஷேமத்துக்கு முதுகெலும்பாயிருப்பது வேதம், அந்த வேதத்துக்கு முதுகெலும்பு வேள்வி. வேள்விக்கு முதுகெலும்பாய் இருப்பது அதைச் செய்கிற கர்த்தாவும், அதில் ப்ரதான த்ரவ்யமாயிருக்கிறவற்றைக் கொடுக்கிற கோவும்தான். ஆகவே முடிவாக லோகம் வாழவே முதுகெலும்பாயுள்ள இரண்டில் ஒன்று கோ என்றாகிறது. அதனால்தான் ‘கோரக்ஷணமே பூரக்ஷணம்’. ‘பசு காத்தலே பாரினைக் காத்தல்’ என்கிறது. அந்தக் காரணத்தினால் தான் லோகம் முழுதும் நன்றாக இருக்கவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறபோது முதலில் கோவையும், அப்புறம் யஜமானனையும் தனிப்படச் சொல்லிவிட்டு, அப்புறமே ஸமஸ்த லோகத்துக்கும் ஸௌக்யத்தை வேண்டுவது:
கோ-ப்ராஹ்மணேப்யோ சுபமஸ்து நித்யம்
லோகா: ஸமஸ்தா: ஸுகிநோ பவந்து
எத்தனையோ ப்ராணிகள் இருக்கும்போது கோவையும், பல ஜாதிகள் இருக்கும்போது ப்ராம்மணனையும் மட்டும் பிரித்துச் சொன்னதற்குக் காரணமே அந்த இருவருந்தான் அத்தனை ப்ராணிகளும், அத்தனை ஜாதி ஜனங்களும் க்ஷேமமாயிருப்பதற்கு உதவுகிற யஜ்ஞ கர்மாவில் விசேஷமாகப் பயன்படுவது என்பதுதான். லோகம் முழுவதும் நன்றாயிருக்கப் பண்ணும் பொருட்டே இந்த இருவரும் – கோவும் ப்ராஹ்மணனும் – நன்றாயிருக்க வேண்டும் என்றே இவர்களை லோகத்திலிருந்து பிரித்துச் சொன்னதே தவிர வேறே பக்ஷபாதம் இல்லை.
இப்படிச் சொன்னது ராமாயண பாராயணத்தின் முடிவிலே சொல்கிற மங்கள ச்லோகங்களில் முதலாவதானதில் வேதத்தையே அநுஸரித்து, அச்வமேதாதி யஜ்ஞங்களைச் செய்துகொண்டு தர்ம ராஜ்யம் நடத்திய ராமசந்த்ர மூர்த்தியின் கதா பாராயணத்துக்கு முடிவிலே வருகிற ச்லோகமானதால் முதலில் லோகத்தை ஆளுகிற ராஜாக்கள் நியாய மார்க்கத்தில் ஆட்சி செலுத்திப் பரிபாலனம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு அப்புறம் கோவின் க்ஷேமம், ப்ராஹ்மணனின் க்ஷேமம், லோக க்ஷேமம் ஆகியவற்றைச் சொல்லியிருக்கிறது.

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம்
ந்யாய்யேந மார்கேண மஹீம் மஹீசா: |
கோ ப்ராஹ்மணேப்யோ சுபமஸ்து நித்யம்
லோகா: ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ||
ராமர்-க்ருஷ்ணர் இந்த தேசத்தின் இரண்டு கண்கள். க்ருஷ்ண பரமாத்மாவிடமும் லோகத்தின் நலனைப் பிரார்த்திக்கும்போது இதே மாதிரி லோக ஹிதத்தைச் சொல்வதற்கு முந்தி கோ, ப்ராஹ்மணன் ஆகியவர்களின் நலனைச் சொல்லியிருக்கிறது:
நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மண ஹிதாய ச |
ஜகத்-ஹிதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம: ||
இப்படி யஜ்ஞத்தைத் தாங்கி தரித்து தூக்கி நிறுத்துபவர்களாக யஜ்ஞ கர்த்தாவான ப்ராஹ்மணன், யஜ்ஞத்துக்கு வேண்டிய த்ரவ்யம் தருகிற கோ என்ற இரண்டு பேர் இருந்தாலும் அந்த இருவரிலும் கோவுக்கே முதலிடம் கொடுத்து, அப்புறமே ப்ராஹ்மணனுக்கு இடம் தந்து ‘கோ ப்ராஹ்மண’ என்று சொல்வதாகவே இருக்கிறது. ராமாயண மங்கள ச்லோகம், க்ருஷ்ண பரமாத்மாவைப் பற்றின ச்லோகம், பொது வசனம் எல்லாவற்றிலுமே ப்ராஹ்மணனைப் பின்னுக்குத் தள்ளி கோவுக்கே முக்யத்வம் தந்து ‘கோ-ப்ராஹ்மண’ என்றே சொல்வதாகயிருக்கிறது.
ப்ராஹமணர்களை பூதேவர், அதாவது தேவலோகத்தில் இல்லாமல் பூலோகத்திலேயே இருக்கிற தேவர்கள் என்பது. வேதத்துக்கே தங்களை அர்ப்பணம் செய்துகொண்டு, லோக க்ஷேமத்துக்காக யஜ்ஞ கர்மாநுஷ்டானங்களைப் பண்ணிக் கொண்டிருக்கும் ப்ராஹமணர்களைத்தான் அப்படிச் சொல்கிறது; தற்காலத்திலிருக்கும், ஸ்வதர்மத்தை விட்டுவிட்ட ப்ராஹமணர்களை அல்ல. இப்படி தேவராகச் சொல்லப்பட்டவர்களுக்கும் முந்தி கோ. ‘தான் கெட்டது போதாதென்று சந்த்ர புஷ்கரணியையும் கெடுத்தான்’ என்கிற மாதிரி, ப்ராஹமணன் வேத ரக்ஷணமான ஸ்வதர்மத்தை விட்டதில் யஜ்ஞ-ஹோமாதிகளுக்கு க்ஷீணம் ஏற்பட்டுவிட்டதால் அவற்றுக்கு நெய், கோமயம் முதலியன தருகிற கோவின் புண்யகார்யமும் தடைப்பட்டு விட்டது!