பசுவுக்கு ஒரு வாயுறை தெய்வமாகப் பூஜை பண்ணுவது இருக்கட்டும் அது சிலர்தான் பண்ண முடியும் ஆனால் எவரானாலும் பண்ண வேண்டிய கடமையாக ஒன்று இருக்கிறது

பசுவுக்கு ஒரு வாயுறை


தெய்வமாகப் பூஜை பண்ணுவது இருக்கட்டும். அது சிலர்தான் பண்ண முடியும். ஆனால் எவரானாலும் பண்ண வேண்டிய கடமையாக ஒன்று இருக்கிறது. கோவுக்கு ஆஹாரம் போடுவதுதான் அது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்குக் கைப்பிடி அளவு புல்லாவது கொடுக்கவேண்டும். ‘கோ க்ராஸம்’ என்று இதை சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது. ‘க்ராஸம்’ என்றால் ஒரு வாய் ஆஹாரம். ‘கோ க்ராஸம்’ என்பதை வைத்துத்தான் புல்லுக்கு இங்கிலீஷில் grass என்று பெயர் வந்திருக்கிறது. திருமூலர் ‘திருமந்திர’த்தில் ப்ரதி தினமும் ஜீவர்கள் செய்யவேண்டிய கடமைகளில், ஈச்வரனுக்கு ஒரு பச்சிலை; அதாவது வில்வ பத்ரமேனும் அர்ச்சிப்பது, ஒரு கைப்பிடியாவது ஆஹாரம் பிச்சை போடுவது ஆகிய இரண்டுக்கும் நடுவில் கோக்ராஸம் கொடுப்பதையும் சொல்லியிருக்கிறார். முடிவாக ஜீவர்களிடம் இனிமையாகப் பேசுவதையும் சொல்லியிருக்கிறார்.

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை,
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை,
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி,
யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரைதானே.