மன்னிக்க முடியாத குற்றம் கறக்கிற காலத்திலும் ஸரி, கறவை நின்றுபோன பிற்பாடும் ஸரி கோமாதாவின் வயிற்றுக்குப் போதிய ஆஹாரம் போடாமல் வாடவிட்டால் அது நமக

மன்னிக்க முடியாத குற்றம்

கறக்கிற காலத்திலும் ஸரி, கறவை நின்றுபோன பிற்பாடும் ஸரி கோமாதாவின் வயிற்றுக்குப் போதிய ஆஹாரம் போடாமல் வாடவிட்டால் அது நமக்குப் பெரிய களங்கம். இந்த விஷயத்தில் நாமெல்லாரும் பெரிய குற்றவாளிகளாக இருக்கிறோம். இதில் நம்முடைய கவனக் குறைவு மன்னிக்க முடியாத தப்பாகும்.

நம் மதத்தில் பசுவுக்குத் தெய்வ ஸ்தானம் கொடுத்திருக்கிற மாதிரி இல்லாத பிற மதஸ்தர்கள் தங்கள் தேசத்தில் வளர்க்கிற பசுக்களையும், நம் தேசத்திலுள்ள பசுக்களையும் பக்கத்தில் பக்கத்தில் நிறுத்தி வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் அவமானப்படும்படியே இருக்கும். மற்ற தேசத்தார் பசுவைத் தெய்வமாக சொல்லாவிட்டாலும், அவர்கள் பசு மாம்ஸம் சாப்பிடுபவர்களாக இருந்தாலும் நடைமுறையில் அவற்றின் வயிற்றுக்கு யதேஷ்டமாகப் போட்டு அவற்றைத் தள தள என்று வைத்துக் காப்பாற்றுகிறார்கள். நாமோ நமக்குப் பால் கொடுப்பதற்காக அதற்கு அதம பக்ஷமாக எவ்வளவு தீனி தேவையோ அவ்வளவே போடுகிறோம். அதனால் பார்வைக்கே அந்நிய தேசத்துப் பசுக்களுக்குப் பக்கத்தில் நம் தேசப் பசுவை நிறுத்தினால் ஸான்டோவுக்குப் பக்கத்தில் சோனி மாதிரி இருக்கிறது. மாம்ஸத்துக்காகவே அவர்கள் பசுவைப் புஷ்டி பண்ணுகிறார்கள் என்று சொல்லி நாம் தப்பித்துக்கொள்ள முடியாது. என்ன காரணத்திற்கானாலும் ஸரி, ஒரு பசுவை உயிரோடு விட்டு வைக்கும் வரை வயிறு ரொம்பப் போடுகிறார்களல்லவா?

பசுவைப் புஷ்டியாக வைத்துக் காப்பாற்றுவதற்கானவற்றைச் செய்யாமல் பசுவதையைச் சட்டத்தின் மூலம் தடுக்க வேண்டும் என்று நாம் வெறுமனே முழக்கிப் பிரயோஜனமில்லை. பசுவதையை ஆதரிப்பவர்கள் நாம் வைத்திருக்கும் கறவை நின்றுபோன கோக்களைக் காட்டி, ‘இப்படி இவற்றை எலும்பும் தோலுமாக, குற்றுயிரும் குலை உயிருமாக வைத்திருப்பதைவிட ஒரேயடியாக ஹத்தி செய்து விடுவது அவற்றுக்கே விமோசனந்தானே?’ என்று கேட்டால் நாம் வாயைத் திறக்க யோக்யதையில்லாத நிலையாகத்தான் இப்போது இருக்கிறது.