பசுக்களை வயிறு வாடாமல் ரக்ஷிப்பதற்கு நம்மில் அத்தனை பேரும் ஏதோ ப்ரமாத த்யாகம் பண்ண வேண்டும், ச்ரமப்பட வேண்டும் என்றுகூட இல்லை. பசுவுக்காக எவ்வளவு த்யாகம் பண்ணினாலும் தகும், ச்ரமப்பட்டாலும் தகும் என்பதும் வாஸ்தவம். அப்படிச் சில பேரோ, பல பேரோ புறப்பட்டால் பாராட்ட வேண்டியதுதான். ஆனால் எல்லோரும் அவ்வளவு தூரம் போகாமல் ஒரு சின்ன விஷயத்தைக் கவனித்தாலே போதும், எத்தனையோ கோக்களின் வயிறு நிறைந்துவிடும். அதாவது நாம் தினமும் சாப்பிடும் கறிகாய்களில் உதவாதது என்று சீவித் தள்ளுகிற மேல் தோலியெல்லாம் கோவுக்கு ஆஹாரமாகப் போடும்படித் தக்க ஏற்பாடு செய்துவிட்டாலே எத்தனையோ பசுக்களின் வயிறு ரொம்பும். தினந்தோறும் வீட்டுக்கு வீடு கறிகாய்கள் நறுக்குகிறோம். ஹாஸ்டல்களிலும் ஹோட்டல்களிலும் நூற்றுக் கணக்கானவர்கள் சாப்பிடுவதால் ஏராளமாகக் கறிகாய்கள் நறுக்கப்படுகின்றன. நறுக்கும்போது ‘வேஸ்ட்’ என்று மேல் தோலிகளை குப்பைத் தொட்டியில் கொட்டி, தோட்டிகளுக்கு அவற்றை சுத்தப்படுத்தும் வேலையை வைக்கிறோம். இதற்குப் பதில் ஒவ்வொரு வீட்டிலும், ஹாஸ்டல், ஹோட்டல் போன்ற இடங்களிலும் கறிகாய்த் தோலியைப் போட்டு, ஈ, எறும்பு வராமல் மூடி வைக்கும்படியாகத் தனியாகத் தொட்டி வைத்திருக்கவேண்டும். இவற்றை வீட்டுக்கு வீடு சேகரித்துப் பசுவின் வயிற்றுக்குக் கொண்டு சேர்ப்பதற்கென்றே தொண்டர்கள் திரளவேண்டும்.
இதிலே அப்படியென்ன கிடைத்துவிடப் போகிறது என்று அலக்ஷ்யமாக நினைக்க வேண்டாம். நாம் கோடானுகோடிப் பேரில் ஒவ்வொருவரும் கறிகாய் சேர்த்துக் கொள்கிறோமாதலால், வீட்டுக்கு வீடு தோலி சேகரிப்பு என்றால் மொத்தத்தில் போர் போராகக் குவியும். ஹாஸ்டல், ஹோட்டல்களில் சேர்வதைக் கேட்கவே வேண்டாம். ஜனத்தொகையின் விகிதத்தோடு பார்த்தால் பசுவின் ‘பாபுலேஷன்’ ரொம்பக் குறைச்சலாகவே இருக்கும். அப்படிப்பட்ட பசுக்களிலும் நல்ல முறையில் பண்ணைகளிலும், ஸௌகரிய தசையிலுள்ள சொந்தக்காரர்களின் வீடுகளிலும் பராமரிப்பு பெறுகிறவற்றிற்கு நாம் எதுவும் செய்ய வேண்டுமென்பதில்லை. கசாப்புக் கடைக்கும் இறைச்சிக் கூடத்துக்கும் போகக்கூடிய ஸ்திதியில் இருக்கும் பசுக்களைக் காப்பாற்றுவதுதான் இங்கே நமக்கு முதன்மையான குறிக்கோள். அதில் கணிசமான அளவுக்கு இந்தத் தோலி சேகரிப்பு நமக்கு ஸஹாயம் பண்ணும் என்பதில் ஸந்தேஹமில்லை. சிறுதுளி பெருவெள்ளம். கவனக் குறைவு சிறிதும் இல்லாமல் இந்த ஸுலபமான காரியத்தைச் செய்தால் அந்த வெள்ளத்தைப் பிரத்யக்ஷமாகப் பார்க்கலாம். கோபாலக்ருஷ்ணனின் அருள் வெள்ளத்தையும் பெறலாம்.
கோ ஸம்ரக்ஷணம் நம்முடைய அத்யாவச்யக் கடமையாதலால், இதை நடைமுறை ஸாத்யமில்லாத கார்யம் என்று தள்ளிவிடாமல், சில ச்ரமங்கள் இருந்தாலும் அவற்றைச் சமாளித்துக் கொண்டு, கஷ்ட நஷ்டப் பட்டாவது அவச்யம் இதைச் செய்யவேண்டும். அப்படியொன்றும் கஷ்டமும் நஷ்டமும் பெரிசாக வந்து விடாது. பால் மறுத்த பசுக்களைக் கட்டித் தீனி போட முடியவில்லை என்பதால்தானே அவற்றைக் கசாப்புக் கடைக்கு அனுப்புவது? அப்படித் தாய்த் தெய்வமும், தெய்வத் தாயுமான கோ கொலைக் களத்துக்குப் போகிறதுதான் பெரிய கஷ்டமும் நஷ்டமும். அது நேராமல் பார்த்துக் கொள்வதற்குச் செய்கிற எந்த முயற்சியும் கஷ்ட நஷ்டங்களில் சேராது.
கறிகாய்த் தோல் மாதிரியே சாதம் வடித்த கஞ்சியும் பசுவுக்கு ஆஹாரமானதால் அதையும் சேகரித்துப் பசுக்களுக்குச் சேர்க்கலாம். ஆனால், இப்போது பெரும்பாலான வீடுகளில் குக்கர் சமையல் வழக்கம் வந்து விட்டது. அப்படியில்லாத இடங்களில் இந்தக் கைங்கர்யமும் செய்யலாம். அரிசியை ஜலம் விட்டு அலம்புகிற கழுநீர் என்கிற கழிவு நீருங்கூடப் பசுவுக்கான ஆஹாரம்தான். அதுவும் பசு வயிற்றுக்குப் போகும்படிச் செய்யலாம். செய்யவேண்டும்.
வீட்டுத் தோட்டங்களில் ஒரு சின்ன திட்டில் பசுவுக்கென்றே அகத்திக் கீரை பயிரிடுவது என்று ஏற்பட்டுவிட்டால் அதுவும் கோ வதை நின்று கோ ரக்ஷணம் நடப்பதற்குக் கணிசமான உபகாரம் செய்ததாகும். அகத்திக் கீரையைப் பசு பரம ப்ரீதியோடு சாப்பிடும்.
பகவான் வாஸுதேவனின் வயிற்றுக்கே போடுவதாக நினைத்து இப்படியெல்லாம் எந்த முறையிலேனும் நாம் ஒவ்வொருவரும் பசுக்களை அவச்யம் ரக்ஷிக்கவேண்டும். அந்த உணர்ச்சி வந்துவிட்டால், சிரமமே ஏற்பட்டாலும் அது சிரமமாகத் தெரியாது. மனமிருந்தால் வழியுண்டு. இந்த விஷயத்தில் நிச்சயமாக மனம் இருந்தேயாக வேண்டும். அப்போது வழியும் தானே பிறக்கும்.
கோவின் வயிற்றை நிரப்ப சுலப வழி பசுக்களை வயிறு வாடாமல் ரக்ஷிப்பதற்கு நம்மில் அத்தனை பேரும் ஏதோ ப்ரமாத த்யாகம் பண்ண வேண்டும், ச்ரமப்பட வேண்டும் என்று
கோவின் வயிற்றை நிரப்ப சுலப வழி