முடிவாக ஸகல மக்களும் ஒன்றுகூடி நடத்த வேண்டிய பணி என்னவென்றால் ஒரு பசு கூட வதைக்குப் போகாமல் வயிறு ரொம்பத் தீனி பெறவும், ஸுகாதாரமான கொட்டில்களில் வாஸம் பெறவும் செய்வதுதான். இதற்காகக் கறவை நின்றுபோன பசுக்களுக்கென்றே ஆங்காங்கு காப்பு விடுதிகளை மக்கள் அமைத்துச் செவ்வனே பரிபாலிக்க வேண்டும். கறவை நின்ற பசுக்களை வைத்துக் காப்பாற்ற ப்ரியப்படாமல் இறைச்சிக் கூடத்துக்கு விற்கவிருக்கும் எல்லா சொந்தக்காரர்களிடமிருந்தும் அவற்றை வாங்கி இந்த விடுதிகளில் வைத்துக் காப்பாற்ற வேண்டும். போதிய பண்பாடில்லாத சொந்தக்காரர்களாயிருந்தால் அவர்கள் மாம்ஸ விலையையும் தோல் விலையையும் நினைத்து பேரம் பண்ணக்கூடும். அவர்களுக்குப் பொறுமையாகவும் சாந்தமாகவும் இப்பணியிலுள்ள புண்யம், ஜீவகாருண்யம் இரண்டையும் எடுத்துச் சொல்லி நியாய விலைக்கோ, இலவசமாகவோ விற்கச் செய்ய வேண்டும். பல மாட்டுக்காரர்கள் நிஜமாகவே ஏழைகளாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களிடமிருந்து இலவசமாக எதிர் பார்ப்பதற்கில்லைதான். எப்படியானாலும் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்ற காரணத்துக்காக ஒரு பசுவைக்கூடக் கொலைக் கூடத்துக்குப் போகும்படிப் பண்ணிவிடக்கூடாது. ‘விலைக்கு மாடு வாங்குவது, விடுதி அமைப்பது, தீனி போடுவது என்றால் நிரம்பப் பணம் பிடிக்குமே! அதோடு, ‘மாடோ பாடோ’ என்று கிழமாடுகளைப் பராமரிப்பதென்றால் சரீர உழைப்பும் நிரம்பத் தேவைப்படுமே!’ என்றால், இந்தப் பணியின் முக்யத்வத்தைப் பார்க்கிறபோது பணமும் உழைப்பும் ஒரு பெரிசில்லை.